• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

அக ஒளி. இன்றைய இறைமொழி. திங்கள், 20 அக்டோபர் ’25.

Monday, October 20, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

செல்வம் பேராசை உடைமைகள் அக ஒளி தூங்குகின்ற செல்வன் உவமை செல்வந்தன் உழைப்பு உயிர்-ஆன்மா பிறரன்புச் செயல்கள் பகிர்தல் சேர்த்து வைத்தல் தீபாவளித் திருநாள் நம்பிக்கை-அகஒளி

இன்றைய இறைமொழி
திங்கள், 20 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் வாரம், திங்கள்
உரோமையர் 4:20-25. லூக்கா 12:13-21

 

அக ஒளி

 

‘சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கும் உரியதைக் கடவுளுக்கும் கொடுங்கள்’ என்று இயேசு சொன்னதைக் கேள்வியுற்ற, அல்லது கேள்வியுறாத ஒருவர், கூட்டத்தில் இயேசுவிடம், ‘போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்!’ என்கிறார்.

 

ரபிக்களிடம் சொத்து பிரித்தல் பற்றிய பிரச்சனைகள் அன்றைய பாலஸ்தீனத்தில் கொண்டுவரப்படுவதுண்டு. அந்த எண்ணத்தில் தான் இந்த இளவலும் பிரச்சனையை இயேசுவிடம் கொண்டு வருகிறார். ஆனால், பாவம்! ‘இந்த ரபிக்கு, தலைசாய்க்கவும் இடமில்லை!’ என்பது அவருக்குத் தெரியவில்லை. ‘என்னை உங்களுக்கு நடுவராக நியமித்தவர் யார்?’ என்று கேட்கிறார் இயேசு. இதே கேள்வி, மோசேயைப் பார்த்து எகிப்தில், எபிரேயன் ஒருவனால் கேட்கப்படுகிறது: ‘எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்?’ (காண். விப 2:14).

 

அந்த இளவலின் கேள்வியின் பின்புலத்தில், இயேசு, ‘தூங்குகின்ற செல்வன்’ உவமை சொல்லி, மூன்று கருத்துகளை முன்வைக்கின்றார்:

 

(அ) எவ்வகை பேராசைக்கும் இடம் கொடாதீர்கள்.

 

(ஆ) மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.

 

(இ) கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர், தங்களோடு செல்வத்தைக் கொண்டு செல்ல இயலாது.

 

இந்த உவமையில் வரும் செல்வன் ஒரு நல்ல உழைப்பாளர், மேலாளர், மற்றும் நிர்வாகி. தன் உழைப்பால், தன் நிர்வாகத் திறனால், தன் திட்டமிடுதலால் நிறைய விளைபொருள்களைச் சேகரிக்கின்றார் – சேர்த்து வைக்க இடம் இல்லாத அளவுக்கு. மேலும், ‘நீ ஓய்வெடு, உண்டு குடித்து மகிழ்ச்சியில் திளைத்திடு’ என்று தன் மனத்திற்குச் சொல்கிறான்.

 

மூன்று விடயங்களை அவன் மறந்துவிடுகிறான்:

 

(அ) உழைப்பு அவனுடையதுதான். ஆனால், நிலத்தை விளையச் செய்பவர் இறைவன். ஆக, இறைவனை மறந்துவிடுகிறான். அவனுடைய செல்வத்தின் வெள்ளிப் பூச்சு, கண்ணாடியில் அவன் முகத்தை மட்டுமே காட்டுகிறது.

 

(ஆ) செல்வத்தால், தானியத்தால், விளைபொருள்களால் வாங்க முடியாத ஒன்று இருக்கிறது – அதாவது, உயிர் – என்பதை மறந்துவிடுகிறான். ஆக, செல்வம் அவனை உடல்சார்ந்து மட்டும் சிந்திக்க வைக்கிறது.

 

(இ) களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்ட விரும்பும் அவன், தன் அயலார்களின் காலியான வயிறுகளே களஞ்சியங்கள் என்பதை மறந்துவிடுகிறான். பிறரன்புச் செயல்கள் செய்யவும், பகிரவும் தவறுகிறான். ஆனால், பல நேரங்களில் மற்றவர் கேட்காமல் நாம் பிறருக்குச் செய்யும் உதவிகள் அவர்களுக்குச் சுமையாகவும், செய்யும் நமக்கு விரக்தியாகவும் மாறிவிடுகிறது என்பது என் தனிப்பட்ட அனுபவம். ஏனெனில், நம் உழைப்பின் பயனை அவர்கள் மதிக்காமல், நமக்கு ஏதோ அந்தப் பணம் இலவசமாகக் கிடைத்ததாக எண்ணி, நம்மைத் திருடன் போலப் பார்க்கத் தொடங்குவதுடன், ‘உங்களுடைய திருட்டில் இன்னும் பங்கு தாருங்கள்!’ என்று சில நேரங்களில் நம்மை வற்புறுத்துவதுபோல நடந்துகொள்வார்கள். இருந்தாலும், பகிர்தல் நலம்.

 

இயேசுவின் இறுதிக் கேள்வி, நம் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது என்ன?

 

‘நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’

 

நீ சேர்த்து வைத்த பெயர், புகழ், பணம், வீடு, வாசல், தோட்டம், தோப்பு, வாகனம் எதுவும் நம்முடையது இல்லை என்றால், அல்லது அது வேறு யாருக்கோ போய்விடும் என்றால், தூக்கம் மறந்து உழைப்பதும், தூக்கம் இல்லாமல் மனக்கோட்டைகள் கட்டுவதும் ஏன்?

 

இன்றைய நாளில் நாம் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறோம். ‘தீபம்’ (‘விளக்கு’) மற்றும் ‘ஆவளி’ (‘வரிசை’) – ‘விளக்குகளின் வரிசையே’ தீபாவளி. பளபளக்கும் ஆடை, இனிப்புகள், பட்டாசு, ஒளிவிளக்குகள் என நாம் புறஒளியைக் கொண்டாடும் இந்நாளில் வாழ்வின் பொருள் பற்றிய உண்மையான அகஒளியைப் பெற்றுக்கொள்ள முன்வருவோம்.

 

முதல் வாசகத்தில், நம்பிக்கை என்னும் அகஒளி ஆபிரகாமுக்கு பேறுபெற்ற நிலையை அளிக்கிறது. நற்செய்தி வாசகத்தில், பேராசை என்னும் இருள் ‘தூங்குகிற செல்வனின்’ உள்ளத்தில் நிறைந்திருந்தது.

 

‘அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது’ (யோவா 1:9) என எழுதுகிறார் நற்செய்தியாளர் யோவான். இன்றும் நம் நடுவே வந்துகொண்டிருக்கும் இந்த ஒளி நம் அகஇருள் அகற்றுவதாக!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: