இன்றைய இறைமொழி
வெள்ளி, 22 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 20-ஆம் வாரம், வெள்ளி
அரசியான புனித கன்னி மரியா – நினைவு
ரூத்து 1:1, 3-6, 14-16, 22. மத்தேயு 22:34-40
மோசே வழியாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குப் பத்துக் கட்டளைகள் வழங்கினார். காலப்போக்கில், விதிமுறைகள் வழிமுறைகள் என மற்ற சட்டங்கள் வழக்கத்திற்கு வந்தன. இயேசுவின் சம காலத்தில் பரிசேயர்கள் 613 சட்டங்களை நீட்சிகளாக உருவாக்கி வைத்திருந்தனர். இந்தப் பின்புலத்தில், ‘முதன்மையான கட்டளை எது?’ என்னும் கேள்வி இயேசுவிடம் கேட்கப்படுகிறது. இயேசு என்னும் ரபி அல்லது போதகரின் திருச்சட்ட அறிவைச் சோதித்துப் பார்ப்பதற்காக இக்கேள்வி கேட்கப்படுகிறது. இச 6:4-இல் வழங்கப்பட்டுள்ள முதன்மையான கட்டளையை இயேசு மேற்கோள் காட்டுவதுடன், லேவி 19:18-இல் நாம் காணும் பிறரன்புக் கட்டளையையும் எடுத்துரைத்து, முந்தைய கட்டளைக்கு இணையாக நிற்கிறது பிந்தைய கட்டளை என்று மொழிகிறார்.
நீதித்தலைவர்கள் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் நடுவில் தீமை மலிகிறது. இதன் விளைவாக நிலம் தன் விளைச்சலைக் கொடுக்க மறுக்கிறது. ‘அப்பத்தின் வீடு’ என்று அழைக்கப்பட்ட எருசலேமிலும் பஞ்சம் ஏற்படுகிறது. இந்தப் பின்புலத்தில் ஊரை விட்டு முன்பு வெளியேறிய நகோமி மற்றும் ரூத்து பெத்லகேம் வருகிறார்கள். ரூத்து ஒரு புறவினத்துப் பெண்ணாக இருந்தாலும், நகோமியையும் அவருடைய கடவுளையும் ஏற்றுக்கொள்கிறார்.
இறையன்பு, பிறரன்பு என்னும் இரு கட்டளைகளும் முதன்மையாக இருக்கின்றன என்கிறார் இயேசு. சில நேரங்களில், ‘பிறரன்பு வழி இறையன்பு’ என நாம் குறுகிய பார்வையில் புரிந்துகொள்கிறோம். பிறரன்பைப் பயன்படுத்தி நாம் இறைவனை அடைய வேண்டியதில்லை. பிறரன்பு பிறரை மையமாக மட்டுமே இருத்தல் நலம். ஆண்டவராகிய கடவுள்தாமே வரலாற்றை நகர்த்துகிறார் என்னும் செய்தி நகோமி-ரூத்து வருகை நமக்குத் தெரிவிக்கிறது. ரூத்து காட்டிய உடனிருப்பு அவருடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றுகிறது.
நிற்க.
அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்புத் திருவிழாவின் எட்டாம் நாளில், அன்னை கன்னி மரியாவை விண்ணரசி (விண்ணக-மண்ணக அரசி) எனக் கொண்டாடி மகிழ்கின்றோம் (வாசகங்கள்: எசாயா 9:2-4, 6-7. லூக்கா 1:26-38). இதையே செபமாலையில், மாட்சிநிறை மறைபொருளில் ஐந்தாவதாகவும் சிந்திக்கின்றோம்.
‘நான் ஆண்டவரின் அடிமை’ என்று இறைவனிடம் தன்னையே அடியாராகச் சரணடைந்த மரியாவின் தாழ்ச்சியே அவரை அரசி நிலைக்கு உயர்த்துகின்றது.
மேலும், அனைத்துலக அரசராம் கிறிஸ்துவைப் பெற்றெடுத்த நிலையிலும் அன்னை கன்னி மரியா அரசியாகக் கருதப்படுகின்றார்.
நாம் நம் வாழ்வில் அரசர் அல்லது அரசி என்ற நிலையில் வாழ்வது எப்படி? இன்றைய திருநாள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
மையம் கொண்டிருத்தல் (ஃபோகஸ்) என்பது முதன்மைகளை நெறிப்படுத்துதலில் தொடங்குகின்றது. முதன்மைகளை நெறிப்படுத்தியபின், தாங்கள் தேர்ந்துகொண்ட முதன்மையை மையமாகக் கொண்டு தங்கள் எண்ணம், விருப்பம், ஆற்றல் அனைத்தையும் அதன்மேல் குவிப்பர் அரசர். கன்னி மரியாவைப் பொருத்தவரையில் இறைவனின் திருவுளம் நிறைவேற்றுதல் என்பது அவர் தேர்ந்துகொண்ட மையம். அந்த மையத்தின் குவியத்தையே தன் வாழ்வாகக் கொண்டார் அவர். இன்று நான் என் முதன்மைகளை நெறிப்படுத்தி வாழ்கிறேனா? என் முதன்மைகளைக் கலைக்கின்ற கவனச்சிதறல்கள் எவை? அவற்றை நான் எப்படி அகற்றுகிறேன்?
மனிதர்களில் இரு வகையினர் உண்டு. முதல் வகையினர் தேர்ந்து தெளிவதற்கு நேரம் எடுப்பர். இரண்டாம் வகை மனிதர் தேர்ந்து தெளிந்தபின்னரும் தங்கள் மனத்தில் குழம்பிக்கொண்டே இருப்பர். இந்த இரு நிலைகளுமே ஆபத்தானவை. அரசர்கள் உடனடியாகத் தேர்ந்து தெளிவர். தன் தேர்வில் உறுதியாக இருப்பர். முதன்மைகள் தெளிவானால் தெரிவுகள் எளிதாகும். அன்னை கன்னி மரியா தன் வாழ்வின் இயக்கத்தை இறைவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டதால் அவரின் விரல் பிடித்து உறுதியாக நடந்தார்.
இயேசுவின் பிறப்புச் செய்தி கேட்ட மரியா தன் உறவினர் எலிசபெத்து நோக்கி ஓடுகின்றார். காணாமல் போன இளவல் இயேசுவைக் கண்டுபிடிக்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றார். கானாவில் திராட்சை இரசம் தீர்ந்தபோது இயேசுவை நோக்கி ஓடுகின்றார். தன் மகன் மதிமயங்கி இருப்பதாக ஊரார் சொல்லக் கேட்டு அவரைத் தேடி ஓடுகின்றார். தன் முதன்மைகளின்பின்னேயே ஓடினார் மரியா. தன் வாழ்வில் முதன்மையாகத் திகழ்ந்தவர்களுக்கு ஆசீராகத் திகழ்ந்தார்.
அரச நிலை நமக்கும் சாத்தியமே!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: