• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

உமது மினா. இன்றைய இறைமொழி. புதன், 19 செப்டம்பர் ’25.

Wednesday, November 19, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இறையாட்சி மினாக்கள் உவமை பணியாளர் புரிதல்-செயல்படுத்தாமை எளிதான செயல் சரியான செயல் முயற்சி அச்சம் சீடத்துவத்துவம்

இன்றைய இறைமொழி
புதன், 19 செப்டம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 33-ஆம் வாரம், புதன்
2 மக்கபேயர் 7:1, 20-31. லூக்கா 19:11-28

 

உமது மினா

 

மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் தாலந்து எடுத்துக்காட்டைத் தழுவியது போல இன்றைய நற்செய்திப் பகுதி இருந்தாலும், மத்தேயுவுக்கும் லூக்காவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு:

(1) மத்தேயு நற்செய்தியாளர், ‘தாலந்து’ கொடுக்கப்பட்டதாக எழுதுகிறார். லூக்கா, அதை, ‘மினா’ என்று குறிப்பிடுகின்றார். மினா தாலந்தை விட மதிப்பு குறைவானது.

(2) மத்தேயு நற்செய்தியாளர் ஐந்து, இரண்டு, ஒன்று என்று வெவ்வேறு அளவில் தாலந்துகள் கொடுக்கப்பட்டதாக எழுதுகிறார். லூக்கா நற்செய்தியில், பத்து பேர், ஆளுக்கு ஒரு மினா பெறுகிறார்கள்.

(3) மத்தேயு நற்செய்தியில் வீட்டுத் தலைவர் நெடுந்தொலைவு பயணம் செய்கின்றார். லூக்கா நற்செய்தியில் அவர் அரசுரிமை பெறுவதற்காகச் செல்கின்றார்.

(4) தாலந்துகளைப் பணியாளர்களுக்குக் கொடுக்கின்ற தலைவர் அவர்களுக்கு எந்தவொரு அறிவுரையும் சொல்வதில்லை. ஆனால், மினாக்களைக் கொடுக்கின்ற தலைவர், அவற்றை வைத்து வாணிபம் செய்யுமாறு அறிவுறுத்துகின்றார்.

(5) லூக்கா நற்செய்தியில் மூன்று பேரிடம் மட்டுமே கணக்குக் கேட்கப்படுகின்றது.

(6) மூன்றாவது பணியாளர் மத்தேயு நற்செய்தியின்படி, தாலந்தை மண்ணில் புதைக்கின்றார். லூக்கா நற்செய்தியின்படி, மினாவை கைக்குட்டையில் முடிந்து வைக்கிறார் பணியாளர்.

(7) மத்தேயு நற்செய்தியில் தலைவர் நல்ல பணியாளர்களை வெறும் சொற்களால் பாராட்டுகின்றார். லூக்கா நற்செய்தியில் அவர்களை வாழ்த்துவதோடல்லாமல் உடனடியாக அவர்களை நகரங்களுக்கு மேற்பார்வையாளர் ஆக்குகின்றார்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் சந்திக்கின்ற மூன்றாவது பணியாளர், ‘இதோ! உமது மினா!’ என்று தன் தலைவரிடம் ஒப்படைக்கின்றார்.

 

இவர் செய்த தவறு என்ன?

 

(அ) தலைவரைப் பற்றிய புரிதலைச் செயல்படுத்தாமல் இருக்கின்றார்.

 

தன் தலைவர் கண்டிப்புள்ளவர் என்பதை அறிந்துள்ளார் பணியாளர். ஆனால், அறிதலுக்கேற்ற செயல்பாடு அவரிடம் இல்லை. எடுத்துக்காட்டாக, சர்க்கரை நோய் உள்ளவர் சர்க்கரை எடுத்தல் கூடாது என்பது அறிதல். அறிதலுக்கு ஏற்ற செயல்பாடு இருந்தால்தான் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆக, அறிதல் மட்டும் அல்லாமல் செயலும் இணைந்து நிற்றல் வேண்டும்.

 

(ஆ) எளிதானதைச் செய்கின்றார்.

 

எளிதானதைச் செய்யலாம், அல்லது சரியானதைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, காலையில் நான் எழுந்து உடற்பயிற்சி செய்தால் என் உடல்நலத்துக்கு உகந்தது என உணர்கிறேன். ஆனால், காலையில் மணி அடித்தவுடன் நான் எழாமல் தொடர்ந்து உறங்குகிறேன். அப்படிச் செய்யும்போது நான் எளிதானதைச் செய்கிறேனே அன்றி, சரியானதைச் செய்யவில்லை. மினாவைக் கைக்குட்டையில் முடிந்துகொள்வது எளிது. வியாபாரத்தில் முதலீடு செய்வது சரியானது. அந்த நபர் எளிதானதைச் செய்யவே விரும்புகிறார். ஏனெனில், சரியானதைச் செய்வது அவருக்குக் கடினமாக இருந்தது

 

(இ) புதிய முயற்சிகள் பற்றிய அச்சம்.

 

வியாபாரத்தில் மினாவை இழந்துவிடக் கூடும் எனப் பயப்படுகின்றார் பணியாளர். ஆனால், அதற்கு மாற்றாக வட்டிக்கடை இருப்பதை அவர் மறந்துவிடுகின்றார். யோசிக்கும்போது புதிய முயற்சிகளும், முயற்சிகளுக்கான வழிகளும் பிறக்கவே செய்யும். நம் கதைமாந்தர் கொண்டிருந்த அச்சம் புதிய முயற்சிகளை அவர் கண்களிலிருந்து மறைத்துவிடுகின்றது. இதையே பொருளாதாரத்தில் ‘இழப்பு வெறுப்பு பிழை’ (…) என்கிறார். தன்னிடம் உள்ளதையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் செயல்படாமல் இருப்பது.

 

லூக்கா நற்செய்தியில், இறையாட்சிக்கான நேரடியான உவமையாக இது இல்லை என்றாலும், சீடர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வரையறுத்துக்கொள்ள வேண்டும் எனக் கற்பிக்கின்ற பாடமாக இது இருக்கிறது.

 

ஆண்டவராகிய கடவுள் என்னும் நம் தலைவர் பற்றிய நம் புரிதல் என்ன? நான் எளிதானதையே செய்ய விழைகிறேனா? சீடத்துவத்தில் நான் எடுக்கும் புதிய முயற்சிகள் எவை?

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: