இன்றைய இறைமொழி
திங்கள், 25 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 21-ஆம் வாரம், திங்கள்
1 தெசலோனிக்கர் 1:1-5, 8-10. மத்தேயு 23:13-22
நம்பிக்கைநிறை சாட்சியம், வெற்று சமயம் அல்ல!
தெசலோனிக்க நகர் மக்களுக்கு ‘நற்செய்தியை வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டுவந்ததாக’ மகிழ்கிறார் பவுல் (1 தெச 1:5).. அவர்கள் நம்பிக்கை உண்மையாக இருந்ததால் அது அனைவரிடமும் பரவியது (வ. 8).
‘இன்றைய மக்கள் போதகர்களுக்கு அல்ல, மாறாக, சாட்சிகளுக்கே செவிமடுக்கிறார்கள்’ என்கிறார் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல்.
நம் கிறிஸ்தவ நம்பிக்கையும் வெறும் சொல்லளவைக் கடந்து மற்றவர்களுக்கு வெளிப்படுகிற செயல்களாக மாற வேண்டும்: செயலில் வெளிப்படும் இறைவேண்டல், பணியில் வெளிப்படும் அன்பு, பொறுமையில் வெளிப்படும் எதிர்நோக்கு. என் நம்பிக்கையைக் காண்கிற மற்றவர்கள் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என் வாழ்க்கை இருக்கிறதா?
பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் கடிந்துகொள்கிறார் இயேசு. அவர்கள் விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறார்கள் (மத் 23:13). உண்மையான சமய வழிபாட்டை விடுத்து சடங்குமுறை ஆணையிடுதல்களை முதன்மைப்படுத்துகிறார்கள் (வவ. 16-22). கடவுளின் திருமுன்னிலையை மறந்து சடங்குகளை மையப்படுத்தி வாழ்ந்தார்கள்.
நம்பிக்கை இல்லாமல் வெறுமனே செய்யப்படும் சடங்குகள் அனைத்தும் மூடநம்பிக்கை என எச்சரிக்கிறது கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (எண். 2111). உண்மையான சமய வழிபாடு இதயத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் வருகிறது.
வெறும் தலைப்புகளையும் அடையாளங்களையும் இடங்களையும் பற்றிக்கொண்டு அவற்றின் நோக்கத்தை மறக்கும்போது வெற்று சமயம் என்னும் சோதனைக்குள் நாமும் விழுகிறோம். திருஅவையின் அருளடையாளங்கள், இறைவேண்டல்கள், மற்றும் பக்தி முயற்சிகள் அனைத்தும் கடவுளை நோக்கி நம்மை நடத்தவேண்டுமே தவிர, கடவுளுடைய இடத்தைப் பிடித்துவிடக் கூடாது.
தெசலோனிக்க நகர் மக்கள் ‘சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான வாழும் கடவுளுக்கு ஊழியம் புரிய வந்தார்கள்’ (1 தெச 1:9-10). அவர்களுடைய நம்பிக்கை கடவுளை நோக்கிய பயணமாக இருந்தது.
திருஅவை என்பது திருப்பயணிகளின் மக்கள் கூட்டம் என வரையறுக்கிற இரண்டாம் வத்திக்கான் சங்கம் (‘மக்களினத்தாரின் ஒளி, 48) நாம் அனைவரும் கிறிஸ்துவின் மாட்சிநிறை வருகையை எதிர்நோக்கிப் பயணம் செய்கிறோம் என்கிறது.
இன்றும் நாம் கொண்டிருக்கிற சிலைகளான பணம், இறுமாப்பு, சௌகரியங்கள் ஆகியவற்றிலிருந்து நம் கண்களைத் திருப்பி கடவுளை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்.
நிறைவாக
நம்பிக்கை என்பது வெறும் சொற்கள் அல்ல, மாறாக. வல்லமைநிறை சான்று என நமக்குக் கற்றுத்தருகிறார்கள் தெசலோனிக்க நகர் மக்கள். வெற்று சமயம் கடவுளிடமிருந்து மற்றவர்களைத் தூரமாக்கி விடுகிறது. சிலைகளை விட்டு நம் உள்ளத்தைத் திருப்பும்போது, நாமும் தெசலோனிக்க நகர் மக்கள்போல, ‘வாழ்கின்ற உண்மையான கடவுள் நம் நடுவே இருக்கிறார்’ எனச் சொல்ல முடியும்.
தெசலோனிக்க நகர் மக்களை இறைவேண்டலில் நினைவுகூர்ந்து கடவுளுக்கு நன்றி கூறுகிற பவுல், ‘செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் பெற்றுள்ள மன உறுதியையும்’ பாராட்டுகிறார். மேலாட்டமான சடங்குகளை விடுத்து கடவுளை நம்பிக்கையும் அன்பிலும் எதிர்நோக்கிலும் கொண்டாடும்போது நாம் மற்றவர்களை விண்ணகம் நோக்கி அழைத்துச் செல்கிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: