• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

அவரோடு இருக்க! இன்றைய இறைமொழி. வெள்ளி, 23 ஜனவரி ’26.

Friday, January 23, 2026   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
வெள்ளி, 23 ஜனவரி ’26
பொதுக்காலம் இரண்டாம் வாரம், வெள்ளி
1 சாமு 24:2-20. மாற் 3:13-19

 

அவரோடு இருக்க!

 

‘தனியாய் எவரும் சாதிப்பதில்லை’ என்பதை அறிந்தவராக இருக்கிற இயேசு, தம் பணிக்கென பன்னிரு திருத்தூதர்களைத் தெரிந்துகொள்கிறார்.

 

இந்நிகழ்வை, ‘மலைமேல் ஏறினார்,’ ‘தம்மிடம் வரவழைத்தார்,’ ‘பெயரிட்டார்’ என்னும் மூன்று முதன்மையான சொற்களால் வரையறுக்கிறார் மாற்கு.

 

‘மலைமேல் ஏறுதல்’ என்பது இயேசுவின் இறைவேண்டல் நிகழ்வைக் குறிக்கிறது. இலக்கியக் கூற்றாகக் காணும்போது, ‘மலைமேல் ஏறுகிற ஒருவர்’ அகன்ற பார்வை பெறுகிறார். அனைவரையும் அவரால் எளிதாகப் பார்க்க முடிகிறது.

 

தாம் விரும்பியவர்களை இயேசு தம்மிடம் வரவழைத்தார். ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் அல்லது தகுதி அல்ல, மாறாக இறைவிருப்பமே ஒருவரைத் தெரிந்துகொள்கிறது.

 

‘திருத்தூதர்கள்’ என்று இயேசு அவர்களுக்குப் பெயரிடுதல், அவர்கள்மேல் இயேசு கொண்டுள்ள உரிமையையும், அவர்களுடைய பணியின் பொருளையும் விளக்குகிறது.

 

‘அவரோடு இருத்தலும்’ ‘அனுப்பப்படுதலும்’ ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல திருத்தூதுப் பணியின் இரண்டு பரிமாணங்களாக உள்ளன.

 

திருத்தூதர் தெரிவு இயேசுவின் முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

 

‘அவரோடு இருத்தல்’ என்றால் என்ன? நம்மை மறுத்து அவரைப் பற்றிக்கொள்தல்.

 

இன்றைய முதல் வாசகத்தில், தாவீதும் சவுலும் ஒப்புரவாகும் நிகழ்வை வாசிக்கிறோம். தம்மைக் கொல்லத் தேடிய சவுலைக் கொல்வதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் அவரைக் கொல்லாமல் விடுகிறார். தம்மைப் பின்பற்றிய அரசரை அல்ல, மாறாக, ஆண்டவரின் திருப்பொழிவையே சவுலில் கண்டார் தாவீது. தாவீதின் பெருந்தன்மை போற்றுதற்குரியது. நாம் ஒவ்வொருவமே கடவுளின் சாயலைத் தாங்கியுள்ளோம். திருமுழுக்கு பெற்றபோது நாம் அனைவரும் ஆண்டவரின் திருப்பொழிவைப் பெற்றுள்ளோம்.

 

தாம் ஆண்டவராகிய கடவுளில் இணைந்திருப்பதுபோல, சவுலும் இணைந்திருக்கக் கண்டார் தாவீது.

 

நான், நீ எனப் பிரித்துப் பார்த்தால் நாம் வேறுபடுகிறோம். நம் அனைவரையும் இணைக்கிற கடவுளில் நம்மை வைத்துப் பார்த்தால் அனைவரும் ஒன்றுபடுகிறோம்.

 

அவரோடு இணைந்திருத்தலே நம் வாழ்வின் அடிப்படையாக அமைதல் வேண்டும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: