• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

சவுல் பார்வையற்றிருந்தார். இன்றைய இறைமொழி. வெள்ளி, 24 ஏப்ரல் 2026.

Friday, April 24, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வெள்ளி, 24 ஏப்ரல் 2026
பாஸ்கா மூன்றாம் வாரம்
திப 9:1-20. யோவா 6:52-59

 

சவுல் பார்வையற்றிருந்தார்

 

எருசலேமின் பன்னிரு வாயில்களில் ஒன்றின் பெயர் ‘தமஸ்கு வாயில்’. இந்த வாயில் வழியாகத்தான் பவுல் (சவுல்) தமஸ்கு நோக்கிப் பயணம் செய்திருப்பார். புதிய நெறியைப் பின்பற்றுபவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு புறப்படுகிறார் பவுல். புதிய நெறியை நிறுத்துவதற்காகச் சென்ற இவரை ஆண்டவராகிய இயேசு தடுத்து நிறுத்துகிறார். புதிய நெறியை புறவினத்தாருக்கு அறிவிக்கும் பணியை இவர் பெறுகிறார்.

 

இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கும் ஒரு சொற்றொடரை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்: ‘அவர் (சவுல்-பவுல்) மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை!’

 

பவுல் கண்ட காட்சியின் வலிமையை நாம் இங்கே பார்க்கிறோம். துணி காயப்போடுவதற்காகச் சில நிமிடங்கள் மாடியில் நின்றுவிட்டு உடனே வீட்டுக்குள் நுழையும்போது நமக்கு இருட்டாக இருக்கிறது, நம்மால் பார்க்க முடிவதில்லை. மூன்று நாள்கள் பார்வையற்றிருக்க வேண்டுமெனில் பவுல் பார்த்த ஒளியின் வலிமையை நம்மால் உணர முடிகிறது.

 

மூன்று விடயங்கள் இங்கே நடப்பதாக லூக்கா பதிவு செய்கிறார்:

 

(அ) வேகமாகச் சென்றவர் தடுத்து நிறுத்தப்படுகிறார். பவுலின் கால்கள் நகர இயலாத நிலையில் இருக்கின்றன.

 

(ஆ) பார்க்க இயலவில்லை. ஆக, அவருடைய அகக்கண்கள் திறக்கப்படுகின்றன. ‘யார் அந்த ஆண்டவர்?’ ‘ஏன் இந்தக் காட்சி?’ என்று தனக்குள்ளே கேட்கத் தொடங்குகிறார்.

 

(இ) அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை – இதை நோன்பு என்று நாம் பார்க்கத் தேவையில்லை. பவுல் தன்மேல் உள்ள கோபம், குற்றவுணர்வு, தலைமைச்சங்கத்திற்கு அளிக்க வேண்டிய பதில் பற்றிய பயம் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். பாகாலின் நானூறு இறைவாக்கினர்களைக் கொன்ற எலியா அரசி ஈசபேலைக் குறித்த பயத்தில் உண்ணாமல் இருக்கிறார். ‘நான் இறந்துபோகட்டும்!’ என்று கடவுளிடம் மன்றாடுகிறார். தன் பணி தோற்றது போல உணர்ந்த அவர் உடனடியாகத் தன்னை அழித்துக்கொள்ள விரும்புகிறார். ஏறக்குறைய பவுலும் இதே மனநிலையில்தான் இருந்திருப்பார். இது ஒரு வகையான இறப்பு உணர்வு. வாழ்விலிருந்து நம்மையே அழித்துக்கொள்ளும், மற்றவர்களிடமிருந்து நம்மையே அழித்துக்கொள்ளும் உணர்வு.

 

மேற்காணும் மூன்றும் திருப்பம் அடைகின்றன.

 

அனனியா என்னும் சீடர் வழியாக ஆண்டவர் அவரை மீண்டும் சந்திக்கிறார்.

 

சவுலின் தயார்நிலை நமக்கு ஆச்சர்யம் தருகிறது. தலைமைச்சங்கத்தின் அதிகாரம் பெற்ற பவுல் சாதாரண சீடர் ஒருவர் கூறிய சொற்களுக்குச் செவிமடுக்கிறார். பவுலுடைய வாழ்வின் நோக்கம் அங்கே அவருக்கு வெளிப்படுத்தப்படுகிறது. நம் வாழ்வின் நோக்கம் நமக்கு அறிவிக்கப்படும் வரை நாம் செய்ய வேண்டிய செயல்களை நாம் செய்துகொண்டிருக்க வேண்டும். நமக்கு அறிவிக்கப்படும்போது சரணாகதி அடைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

இங்கே அனனியா இறைவேண்டல் செய்யும்போது சவுல்மேல் தூய ஆவியார் பொழியப்படுகிறார். எந்தவொரு ஆரவாரமும் இன்றி ஓர் அறைக்குள் இறங்கி வருகிறார் ஆவியார். தன் வாழ்வின் நோக்கம் அறிந்த பவுல் உடனடியாக உணவருந்துகிறார்.

 

நம் வாழ்வின் பயணங்களைத் தடுத்து நிறுத்துகிற ஆண்டவர் நம் வாழ்வின் பாதையையும் நோக்கத்தையும் மாற்றுகிறார்.

 

‘நானும் அவரால் வாழ்கிறேன்’ என்று மொழிகிற இயேசு, நம் அனைவருக்கும் வாழ்வுதருபவராக இருக்கிறார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Image courtesy: ThinkingFaith

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: