• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

வீட்டுப் பொறுப்பாளர். இன்றைய இறைமொழி. புதன், 22 அக்டோபர் ’25.

Wednesday, October 22, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

சீடத்துவம் பொறுப்புணர்வு வீட்டுப் பொறுப்பாளர் திருத்தந்தை புனித 2-ஆம் யோவான் பவுல் புனித இரண்டாம் யோவான் பவுல் முதல் ஏற்பாட்டு யோசேப்பு பணியில் இயக்கம் தாலந்து-மினா எடுத்துக்காட்டு அக்கறை விவேகம்

இன்றைய இறைமொழி
புதன், 22 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் வாரம், புதன்
புனித 2-ஆம் யோவான் பவுல், திருத்தந்தை – நினைவு
உரோமையர் 6:12-18. லூக்கா 12:39-48

 

வீட்டுப் பொறுப்பாளர்

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் இறுதிக்கால போதனை தொடர்கிறது. ‘தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்?’ என்னும் கேள்வியை எழுப்புகின்ற இயேசு, ‘தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர்’ என்று பதில் தருகின்றார்.

 

இந்த நற்செய்தி வாசகப் பகுதியை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு முதல் ஏற்பாட்டு யோசேப்பு நினைவுக்கு வருகிறார். யோசேப்பு எகிப்து நாட்டில் அடிமையாக விற்கப்படுகின்றார். அடிமையாக போத்திபாரின் இல்லத்திற்குள் நுழைந்த அவர் சில நாள்களில் போத்திபாரின் வீட்டுப்பொறுப்பாளராக மாறுகின்றார். நிகழ்வின்படி, போத்திபாரின் இல்லத்தரசி இவர்மேல் மையல் கொள்கின்றார். யோசேப்பின் கண்ணியம் நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. தான் தன் கடவுளாலும் தன் சகோதரர்களாலும் கைவிடப்பட்ட நிலையிலும், ‘கடவுளின் கண்களில் தீயதெனப்படுவதை நான் செய்யலாமா?’ எனக் கேட்கின்றார் யோசேப்பு. மேலும், இல்லத்திலிருந்து தப்பி வெளியே ஓடுகின்றார். இதுதான் பொறுப்பாளரின் நேர்மை.

 

வீட்டுப் பொறுப்பாளர் என்ற நிலைக்கு இரு பண்புகள் அவசியம். இந்த இரு பண்புகளுமே யோசேப்பிடம் இருந்தன. ஒன்று, தன் வரையறை மற்றும் எல்கையை அறிவது, வரையறுப்பது, உறுதி செய்வது. இரண்டு, எப்போது வெளியேற வேண்டுமோ, அப்போது வெளியேறுவது. பொறுப்பாளர் தலைவராக முயற்சிக்கவும் கூடாது, ஊழியரோடு அமர்ந்து உண்டு குடிக்கவும் கூடாது. தன் வரையறையை அறிந்தவராகவும், உறுதி செய்பவராகவும் அவர் இருத்தல் வேண்டும். மேலும், வாழ்வின் மிக முக்கியமான பண்பு ஒன்றைவிட்டு வெளியேறக் கற்றுக்கொள்வது. மகாபாரதத்தில் அர்ச்சுனரின் மகன் அபிமன்யு பற்றிய ஒரு நிகழ்வு உண்டு. அபிமன்யு எதிரியின் போர் வளையத்தை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைவார். ஆனால், அவருக்கு அதிலிருந்து வெளியேறுவது எப்படி எனத் தெரியாததால் போரில் கொல்லப்படுவார். உறவுநிலையாக இருக்கலாம், நாம் செய்கின்ற வேலையாக இருக்கலாம், நம் வாழ்வின் படிநிலையாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும், ‘இந்த இடத்தை விட்டு நான் எப்போது வெளியேற வேண்டும்?’ என்ற கேள்விக்கு விடை எனக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். தேவைக்குமேல் தங்குதல் ஆபத்தானது.

 

இறுதியாக, இயேசு, ‘மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்’ என்கிறார். ஊழியக்காரர்களிடம் கொடுக்கப்படுவது குறைவு. ஏனெனில், அவர்கள் பெறும் வெகுமதியும் குறைவு. அவர்களின் பொறுப்புணர்வும் குறைவு. ஆனால், வீட்டுப் பொறுப்பாளரிடம் ஊழியர்கள் கொடுக்கப்படுகின்றார்கள். அவர்களின் வெகுமதியும் பொறுப்புணர்வும் அதிகம்.

 

நம் வாழ்வில் இதை நன்றாகக் கவனிக்கலாம். இதை மேலாண்மையியலில் ‘பனிப்பந்து விளைவு’ என்றழைப்பார்கள். அதாவது, பனிக்கட்டி மேலேயிருந்து உருண்டு விழத் தொடங்கும்போது சிறிய பந்து போல இருக்கும், அது மலையிலிருந்து சறுக்கி கீழே வரும்போது, வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அளவு கூடிக்கொண்டே இருக்கும். கீழே வரும்போது அது பெரிய பனிப்பாறையாக வரும். நம் வாழ்விலும் பொறுப்புணர்வும் வேகமும் அதிகரிப்பதைப் பொறுத்து நம் வாழ்வில் பணிகளும் கூடிக்கொண்டே வரும்.

 

அதிகம் ஓய்ந்திருப்பவர் அல்லர், மாறாக, அதிகம் பணி செய்பவரே இந்த உலகை மாற்றக் கூடியவர். ஏனெனில், ஓய்வு என்பதில் இயக்கம் இல்லை. பணியில் எப்போதும் இயக்கம் உள்ளது.

தாலந்து அல்லது மினா எடுத்துக்காட்டில், ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து உள்ளதாகக் கருதப்படுவதும் எடுக்கப்படும்’ என்கிறார் இயேசு. ஏறக்குறைய இதன் தழுவலாகவே இருக்கின்றது இயேசு சீடர்களுக்குச் சொல்லும் அறிவுரை அல்லது எச்சரிக்கை.

 

மேலும், தன் சீடர்கள் தன்னைக் காணும் பேறு பற்றியும் இயேசு கூறுகின்றார். மற்றவர்களுக்கு மறைபொருளாக உள்ளது தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதை எண்ணி அவர்களைப் பாராட்டுகின்றார் இயேசு.

 

‘மிகுதியாகக் கொடுக்கப்பட்டது’ என்பது பொறுப்புணர்வையே குறிக்கிறது.

 

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் செய்தி என்ன?

 

(அ) கடவுள் நம்மிடம் ஒப்படைத்தவை பற்றியும், நம் அழைத்தல் பற்றியும் அக்கறையுடன் இருப்பது.

 

(ஆ) பொறுப்புணர்வுடன் வாழ்க்கை நடத்துவது.

 

(இ) நமக்கு மேல் உள்ள கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராகவும், நம் நிலையில் உள்ளவர்களோடு விவேகமாகவும் செயல்படுவது.

 

புனித இரண்டாம் யோவான் பவுல்

 

இன்று நாம் நினைவுகூர்கிற திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் தன் பாப்பிறைப் பணிக் காலத்தில் திருஅவைக்கு புதிய ஊட்டம் கொடுத்தவர். புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி, இறைஇரக்கம், புதிய மானுடவியல் என்று புதுமையைக் கொண்டு வந்தவர். பொறுப்பாளர் நிலையில் தன் பணியைச் சிறப்பாகச் செய்தார் திருத்தந்தை.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: