• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இது ஆண்டவரின் போர்! இன்றைய இறைமொழி. புதன், 21 ஜனவரி ’26.

Wednesday, January 21, 2026   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

ஓய்வுநாள் சட்டம் ஆண்டவரின் போர் பெலிஸ்திய கோலியாத்து தாவீதின் துணிச்சல் ஆண்டவரின் உடனிருப்பு நலம் தரும் இயேசு

இன்றைய இறைமொழி
புதன், 21 ஜனவரி ’26
பொதுக்காலம் இரண்டாம் வாரம், புதன்
1 சாமு 17:32-33, 37, 40-50. மாற் 3:1-6

 

இது ஆண்டவரின் போர்!

 

இன்றைய முதல் வாசகத்தில் இளவல் தாவீது பெலிஸ்திய மாவீரர் கோலியாத்தை எதிர்கொள்கிறார். வெளிப்புற அடையாளங்களும் தோற்றமும் அல்ல, மாறாக, ஆண்டவரின் உடனிருப்பே வெற்றி தருகிறது என்பதற்கான உருவகமாக இருக்கிறது இந்த நிகழ்வு.

 

தாவீதின் துணிச்சல், நம்பிக்கை, மற்றும் உடனடியான செயல்பாடு அவருக்கு வெற்றியைத் தருகிறது.

 

‘உன்னால் இயலாது’ என்று சவுல் தாவீதிடம் சொன்னபோது, ‘என்னால் இயலாது. ஆனால், சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவரால் முடியும்’ என்று நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார் தாவீது. மேலும், ‘நான் படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன்’ என்று சொல்லி கோலியாத்தை நெருங்கிச் செல்கிறார் தாவீது.

 

ஆண்டவர் தன்னைப் பயன்படுத்துகிற கருவியாக இருக்குமாறு தன்னையே கடவுளிடம் ஒப்படைக்கிறார் தாவீது.

 

நம் வாழ்வில் வருகிற பிரச்சினைகள் கோலியாத்து போல நமக்குத் தோற்றம் தருகின்றன. ஆனால், ‘இது ஆண்டவரின் போர்’ என்னும் நம்பிக்கைப் பார்வை நமக்குத் துணிவைத் தருகிறது.

 

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவராகிய இயேசுவும் போர்க்கள அனுபவத்தை எதிர்கொள்கிறார். கைசூம்பிய ஒருவருக்கு ஓய்வு நாளில் நலம் தருகிறார் இயேசு. அவர்மேல் குற்றம் காணும் நோக்குடன் அவரை உற்றுநோக்கியவர்களிடம், ‘ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா, உயிரைக் காப்பதா, அழிப்பதா?’ என்று கேள்வி கேட்கிற இயேசு அவர்களின் பிடிவாத உள்ளம் கண்டு வருந்துகிறார். தன் சக மனிதர் நலம் பெறுவதை விட, ஓய்வுநாள் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அவர்கள்.

 

ஆண்டவரின் போரில் தீமை அழிந்து நன்மை பிறக்கும் என்பது இயேசுவின் மனநிலை. ஆகையால்தான், அவர் அந்த மனிதருக்கு நலம் தருகிறார்.

 

நம் வாழ்க்கையை ஆண்டவரின் போர் என்று ஏற்று அவரிடம் நம்மை ஒப்படைக்கிற சரணாகதி மனநிலையை இன்று நாம் வேண்டுவோம்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: