• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

காலத்தை ஆய்ந்து பார்த்தல். இன்றைய இறைமொழி. வெள்ளி, 24 அக்டோபர் ’25.

Friday, October 24, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இயேசுவின் இரண்டாம் வருகை விவேகம் புனித அந்தோனி மரிய கிளாரட் பவுலின் மனப்போராட்டம் நிறைவுகாலம் இறுதிக்காலம் இறையரசின் காலம் காலத்தை அறிதல் தன்னுணர்வு நுண்ணுனர்வு இயேசுவின் உடனிருப்பு நீதியின் கரம் அமைதி-சமரசம்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 24 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் வாரம், வெள்ளி
புனித அந்தோனி மரிய கிளாரட், நினைவு
உரோமையர் 7:18-25. லூக்கா 12:54-59

 

காலத்தை ஆய்ந்து பார்த்தல்

 

இறுதிநாள்கள் பற்றிய இயேசுவின் போதனை இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. முதல் பகுதியில், வானின் தோற்றத்தை ஆராய்ந்து அறியும் ஆற்றல் பெற்றிருந்த தன் சமகாலத்தவர் தன் வருகையின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து அறியவில்லையே என்று சலனப்படுகின்றார். இரண்டாம் பகுதியில், எதிரியுடன் செய்ய வேண்டிய சமரசத்தில் உள்ள வேகம் பற்றி முன்மொழிகின்றார். வழக்கு வேகமாக முடித்துவிடப்படவில்லை என்றால் அவற்றில் நிறைய முடிச்சுகள் விழத் தொடங்கும். அந்த முடிச்சுகள் நமக்கு எதிராகவே திரும்பிவிடும். ஆகையால், வேகம் இருத்தல் வேண்டும்.

 

விழிப்புநிலை பற்றிய இயேசு தொடர்ந்து விவேகமும் வேகமும் பற்றிப் பேசுகின்றார்.

 

நமக்குமுன் மற்றும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தெளிவுநிலை நமக்கு அவசியம். ஏனெனில், அத்தகைய தெளிவுநிலை நாம் மேற்கொள்கின்ற பல முடிவுகளைப் பாதிக்கும்.

 

சில நேரங்களில் நாம் பிரச்சினைகளைத் தள்ளிப் போடுகின்றோம். தள்ளிப் போடப்படுகின்ற பிரச்சினைகள் சில நேரங்களில் மறைந்துவிடுகின்றன. சில நேரங்களில் பெரிதாகிவிடுகின்றன. அம்மாதிரியான நேரங்களில் வேகம் அவசியமாகிறது.

 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 7:18-25), பவுல் தன் உள்ளத்தில் நடக்கின்ற போராட்டம் பற்றிப் பதிவு செய்கின்றார். தான் நன்மை செய்ய விரும்பினாலும் தன்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது என்று தன் முரண்பட்ட நிலையை எண்ணி வருந்துகின்றார். சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று தன்னை விடுவிக்கும் கடவுளுக்கு நன்றி கூறுகின்றார்.

 

நம் உள்ளத்தில் நாம் எதிர்கொள்ளும் போராட்டம் நம் விவேகத்திற்கும் வேகத்திற்கும் தடையாக இருக்கின்றது. பவுல் போல, நாமும், ‘அந்தோ! இரக்கத்தக்க மனிதன் நான்!’ என்ற நிலையில்தான் வாழ்க்கை நகர்கிறது.

 

நிறைவுகாலம் அல்லது இறுதிக்காலம் பற்றிய இயேசுவின் போதனை இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. தனது சமகாலத்து பாலஸ்தீனத்தில் விளங்கிய காலநிலையை மேற்கோள் காட்டி, அந்தக் காலநிலையை அறிந்திருக்கின்ற மக்கள், ‘இக்காலத்தை, அதாவது, இறையரசின் காலத்தை ஆராயாமல் இருப்பது எப்படி?’ என்ற கேள்வியை எழுப்புகின்றார்.

 

மேலும், நடுவரிடம் இழுத்துப் போகுமுன் செய்ய வேண்டிய சமரசம் என்னும் உருவகத்தின் பின்புலத்தில், இறையாட்சி பற்றிய அறிதலின் உடனடித் தன்மையையும் எடுத்துரைக்கின்றார்.

 

முதலில், காலத்தை அறிதல்.

 

காலத்தை அறிவதற்கு முதலில் தேவை, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தன்னுணர்வும், நுண்ணுனர்வும். இவை இரண்டும் இல்லாமல் காலத்தை அறிவது சாத்தியமில்லை.

 

மேலும், காலத்தை அறிதல் உடனடியாக நம் செயல்களின் திசையைத் திருப்புகிறது. மழை வருவது போலத் தெரிந்தவுடன், நம் கால்கள் வேகமாக நடக்கின்றன. மாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்க ஓடுகிறோம், நம் அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைக்கின்றோம், மின்னணுச் சாதனங்களை மின்னேற்றியிலிருந்து அகற்றுகிறோம், மெழுகுதிரி மற்றும் தீப்பெட்டி எடுத்து வைக்கிறோம், சுடுதண்ணீர் போட்டு சேமித்து வைத்துக்கொள்கிறோம். ஆக, மேகங்களிலிருந்து விழும் சில துளிகள் என்னை எட்டியவுடன், நான் அதுவரை பார்த்துக்கொண்டிருந்த எல்லா வேலைகளையும் உதறிவிட்டு, என் முதன்மைகளை மாற்றிக்கொள்கிறேன்.

 

இயேசுவின் உடனிருப்பும் அவர் தரும் செய்தியும் புதிய புதிய காலநிலை மாற்றங்கள் போல என்னைச் சுற்றி வருகின்றன. நான் அவற்றை அறியவும், அந்த அறிதலுக்கு ஏற்ப என் முதன்மைகளை மாற்றிக்கொள்ளவும் செய்கிறேனா?

 

இரண்டாவதாக, ‘நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்’ என எச்சரிக்கிறார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில், பணம், அதிகாரம், மற்றும் ஆள்பலத்தைப் பொருத்தே நீதியின் கரம் உயரவும் தாழவும் செய்தது. தன்னை வலுவற்றவர் என அறிந்த ஒருவர், உடனடியாக எதிரியிடம் சரணடைவது மேல் என்றும், தாமதித்தால் தண்டனையின் கொடுமை அதிகமாகிவிடும். கடைசிக் காசும் என்னிடமிருந்து போய்விடும்.

 

இதில் மறைமுகமாக இயேசு சொல்வது என்ன? நாம் எல்லாரும் ஏதோ ஓர் ஆட்சியாளரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். செல்லும் வழியில் எந்தவொரு வன்முறையும் வன்மமும் வேண்டாம். நமக்குத் தேவையானதெல்லாம் அமைதியும் சமரசமும்தான்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: