இன்றைய இறைமொழி
புதன், 23 ஜூலை ’25
பொதுக்காலம் 16-ஆம் வாரம் – புதன்
விடுதலைப் பயணம் 16:1-5, 9-15. மத்தேயு 13:1-9
இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘விதைப்பவர்’ எடுத்துக்காட்டை முன்மொழிகிறார் இயேசு. ‘விதைப்பவர் விதைக்கச் சென்றார்’ என்று தொடங்குகிறது இயேசுவின் உவமை. விதைப்பவர் வீட்டுக்குள் அமர்ந்திருப்பதில்லை. வீட்டுக்குள் அமர்ந்திருப்பவர் விதைப்பதில்லை. விதைப்பவர் தன் இலக்கில் தெளிவாக இருக்கிறார். அவருடைய இலக்கு விதைப்பது மட்டுமே.
‘காற்று தக்கவாறு இல்லையென்று காத்துக்கொண்டே இருப்போர் விதை விதைப்பதில்லை. வானிலை தக்கபடி இல்லையென்று சொல்லிக்கொண்டே இருப்போர் விதை விதைப்பதில்லை’ என்கிறார் சபை உரையாளர் (11:4). மேலும், ‘காலையில் விதையைத் தெளி. மாலையிலும் அப்படியே செய். அதுவோ, இதுவோ எது பயன்தரும் என்று உன்னால் கூற முடியாது. ஒருவேளை இரண்டும் நல்விளைச்சலைத் தரலாம்’ (11:6) என அறிவுறுத்துகிறார்.
கடவுள் தம் வார்த்தையை நம் உள்ளங்களில் அன்றாடம் விதைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் ஓய்ந்திருப்பதில்லை.
இன்றைய முதல் வாசகத்தில், செங்கடலைக் கடந்து வந்த இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்ற விடுதலையை மறந்துவிட்டு, ‘இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்!’ என்று புலம்புகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் அனுபவித்த பசியால் அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள். தற்காலிக பசி நீண்டகால விடுதலையை மறக்கச் செய்கிறது.
அவர்கள் உள்ளத்தில் விழுந்த கடவுளின் உடனிருப்பு என்னும் விதையை பசி என்னும் பறவை விழுங்கிவிடுகிறது. கடவுள் தந்த விடுதலையை பசி என்னும் முள் நெருக்கி அழுத்தி அழித்துவிடுகிறது. மக்களுடைய முணுமுணுப்பு கடவுளின் கைகளை மூடவில்லை. கைகளைத் திறந்து விதைக்கிற கடவுள் காடைகளும் மன்னாவும் வழங்குகின்றார். அவர்களின் பசி தீர்க்கிறார். விடுதலையை விதைத்த கடவுள், அந்த விடுதலையில் அவர்கள் நூறு மடங்கு கனிதர வேண்டும் என விரும்புகிறார்.
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் விதைப்பவராகவே இருக்கிறோம். நம்மைவிட்டு நாம் தொடர்ந்து வெளியே செல்வது நல்லது. தேக்கநிலையும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதலும் விதைப்பவருக்கு ஏற்புடைய செயல்கள் அல்ல.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: