• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

என் கப்பர்நாகும் எங்கே? இன்றைய இறைமொழி. ஞாயிறு, 25 ஜனவரி ’26.

Sunday, January 25, 2026   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி கப்பர்நாகும்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 25 ஜனவரி ’26
ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு
இறைவார்த்தை ஞாயிறு

எசாயா 9:1-4. திபா 27. 1 கொரி 1:10-13, 17. மத் 4:12-23

 

என் கப்பர்நாகும் எங்கே?

 

இணையதளத்தில் தற்போது அதிகமாக பேசப்படும் ஜோதிடம் ‘கால் ரேகை.’ அதாவது, நம் கால்களின் ரேகைகள் இந்தப் பூமியின் கடக, மகர ரேகையோடு ஒத்துப் போகிறதா? நம் கால்கள் எங்கே பொருந்துகின்றன? நம் இருத்தலும் இயக்கமும் இந்த பிரபஞ்சத்தோடு ஒத்துப் போகிறதா? சில பத்தாண்டுகளுக்கு முன்பு ‘இடம்’ என்பது நாம் பிறந்த இடம் அல்லது ஊர் என்று மட்டும் கருதப்பட்டது. இன்று பூகோள வரையறைகள் மிகவும் நெகிழ்வடைந்துவிட்டன. இடம் விட்டு இடம் நகர்வது மிகவும் எளிதாக மாறிவிட்டது. இணையதளம் பூகோள வரையறைகளை முழுவதும் நீக்கிவிட்டது. இந்த உலகத்தில் நமக்கென ஓர் இடத்தை நாம் தேர்ந்துகொள்கிறோம். அங்கே வேரூன்றி நாம் கிளைபரப்புகிறோம். ‘கடவுளின் கையில் நம் நேரம் உள்ளது என்றால், நம் கையில் நம் இடம் உள்ளது.’

 

இந்தப் பிரபஞ்சத்தில் நமக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தைக் கண்டுபிடித்தலே நம் வாழ்வின் இலக்கு. எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ, எந்த இடத்தில் நாம் எல்லாரையும் அணைத்துக்கொள்கிறோமோ, எந்த இடத்தில் நாம் கனிதந்து வளர்கிறோமோ அந்த இடமே நம் இடம்.

 

அந்த இடமே நம்முடைய கப்பர்நாகும்!

 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 9:1-4), ‘செபுலோன் நாடு, நப்தலி நாடு’ என்று உருவகமாகவும், நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 4:12-23), ‘செபுலோன் நாடு, நப்தலி நாடு, பெருங்கடல்வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பால் உள்ள நிலப்பரப்பு, பிற இனத்தவரின் கலிலேயப் பகுதி’ என்று உருவகமாகவும், ‘கப்பர்நாகும்’ என்று நேரிடையாகவும் அழைக்கப்படுகிறது கப்பர்நாகும்.

 

கலிலேயக் கடலின் (ஏரியின் கரையோராமாய்) ஹஸ்மோனியர்களின் ஆட்சிக்காலத்தில் (கிமு 2ஆம் நூற்றாண்டு) ஏற்படுத்தப்பட்டு ஏறக்குயை கிபி 11-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட போரினால் ஆள்கள் வெளியேறி இன்று வெறும் தூண்களும் உடைந்த வீடுகளும் கற்களும் எஞ்சி நிற்கும் நகரம்தான் கப்பர்நாகும். இயேசுவின் சமகாலத்தில் இது ஒரு மீனவ நகரம். இந்நகரின் மக்கள்தொகை ஏறக்குறைய 1500. திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், மற்றும் மத்தேயு ஆகியோரின் சொந்த ஊர் இது. இங்கேதான் இயேசு நூற்றுவர்தலைவனின் மகனைக் குணமாக்குகிறார். முடக்குவதாதமுற்ற ஒருவரை நான்கு பேர் கூரையைப் பிரித்து இறக்கியதும் இங்கேதான். கப்பர்நாகும் எதிர்மறையான பதிவையும் விவிலியத்தில் பெற்றுள்ளது: பெத்சாய்தா, கொராசின் நகரங்களோடு, இயேசு கப்பர்நாகுமையும் சபிக்கின்றார் (காண். மத் 11:23).

 

‘இயேசு நாசரேத்தை விட்டு அகன்று … கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்’ என்று இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது.

 

இயேசு ஏன் கப்பர்நாகுமுக்குச் செல்ல வேண்டும்?

 

இரண்டு நிலைகளில் இந்தக் கேள்விக்கு விடை தரலாம். ஒன்று, நாசரேத்து இயேசுவின் தனிவாழ்வின் அல்லது மறைந்த வாழ்வின் மையம். இந்த மையத்திலிருந்து விலகும் இயேசு தன் பொதுவாழ்வின் அல்லது பணிவாழ்வின் மையமாக கப்பர்நாகுமைத் தேர்ந்துகொள்கிறார். இரண்டு, மேன்மக்களும், அரசக்குடிகளும் வாழ்ந்த எருசலேமை, அல்லது சமாரியர்களின் புனித தலம் என்றழைக்கப்பட்ட கெரிசிம் நகரைத் தேர்ந்துகொள்ளாமல், அந்நியப் படையெடுப்புக்களால் சூறையாடப்பட்ட, பிறப்பில் யூதர்களாக இருந்தாலும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியதால் புறவினத்தார் என்று நிலையில் கருதப்பட்டு வஞ்சிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த இடமாகிய கப்பர்நாகுமைத் தேர்ந்துகொள்வதன் வழியாக, தன்னுடைய இறையாட்சிப் பணி மேன்மக்களுக்கும், அரசகுடிகளுக்கும் அல்ல, அது புனித இடம் சார்ந்ததும் அல்ல, மாறாக, வலுவற்றவர்களுக்கும், வெகுசன மக்களுக்கும் உரியது என்பதை இயேசு தெளிவுபடக் கூறுகிறார்.

 

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில், ‘இப்பிரபஞ்சத்தில் இது என்னுடைய இடம்’ என்று இயேசு தெரிந்து கொண்ட இடம் ‘கப்பர்நாகும்’.

 

விவிலியத்தில் ‘இடம்’ மிகவும் முக்கியமானது. முதல் ஏற்பாட்டில் இதை மிக அழகாகக் காணலாம். ‘பாபேல்’ என்ற இடத்தில் ஒன்றாகக் கூடியிருந்தவர்களை வெளியேற்றி அவர்களை பல நாடுகளுக்கு இடம்பெறச் செய்கின்றார் கடவுள். ஊர் என்ற இடத்தில் வாழ்ந்த ஆபிரகாமை கானானுக்கு இடம் மாற்றுகிறார். பெயர்செபாவில் குடியேறிய யாக்கோபு காரானுக்கு இடம் பெயர்கின்றார். யாக்கோபு மீண்டும் பெத்தேலுக்கு வருகின்றார். யோசேப்பு அங்கிருந்து விற்கப்பட்டு எகிப்துக்குச் செல்கின்றார். எகிப்தில் ஆளுநராகித் தன் தந்தையையும் வீட்டாரையும் அங்கே அழைத்துக்கொள்கின்றார். அங்கிருந்து விடுதலைப் பயணம் தொடங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டிற்கு வருகின்றார்கள். இந்த இடமாற்றம் அல்லது இடம்பெயர்தல் ஒரு தாநிகழ்வு அல்ல. மாறாக, அது இறைவனின் நோக்கம் நிறைவேறுகின்ற ஒரு நிகழ்வு. ஏனெனில், ஒவ்வொருவர் இடம் மாறும்போதும் விவிலியத்தில் அவருடைய வாழ்க்கை தலைகீழ் மாற்றம் அடைகிறது. அந்த மாற்றத்தில் கடவுள் செயலாற்றுகிறார் என்பதை அந்தக் கதைமாந்தர் அறிந்துகொள்கிறார்.

 

இன்றைய நற்செய்தியில் இயேசு கப்பர்நாகுமிற்கு வருகின்றார்.

 

‘இதுதான் தன்னுடைய இடம்’ என்று அவர் அதை அறிந்துகொள்கிறார். நாசரேத்துடன் தான் கொண்டிருந்த தொப்புள் கொடி உறவை அறுத்துக்கொள்கிறார். இந்த இடத்தில் இயேசு மூன்று செயல்கள் செய்வதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அல்லது இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

 

அ. நற்செய்தி அறிவிப்பு (மத் 4:12-17)

 

ஆ. முதல் சீடர்கள் அழைப்பு (4:18-22)

 

இ. திரளான மக்களுக்குப் பணி (4:23)

 

முதலில், ‘மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்;டது’ என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். இரண்டாவதாக, தன்னுடைய விண்ணரசுப் பணிக்கான நுகத்தடித் தோழர்களாக, உடனுழைப்பாளர்களாக, திருத்தூதர்களாகத் திகழ நால்வரைத் தெரிவு செய்கிறார். இறுதியாக, அப்பகுதிகளில் சுற்றி வந்து மக்களிடையே இருந்த நோய்நொடிகளைக் குணமாக்குகின்றார்.

 

இதுதான் பிரபஞ்சத்தில் தன்னுடைய இடம் என்பதை இயேசு எப்படிக் கண்டுகொள்கின்றார்? இதற்கு மூன்று காரணங்களை நாம் நற்செய்தி வாசகத்தில் பார்க்கலாம்:

 

அ. இறைவாக்கு நிறைவேறுகிறது

 

தன்னுடைய பணிவாழ்வை இயேசு எசாயா இறைவாக்கினரின் நிறைவாகப் பார்க்கிறார். இந்த இறைவாக்கையே இன்றைய முதல்வாசகத்தில் வாசிக்கின்றோம். வடக்கே இஸ்ரயேல் மக்கள் போர்களால் அலைக்கழிக்கப்பட்ட நேரம், அசீரியாவின் படையெடுப்பால் அடிமைகளாக நாடுகடத்தப்பட்ட நேரத்தில் இறைவாக்குரைக்கும் எசாயா, வரவிருக்கும் அரசர் பற்றிய முன்னறிவிப்பில், இருளிலும் அடிமைத்தனத்தில் குளிரிலும் இருந்தவர்களுக்கு ஒளி உதித்தது என்று அறிவிக்கின்றார். மேலும், மகிழ்ச்சி, அக்களிப்பு, களிகூர்தல் என்று மூன்று நிலைகளில் அவர்கள் தாங்கள் இழந்த மகிழ்ச்சியைக் கண்டுகொள்கிறார்கள். மேலும், நுகம், தடி, மற்றும் கொடுங்கோல் ஒடித்துப்போடப்படுவதால் அடிமைத்தனம் முற்றிலும் அழிகிறது. ஆக, இதிலிருந்து இயேசுவின் பணி மற்றவர்கள் இழந்த மகிழ்ச்சியை அவர்களுக்குத் திரும்ப வழங்கவும், மற்றவர்களின் அடிமைத்தனத்தை அழிப்பதும் என்பது தெரிகிறது.

 

நம்முடைய வாழ்விலும் பிரபஞ்சத்தில் நம் இடத்தைக் கண்டறிவதற்கான முதல் படி இதுதான்: ‘எனக்கென இறைவன் முன்குறித்துவைத்த நோக்கத்தை நான் அறிவது.’ இது சிலருக்கு எளிதாகவும் உடனடியாகவும் இருக்கலாம். சிலருக்கு மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம்.

 

ஆ. பாதை மாற்றம்

 

தன்னுடைய முதல்சீடர்களை அழைக்கின்ற இயேசு அவர்களின் பாதையை மாற்றுகின்றார். கடலில் ஈரமாகி நின்றவர்களின் கால்கள் புழுதியில் நடக்குமாறு அவர்களின் பாதையைத் திருப்பிவிடுகின்றார். என்னால் மற்றவர்களின் வாழ்க்கை திரும்ப வேண்டும். இது அடுத்த அறிகுறி. இன்று என்னால் எத்தனை பேருடைய வாழ்க்கைப் பாதை மாற்றம் பெற்றிருக்கிறது?

 

இ. நோய் குணமாதல்

 

நோய் என்பது குறைவு. அக்குறைவை நிறைவாக்குகிறார் இயேசு. இயேசுவைச் சந்தித்த அனைவரும் குறைகள் நீங்கி நிறைவாகச் செல்கின்றனர்.

 

என்னுடைய இடத்தை நான் கண்டுபிடித்தவுடன் என்னுள் இருக்கும் எல்லாக் குறைகளும், தீய எண்ணங்களும் மறைய ஆரம்பிக்கும். நான் உள்ளத்தில் நலம் பெறுவேன். என்னுடைய வறுமை, அறியாமை, குறுகிய எண்ணம், கோபம், குற்றவுணர்வு என எல்லாம் மறைய ஆரம்பிக்கும். ஏனெனில், நான் என்னுடைய உள்ளத்தை நேர்முக எண்ணங்களால் நிரப்பத் தொடங்குவேன்.

 

ஆக, இறைவனின் நோக்கம் நிறைவேறும்போது, என் வாழ்வுப் பாதை மாற்றம் அடைந்து நான் மற்றவரின் பாதையைத் திருப்பும்போது, நான் என் குறைகளையும் மற்றவர்களின் குறைகளையும் களைய முற்படும்போது நான் பிரபஞ்சத்தின் என்னுடைய இடத்தைக் கண்டறிந்தவன் ஆவேன்.

 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 1:10-13,17) பவுல், கொரிந்து நகரத் திருஅவையில் விளங்கிய பிளவுகளைக் கடிந்துகொள்கின்றார். ‘நான் பவுலைச் சார்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சார்ந்தவன், நான் கேபாவைச் சார்ந்தவன், நான் கிறிஸ்துவைச் சார்ந்தவன்’ என்று சொல்லி பிளவுபட்டுக்கிடக்கின்றனர் கொரிந்து மக்கள். வெளிப்புற அடையாளைத்தைப் பற்றிக்கொண்டிருப்பது நாம் நம்முடைய கப்பர்நாகுமிற்கு இன்னும் வரவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. கப்பர்நாகுமிற்கு வந்த நபர் பிரிவினை பாராட்டமாட்டார். அடுத்தவரோடு தன்னை எது இணைக்கிறது என்று பார்ப்பாரே தவிர, மற்றவரிடமிருந்து எது தன்னைப் பிரிக்கிறது என்பதை அவர் பார்க்கமாட்டார்.

 

இறுதியாக,

 

இன்று நான் எங்கே இருக்கிறேன்? என்னுடைய கப்பர்நாகுமை நான் கண்டுபிடித்துவிட்டேனா? என்னுடைய கப்பர்நாகுமில் மூன்று விடயங்கள் இருக்க வேண்டும்: ஒன்று, என்னுடைய வாழ்வின் நோக்கம். இரண்டு, என்னுடைய நுகத்தடித் தோழர்கள், நண்பர்கள், அல்லது வாழ்க்கைத்துணை. மூன்று, என்னுடைய வாழ்வால் என் குடும்பமும் மற்றவர்களும் அடையும் பலன். இதையே உருவமாகச் சொல்ல வேண்டுமென்றால், என் வாழ்வின் நோக்கம் என்பது வேர், நுகத்தடித் தோழர்கள் என்பவர்கள் தண்டு, நான் கொடுக்கும் பலன் நான் விரிக்கும் கிளைகள், அவை கொடுக்கும் கனிகள். இந்த மூன்றும் ஒன்றோடொன்று இணைந்திருப்பவை.

 

‘நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன். அதையே நான் நாடித் தேடுவேன். ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும். ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்’ என்று தன்னுடைய கப்பர்நாகுமை ஆண்டவரில் தேடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். 27:4).

 

இறுதியாக நாம் செல்ல வேண்டிய கப்பர்நாகும் எது என்பதை மேற்காணும் வசனம் சொல்கிறது: ‘ஆண்டவரின் இல்லம்.’

 

இயேசு பணியைத் தொடங்கிய உடைந்த ஊராக நான் இருந்தாலும், என்னையும் கப்பர்நாகுமாக நினைத்து அவர் என்னிடம் வருகிறார். எதற்காக? ‘என் கப்பர்நாகும் எங்கே’ என்று காட்டுவதற்காக!

 

இன்றைய ஞாயிற்றை நம் திருஅவை ‘இறைவார்த்தை ஞாயிறு‘ எனக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து, ‘கிறிஸ்து பற்றிய நற்செய்தி உங்களுள் நிறைவாகக் குடிகொள்வதாக’ (கொலோ 3:16). இறைவார்த்தை நமக்கு ஒளியாக இருக்கிறது. இறைவார்த்தை வழியாக நாம் இறைத்திருவுளம் அறிகிறோம். இந்த இறைவார்த்தையை அறிவிக்க பவுல் அழைப்பு பெற்றார். இறைவார்த்தை அறிவிப்புக்காக இயேசு முதற்சீடர்களைத் தெரிந்துகொள்கிறார்.

 

இறைவார்த்தையே இன்றைய நாளில் நம் கப்பர்நாகுமாக மாறட்டும். ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையை வாசிப்போம், கற்போம், புரிந்து கொள்வோம், பகிர்ந்துகொள்வோம், இறைவேண்டல் செய்வோம், வாழ்வோம்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: