
இன்றைய இறைமொழி
சனி, 24 ஜனவரி ’26
பொதுக்காலம் இரண்டாம் வாரம், சனி
புனித பிரான்சிஸ்கு சலேசியார், நினைவு
2 சாமு 1:1-4, 11-12, 19, 23-27. மாற் 3:20-21
‘கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர். கண்ணீரை பெருமளவு பெருகச் செய்தீர்’ என்று இன்றைய பதிலுரைப்பாடலில் வாசிக்கிறோம் (காண். திபா 80:5). ‘கண்ணீரே உணவானது’ என்னும் உருவகம் சோகம் நிறைந்ததாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் அடைந்த துயர அனுபவத்தின் உருவகம் இது.
இன்றைய முதல் வாசகத்தில், தாவீது கண்ணீராம் உணவை உண்கிறார். சவுல் மற்றும் யோனத்தானின் செய்தி அவருக்குச் சொல்லப்பட்டவுடன் அவர் அவர்களை நினைத்து பாடுகிறார். அவர்களுடைய வீரம், ஆற்றல், பிணைப்பு, அன்பு ஆகியவற்றை எடுத்துச் சொல்கிற தாவீதின் பாடல்கள். சவுலின் ஆட்சி நிறைவுக்கு வருகிறது. யோனத்தானும் இறந்து போகிறார். தாவீது ஏற்கெனவே அரசராகத் திருப்பொழிவு பெற்றுவிட்டார். இஸ்ரயேல் அரச வரலாற்றில் இது புதிய தொடக்கமாக இருக்கிறது.
சவுல் தாவீதுக்கு துன்பம் தந்தாலும் அவர்மேல் பொறாமை கொண்டு அவரைக் கொல்ல நினைத்தாலும், தாவீது துணிவும் ஆற்றலும் கொண்டவராக வளர்வதற்கு அவர் காரணம். தாவீதை அடையாளம் கண்டு தம் அரண்மனையில் அவரைக் குடியமர்த்துகிறார். யோனத்தான்-தாவீது நட்பு போற்றுதற்குரிய உறவுநிலையாக இருந்தது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் ‘உண்பதற்குக் கூட நேரம் இல்லை.’ இயேசு மதிமயங்கிவிட்டார் என்று மக்கள் பேசியதைக் கேட்கிற அவருடைய உறவினர்கள் அவரை அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். ‘மதிமயங்கிவிட்டார்’ என்பதன் கிரேக்கச் சொல் ‘அவர் தனக்கு வெளியே இருக்கிறார்’ என்பது.
மூன்று ஆண்டுகளில் இயேசு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் அவர் செய்த வேலைகள் என்று நாம் சொல்ல முடியும். தமக்கென எந்த நேரத்தையும் எடுத்துக்கொள்ளாமல் அனைத்தையும் மற்றவர்களுக்காக – போதிக்க, வல்ல செயல்கள் செய்ய – பயன்படுத்துகிறார்.
இயேசுவைப் பொருத்தவரையில் அவருடைய பணியே அவருடைய உணவாக மாறுகிறது. இயேசுவே இதைக் கூறுகிறார்: ‘என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு’ (காண். யோவா 4:34).
உணவு நமக்கு ஊட்டம் தருகிறது. கண்ணீரும் நம் உள்ளத்திற்கு வாட்டம் தந்தாலும், நம் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, நம் முதன்மைகளைச் சரி செய்கிறது. நாம் செய்கிற பணி நம் உணவாக மாறிவிட்டால் நாம் இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
தம் புதிய குடும்பம் என்று திருத்தூதர்களை வரையறுத்து முடித்தவுடன் அவருடைய இரத்த உறவுக் குடும்பம் அவரை நோக்கி வருகிறது. அவர்களுடைய புரிதலின்மை இயேசுவின் பணிக்குத் தடையாக அமையவில்லை. மற்றவர்களின் பார்வையில் அவர் தனக்கு வெளியே இருந்தாலும், அவருடைய பார்வையில் அவர் அவருக்குள்ளே இருக்கிறார்.
இன்று நாம் புனித பிரான்சிஸ் சலேசியாரை நினைவுகூர்கிறோம். ‘பக்திநிறை வாழ்வுக்கான அறிமுகம்’ என்னும் நூலின் வழியாக புனிதம் என்பதை அன்றாட வாழ்வியல் செயல்பாடாக மாற்றியவர் இவர். புனிதம் என்பதே நாம் உண்கிற உணவு என்ற நிலையில், அது நம் வாழ்வுக்கு இயக்கமும் ஊட்டமும் தருகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: