• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கண்ணீர்விடும் கடவுள். இன்றைய இறைமொழி. வியாழன், 20 நவம்பர் ’25.

Thursday, November 20, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

எருசலேம் நகர் மனமாற அழைப்பு எருசலேம் அழிவு கண்ணீரில் கடவுள் அழும் கிறிஸ்து அமைதிக்குரிய வழி கடவுள் வந்த காலம் இயலாமை இயேசுவின் கண்ணீர் எச்சரிக்கை

இன்றைய இறைமொழி
வியாழன், 20 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 33-ஆம் வாரம், வியாழன்
1 மக்கபேயர் 2:15-29. லூக்கா 19:41-44

 

கண்ணீர்விடும் கடவுள்

 

இயேசு அழுததாக அல்லது கண்ணீர் வடித்ததாக நற்செய்தி நூல்கள் மூன்று நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றன. முதலில், பெத்தானியாவில் லாசரின் கல்லறைக்கு அருகில் வருகின்ற இயேசு அழுகின்றார் (காண். யோவா 11:35). தம் நண்பன் லாசருக்காக மட்டும் அவர் இங்கே அழவில்லை. மாறாக, மனுக்குலம் இறப்பு என்ற ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை எண்ணி, இறப்பு ஒரு குடும்பத்திலும் ஊரிலும் ஏற்படுத்தும் இழப்பை எண்ணி அழுகின்றார். இரண்டாவதாக, கெத்சமேனித் தோட்டத்தில் இறுதி இராவுணவுக்குப் பின்னர், தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவர் கண்ணீர் விட்டு இறைவேண்டல் செய்ததாகவும், அந்த இறைவேண்டலைக் கடவுள் கேட்டார் என்றும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் பதிவு செய்கின்றார் (காண். எபி 5:7-9).

 

இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கண்ணீர் வடிக்கும் நிகழ்வு. ‘இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்’ என்று பதிவு செய்கின்றார் லூக்கா (19:41). மேலும், எருசலேம் நகர் விரைவில் இடிபடும் என்றும் முன்னுரைக்கின்றார். இதை இயேசுவே இறைவாக்காக உரைத்தார் என்றும், அல்லது லூக்கா நற்செய்தியாளர் தன் நற்செய்தி எழுதப்படும்போது நடக்கின்ற எருசலேம் அழிவைக் கண்ணுற்று, அதை இயேசுவே முன்னுரைத்தார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

 

எருசலேம் நகரத்தின் இரண்டு தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு: ஒன்று, ‘அமைதிக்குரிய வழியை எருசலேம் அறியவில்லை.’ ‘அமைதிக்குரிய வழி’ என்பது இயேசுவையே குறிக்கிறது. இயேசுவின் பணி கலிலேயாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிற்கு யூதேயாவிலும் அதன் தலைநகரான எருசலேமிலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. அவரை அழிப்பதற்கான வழியை எருசலேம் தேடிக்கொண்டிருந்தது. இரண்டு, ‘கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை.’ கடவுள் தேடி வந்த அருளின் காலம் இயேசு கிறிஸ்துவில்தான் வெளிப்படுகிறது. ஏனெனில், ‘ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும்’ (காண். லூக் 4) என்று இயேசு நாசரேத்தூர் தொழுகைக்கூடத்தில் போதிக்கின்றார்.

 

இயேசுவின் இந்த அழுகை நமக்கு உணர்த்துவது என்ன?

 

(அ) இயலாமை

 

இயேசுவின் கண்ணீர் அவருடைய இயலாமை மற்றும் கையறுநிலையின் வெளிப்பாடாக இருக்கிறது. இறந்த ஒருவருக்கு அருகில் அமர்ந்து நாம் அழுகிறோம். எதற்காக? அவருடைய இழப்பை எண்ணி அழுகிறோம். ஆனால், அதற்கும் மேலாக, ‘என்னால் உனக்கு ஒன்றும் செய்ய இயலவில்லையே! நான் உயிரோடிருக்க, நீ மட்டும் இறந்துவிட்டதேன்! என் உயிரை உனக்கு நான் கடனாகக் கொடுக்க இயலாதா?’ என்ற இயலாமையில்தான் நாம் அழுகிறோம். இயேசு தம் பணிவாழ்வின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டார். அவரை ஏற்றுக்கொள்ளாத எருசலேம் இறந்துவிட்டது. இதற்குமேல் அவரால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இயேசு அழுகின்றார்.

 

(ஆ) மனமாற்றத்திற்கான அழைப்பு

 

குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் தன் கணவரின் அலங்கோலமான நிலை காண்கின்ற மனைவி அழுகிறார். குழந்தைகளும் இணைந்து அவரோடு அழுகின்றார்கள். இந்தக் கண்ணீரின் நோக்கம் மனமாற்றம். மனைவி மற்றும் குழந்தைகளின் கண்ணீரைப் பார்த்தாவது, குடிக்கின்ற நபர் திருந்த மாட்டாரா? என்ற எண்ணத்தில் கன்னத்தில் வடியும் கண்ணீர்த் துளிகள் இவை. ஆனால், பல நேரங்களில் இக்கண்ணீரைப் போலவே மனமாற்றத்திற்கான எண்ணமும் விரைவில் காய்ந்துவிடுகிறது. இயேசுவின் கண்ணீர் எருசலேம் அவருடைய சமகாலத்து எருசலேம் மக்களுக்கு விடுக்கப்பட்ட மனமாற்றத்துக்கான அழைப்பாக இருக்கிறது.

 

(இ) எச்சரிக்கை

 

சில நேரங்களில் நம் கண்ணீர் மற்றவர்களை எச்சரிக்கும். எடுத்துக்காட்டாக, வன்மத்துக்கு உள்ளான ஒருவர் தனக்கு மற்றவர் இழைத்த தீமையை எண்ணி அழுகிறார். அவருடைய கண்ணீர், தீமையை இழைத்த மற்றவருக்கு எச்சரிக்கையாக இருக்கிறது. ‘நீயும் இதைப் போல அழுவாய்!’ என்று தனக்கு அநீதி இழைத்தவரைக் கண்ணீர் எச்சரிக்கிறது. இயேசுவின் கண்ணீரும் தொடர்ந்து அவர் பேசும் சொற்களும் எருசலேமுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன.

 

நமக்காகக் கண்ணீர் வடிக்கும் கடவுள் நம் அருகில் இருக்கிறார்.

 

எருசலேம் போல நாமும் அமைதிக்குரிய வழியை அறியவில்லை என்றால், கடவுள் நம்மைத் தேடி வரும் காலத்தை நாம் அறியவில்லை என்றால், இயேசு இன்று நம்மையும் பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றார்.

 

இன்றைய முதல் வாசகத்தில், மத்தத்தியா எருசலேமின் திருக்கோயில்மேல் கொண்டிருந்த பற்று குறித்து வாசிக்கிறோம். எருசலேமின் ஆலயத்தில் ஆண்டவராகிய கடவுளின் பெயர் தங்கியிருக்கிறது என்று நம்பிய யூதர்கள் அதன் தூய்மையைக் காத்துக்கொள்வது பற்றி மிகவும் அக்கறை காட்டினார்கள். ஆனால், ஆண்டவராகிய கடவுளே எருசலேமுக்கு அருகில் நின்று கண்ணீர் வடிப்பதை அவர்களால் கண்டுகொள்ள இயலவில்லை.

 

இன்றும் எருசலேமில், ‘தோமினுஸ் ஃப்ளேவித்’ (‘ஆண்டவர் அழுதார்’) என்னும் சிற்றாலயம் இருக்கிறது. இந்த சிற்றாலயத்தின் உள்ளே அமர்ந்து அங்கே உள்ள பீடத்தின் வழியாக நோக்கினால் கண்ணாடி வழியாக எருசலேம் நகரமும் அதன் மாட்சியும் தெரியும். கொஞ்ச நேரம் கழித்து அந்தக் கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி போல மாறும். அங்கே தெரிவது நம் முகமே. ஆண்டவராகிய கடவுள் மனமாற்றம் அடையாத எருசலேமை மட்டுமல்ல, மாறாக, நம் ஒவ்வொருவரையும் குறித்து அழுகிறார் என்று மிக அழகாக எடுத்துரைக்கிறது மேற்காணும் கண்ணாடி மாற்றம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: