• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

தலைப்புகளும் தான்மையும். இன்றைய இறைமொழி. சனி, 23 ஆகஸ்ட் ’25.

Saturday, August 23, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

லீமா நகர் புனித ரோஸ் பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்கள் சதுசேயர்கள் ஏரோதியர்கள் தீவிரவாதிகள் எஸ்ஸீனியர்கள் தொண்டர்நிலை பணியாளர்நிலை இயேசுவின்-உயர்த்தப்படுதல் தான்மை-தாழ்ச்சி

இன்றைய இறைமொழி
சனி, 23 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 20-ஆம் வாரம், சனி
லீமா நகர் புனித ரோஸ் – விருப்ப நினைவு
ரூத்து 2:1-3, 8-11, 4:13-17. மத்தேயு 23:1-12

 

தலைப்புகளும் தான்மையும்

 

இயேசுவின் சமகாலத்தில் ஆறு குழுவினர் முதன்மையாக இருந்தனர்: பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், சதுசேயர்கள், ஏரோதியர்கள், தீவிரவாதிகள், மற்றும் எஸ்ஸீனியர்கள். இவர்களில் பரிசேயர்கள் சமயம் சார்ந்த தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். மறைநூல் அறிஞர்கள் திருச்சட்டத்தைக் கற்றறிந்தவர்களாகவும், அவற்றைப் போதிப்பவர்களாகவும் இருந்தனர். இவர்கள் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டு போதித்தனர். அதாவது, மறைநூல் கற்கின்ற ஒவ்வொருவரும் தனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர், அல்லது கடவுள், அல்லது மோசே ஆகியோரின் அதிகாரத்தைக் கொண்டே போதித்தனர். இந்த நிலையில் அவர்கள் மேன்மையானவர்களாகவும் மதிப்புக்குரியவர்களாகவும் கருதப்பட்டனர். காலப்போக்கில் மதிப்புக்குரிய நிலை என்பது மதிப்பு தேடுகின்ற நிலையாக மாறிப்போனது. மக்களால் இயல்பாகவே மதிக்கப்பட்டவர்கள், தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என விரும்பத் தொடங்கினர். அந்த விரும்பம் பல்வேறு சடங்குகளாகவும் வெளிப்பட்டது. தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள மிகவும் வருந்தி முயற்சி செய்தனர். அதே வேளையில், தாங்கள் கற்பிப்பதை செயல்படுத்த முனையவில்லை.

 

இந்தப் பின்புலத்தில், இவர்கள் சொல்வதைச் செய்யுங்கள், ஆனால், இவர்கள் செய்வது போலச் செய்யாதீர்கள் என அறிவுறுத்துகின்றார் இயேசு.

 

தொடர்ந்து தன் சீடர்கள், ‘ரபி,’ ‘போதகர்’ என்னும் தலைப்புகளை விடுப்பதோடு, ‘தொண்டர்நிலை’ என்ற தான்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.

 

நம் மனம் இயல்பாகவே மற்றவர்களின் அங்கீகாரத்தையும், பாராட்டையும், ஏற்றுக்கொள்ளப்படுதலையும் தேடுகின்றது. இந்த மேட்டிமை எண்ணத்தைத் தடை செய்யுமாறு பணிக்கின்றார் இயேசு. ஏனெனில், இத்தகைய சூழல்களில் நம் எண்ணங்களைப் பெரும்பாலும் மற்றவர்கள் ஆக்கிரமிக்குமாறும், மற்றவர்களைக் கொண்டு என் தான்மையை நிர்ணயிப்பதாகவும் செய்கிறோம். எடுத்துக்காட்டாக, நான் வாயிலுக்கு அருகில் வரும்போது வாட்ச்மேன் எழுந்து நின்று எனக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என நான் விரும்பினால், என் உணர்வுகளை வாட்ச்மேன் வரையறுக்குமாறு நான் செய்துவிடுகிறேன். அவர் வணக்கம் செலுத்தினால் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். வணக்கம் செலுத்த மறுத்தாலோ அல்லது மறந்தாலோ அவர்மேல் கோபம் கொள்கிறேன். ஆனால், அந்த வணக்கத்தைக் கொண்டு என் தான்மையை நான் வரையறுக்கவில்லை என்றால் என் உணர்வுகள் என் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன.

 

இதுவே இயேசு சொல்கின்ற உயர்த்தப்படுதல்.

 

தன்னைத் தாழ்த்துகிற ஒருவர் மற்றவரால் அல்ல, மாறாக, தானாகவே உயர்த்தப்படுகின்றார். அல்லது தானாகவே உயர்ந்துநிற்கின்றார். அவரை உயர்த்துவதற்கு இன்னொருவர் தேவையில்லை.

 

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுளின் அருள் போவாசு வழியாக ரூத்துக்குக் கிடைக்கிறது. ரூத்து காட்டிய பிரமாணிக்கமும் இரக்கமும் அவருக்கே திரும்பக் கிடைக்கின்றன. தாவீது அரசரின் தாத்தாவாகிய ஓபேதைப் பெற்றெடுக்கிறார் ரூத்து. புறவினத்துப் பெண் ஒருவர் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வகுத்த மீட்புத் திட்டத்தின் பகுதியாக மாறுகிறார். இதுவே கடவுள் மனிதர்களை உயர்த்தும் விதம்!

 

இன்று லீமா நகர் புனித ரோஸை (1586-1617) நினைவுகூர்கிறோம். பெருநாட்டில் பிறந்த இவருடைய இயற்பெயர் இசபெல் ஃப்ளாரெஸ் தெ ஒலிவா. அமெரிக்கக் கண்டங்களின் முதல் புனிதை இவர். தன் குடும்பத்தையும் இல்லத்தையும் இறைவேண்டல், ஒப்புரவு, வறியோர்க்கான பணி ஆகியவற்றின் தளங்களாக மாற்றி அனைவருக்கும் அன்பையும் நலத்தையும் அள்ளித் தந்தார். புனித வாழ்க்கை என்பது துறவு மடங்களில் வாழ்பவர்களால் மட்டுமல்ல, குடும்பத்தில் வாழ்பவர்களாலும் சாத்தியம் எனத் தன் வாழ்க்கை வழியாகக் கற்றுத் தந்தவர். தாழ்ச்சியும், தூய்மையும் இவருடைய அணிகலன்கள்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: