இன்றைய இறைமொழி
வியாழன், 24 ஜூலை ’25
பொதுக்காலம் 16-ஆம் வாரம் – வியாழன்
விடுதலைப் பயணம் 19:1-2, 9-11, 16-20. மத்தேயு 13:10-17
ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த மோசேக்கு ஓரேபு மலையில் (கடவுளின் மலை) தோன்றுகிற ஆண்டவராகிய கடவுள், ‘எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அடிமை வேலை வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன் … அவர்களை விடுவிக்கவும் … நாட்டுக்கு அழைத்துச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்’ என்று கூறுகிறார் (காண். விப 3:7-8).
கடவுளின் மாட்சி சீனாய் மலையில் இறங்கி வருவதை இன்றைய முதல் வாசகம் நம் கண்முன் கொண்டுவருகிறது. நகர்ந்துகொண்டே இருந்த மக்கள் சீனாய் மலை அடிவாரத்தில் பாளையம் இறங்கித் தங்குகிறார்கள். அவர்கள் தங்களையும் தங்கள் ஆடைகளையும் இருப்பிடங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இடிமுழக்கம், மின்னல் வெட்டு, கார்மேகம், புகை, நெருப்பு, மலைஅதிர்வு, எக்காள முழக்கம் என மிகவும் அச்சத்துக்குரியதாக இருக்கிறது கடவுள் இறங்கிவரும் நிகழ்வு.
தூரத்தில் இருந்த கடவுள் மக்கள் நடுவே நெருங்கி வருகிறார்.
நற்செய்தி வாசகத்தில், எடுத்துக்காட்டுகள் வழியாகத் தாம் பேசுவதன் காரணத்தை எடுத்துரைக்கிற இயேசு, ‘அவர்கள் கண்டும் காண்பதில்லை. கேட்டும் கேட்பதில்லை. புரிந்துகொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்’ என்கிறார். தொடர்ந்து, ‘பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள். ஆனால், அவர்கள் கேட்கவில்லை’ என்று தம் சீடர்கள் பெற்றுள்ள மேன்மையான அனுபவத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
கடவுள் இயேசுவின் வழியாக மக்கள் நடுவே இறங்கி வருகிறார், அவர்களோடு உரையாடுகிறார், அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
முதல் நிகழ்வில் மோசேயுடன் மட்டுமே உரையாடுகிறார் கடவுள். இயேசுவில் அனைத்து தடைகளும் திரைகளும் மறைகின்றன. இதையே எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், ‘நீங்கள் வந்துசேர்ந்திருப்பது தொட்டுரணக்கூடிய, தீப்பற்றியெரிகிற, சுழற்காற்று வீசுகிற சீனாய் மலை அன்று … மாறாக, சீயோன் மலை’ என்கிறார் (காண். எபி 12:18-22). இரக்கத்தின் அரியணையான இயேசுவை நாம் அணுகிச் செல்ல முடியும்.
பழைய ஏற்பாட்டில், ‘இடம்சார்ந்த இறைப்பிரசன்னம்’, புதிய ஏற்பாட்டில், ‘ஆள்சார்ந்த இறைப்பிரசன்னமாக’ மாறுகிறது. கடவுள் தனிமனிதரில் குழுமத்தில் உறைகிறார். தனிமனிதரின் மாண்பு உயர்கிறது.
இறைவார்த்தை வழியாக, அருளடையாளங்கள் வழியாக நம் நடுவில் ஆண்டவராகிய கடவுள் பிரசன்னமாகி இருக்கிறார். அவரின் உடனிருப்பில் திருமுன்னிலையில் வாழ்கிறோம் என்னும் உணர்வை நாம் பெறுவதோடு, அந்த உடனிருப்பை நாம் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: