• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

எவ்வளவு இருந்தாலும் போதாதா? இன்றைய இறைமொழி. திங்கள், 19 அக்டோபர் 2026.

Monday, October 19, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வாழ்வைச் சந்திக்கும் நற்செய்தி
திங்கள், 19 அக்டோபர் 2026
பொதுக்காலம் 29-ஆம் வாரம் – திங்கள்
லூக்கா 12:13–21

 

எவ்வளவு இருந்தாலும் போதாதா?

 

தன் சகோதரருடன் ஏற்பட்ட சொத்துப் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஒருவர் இயேசுவிடம் கேட்கிறார். யாருக்கு எவ்வளவு சொத்து கிடைக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலாக, இயேசு ஆழமான ஒரு கேள்வியை எழுப்புகிறார்: மனித வாழ்வுக்கு நிறைவையும் பாதுகாப்பையும் உடைமைகளால் தர முடியுமா?

 

இயேசு சொல்லும் உவமையில், செல்வர் ஒருவருடைய நிலம் மிகுந்த விளைச்சலைக் கொடுக்கிறது. அவர் செல்வந்தராக இருப்பதோ, எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதோ அவருடைய குற்றம் அல்ல. அவர் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்: என் விளைச்சல், என் களஞ்சியங்கள், என் பொருள்கள், என் எதிர்காலம். அவருடைய சிந்தனையில் கடவுளுக்கும் பிறருக்கும் இடமில்லை.

 

அவருடைய களஞ்சியங்கள் பெரிதாகின்றன. ஆனால் வாழ்க்கையைப் பற்றிய அவருடைய பார்வை சுருங்கிவிடுகிறது.

 

தன்னுடைய செல்வம் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் போதுமானது என்று நினைக்கிறார். ஆனால் அந்த இரவே அவருடைய வாழ்வு முடிவுக்கு வருகிறது.

 

உடைமைகள் நமது வாழ்க்கைக்கு உதவலாம். ஆனால் அவையே வாழ்க்கையின் நோக்கமாக மாறிவிடக் கூடாது என்று இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். நன்றியுடன் பெற்றுக்கொள்வதும், பொறுப்புடன் பயன்படுத்துவதும், தாராளமாகப் பகிர்ந்துகொள்வதுமே கடவுள் முன்னிலையில் செல்வந்தராக வாழ்வதற்கான வழிகள்.

 

இன்றைய அழைப்பு: நமக்கென்று வைத்திருக்கும் ஒன்றை இன்று பிறருடன் பகிர்ந்துகொள்வோம்.

 

இன்றைய கேள்வி: என் உடைமைகளை நான் ஆளுகிறேனா? அல்லது என் உடைமைகள் என்னை ஆளுகின்றனவா?

 

இறைவேண்டல்: ஆண்டவராகிய இயேசுவே, பேராசையிலிருந்து என் உள்ளத்தை விடுவியும். உம்மில் பாதுகாப்பையும், பகிர்தலில் மகிழ்ச்சியையும் காண எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: