
இன்றைய இறைமொழி
செவ்வாய், 21 ஏப்ரல் 2026
பாஸ்கா காலம் மூன்றாம் வாரம்
திப 7:51-8:1அ. யோவா 6:30-35
தம்மைத் தேடி வந்தவர்களுடைய தேடலைக் கூர்மைப்படுத்துகிறார் இயேசு. ‘நாங்கள் உம்மை நம்பும் வகையில் நீர் எங்களுக்கு என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்?’ என்பது மக்களுடைய கேள்வியாக இருக்கிறது. தாங்கள் ஏற்கெனவே கண்ட அரும் அடையாளம் ஒன்றையும் அவர்கள் அவருக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள் – பாலைநிலத்தில் உணவு!
இங்கே பாலை நிலத்தில் அவர்கள் உண்ட உணவின் ஊற்றைச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு – ‘என் தந்தையே உணவு வழங்கினார்!’
‘கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது’ என இயேசு அவர்களுக்கு அறிவிக்கிறார். இங்கே ‘உலகம்’ என்பது கடவுளின் இயங்குதளமாக கடவுளுடைய அருளைப் பெற்றுக்கொள்கிற இடமாக இருக்கிறது. ‘வாழ்வு’ என்பதை ‘அமைதி,’ ‘மகிழ்ச்சி,’ ‘நிறைவு’ என எடுத்துக்கொள்ளலாம்.
‘வானிலிருந்து இறங்கி வந்தவர் நானே!’ என்று இயேசு மறைமுகமாக இங்கே குறிப்பிடுவதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. மக்கள் எல்லாரும் விண்ணை நோக்கிப் பார்த்து அறிகுறி கேட்டபோது, இயேசு தம்மை நோக்கிப் பார்க்குமாறு அவர்களை அழைக்கிறார்.
தச்சரின் மகன் என்னும் நிலையைத் தாண்டி இயேசுவை அவர்களால் பார்க்க இயலவில்லை என்பதே நாம் தொடர்ந்து வாசிக்கும்போது அறிந்துகொள்வது.
கடவுள் தம்மையே சுருக்கி நம் நடுவில் நற்கருணை வடிவில் குடிகொள்கிறார். அவரைக் கண்டுகொள்ள, அவரோடு உடன் பயணிக்க நாம் தயாராக இருக்கிறோமா?
இன்றைய முதல் வாசகத்தில், தன் துணிவால் நற்செய்திக்குச் சான்று பகர்கிறார் ஸ்தேவான்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: