
இன்றைய இறைமொழி
திங்கள், 26 ஜனவரி ’26
பொதுக்காலம் மூன்றாம் வாரம், திங்கள்
புனிதர்கள் திமொத்தேயு, தீத்து – நினைவு
2 திமொ 1:1-8. மாற் 3:22-30
இன்று புனித திமொத்தேயு, தீத்துவை நினைவுகூர்கிறோம். தொடக்கத் திருஅவையில் முறையே எபேசு மற்றும் கிரேத்து நகர்களின் ஆயர்களாகத் திகழ்ந்த இந்த இளவல்கள் பவுலின் உடனுழைப்பாளர்களாகவும், நம்பிக்கையில் அவரின் மகன்களாகவும் திகழ்கிறார்கள். குறைந்த வயதிலேயே சபைக் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட இவர்களுக்குத் தம் கடிதங்கள் வழியாகத் தொடர் பயிற்சியும் ஊக்கமும் வழங்குகிறார் பவுல்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்’ என்று பவுல் திமொத்தேயுவுக்கு எழுதுவதை வாசிக்கிறோம். கடவுளின் அருள்கொடை திமொத்தேயுவுக்கு அவருடைய அருள்பொழிவின்போது வழங்கப்பட்டாலும் அது தொடர்ந்து உயிரோட்டம் கொண்டதாக இருக்க வேண்டும்.
இரண்டு வகையான உள்ளத்தை முன்மொழிகிறார் பவுல்: (அ) கோழை உள்ளம், (ஆ) வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளம். கோழை உள்ளம் அனைத்தையும் அனைவரையும் கண்டு அச்சம் கொள்கிறது. தன்னையே மூடிக்கொள்கிறது. மற்றவர்களைத் தனக்குள்ளேயே தீர்ப்பிடுகிறது. வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளம் தன்னையே தொடர்ந்து திறக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது … தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று இயேசுவின்மேல் குற்றம் சுமத்துகிறார்கள் மறைநூல் அறிஞர்கள். ‘பாகால் செபூப்’ என்னும் புறஇனத்துக் கடவுளே ‘பெயல்செபூல்’ என அழைக்கப்பட்டார். நாம் சாராத மற்ற சமயத்துக் கடவுளர்களை சாத்தான்கள் என்று சொல்வதும், நம்மைச் சாராத மற்றவர் ஒருவரை தீயவர் என்று சொல்வதும் மானிடர் வாழ்வில் காலங்காலமாக நடந்து வருகிறது.
தம்மேல் குற்றம் சாட்டப்பட்டவுன், ‘இல்லை! நான் தூய ஆவியால் பிறந்தவர்’ என்று எந்தவொரு விளக்கமும் அவர்களுக்குத் தரவில்லை. மாறாக, அவர்களைச் சிந்தனைக்கு அழைக்கிறார். ‘இடிந்துவிழும் வீடு,’ ‘கொள்ளையடிக்கப்படும் வீடு’ என்னும் சொல்லோவியங்கள் வழியாக, அவர்களைத் தன்னாய்வு செய்ய அழைக்கிறார். இயேசுவின் சமகாலத்து யூத சமயம் இடிந்துவிடும் வீடாக இருந்தது. ஏனெனில், சடங்குகளை மையப்படுத்தியதாகவும் பிறழ்வுகள் நிறைந்ததாகவும் இருந்தது. ‘கொள்ளையடிக்கப்படும் வீடு’ என்பது இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனம். உரோமையர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தார்கள். சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு வாழ்வு சீர்குலைந்து இருந்தது.
இயேசு தம் சொற்களால் ஒரு புரட்சியை உருவாக்குகிறார்: ‘உங்கள் சமயம் இடிந்துபோன வீடாகவும், உங்கள் ஊர் கொள்ளையடிக்கப்பட்ட வீடாகவும் நிற்க, நீங்கள் என்மேல் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறீர்கள்!’
மேலும், தீய ஆவிமேல் ஆற்றல் உள்ளதால் தாம் தீய ஆவியைவிட வலிமை வாய்ந்தவர் என்று உரைக்கிறார்.
இன்னொரு பக்கம், தாமே வலிமை வாய்ந்த வீடு என்றும் உரைக்கிறார் இயேசு. வலிமைவாய்ந்த தம் வீட்டைக் கொள்ளையிட வேண்டுமெனில் தம்மைக் கட்டி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.
தம்மிடம் இருப்பது தீய ஆவி அல்ல, மாறாக, தூய ஆவியார் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக, ‘தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் எக்காலத்திலும் மன்னிப்பு பெற மாட்டார்’ என்று கூறுகிறார் இயேசு.
இன்றைய வாசகம் நமக்குத் தரும் பாடம் என்ன?
திருமுழுக்கின் வழியாக நம்மேல் பொழியப்பட்ட தூய ஆவியாரின் தூண்டுதலை நாம் உயிரோட்டமுடன் வைக்க வேண்டும். வலிமை வாய்ந்த இல்லமாக நாம் திகழ வேண்டும். கோழை உள்ளம் நம்மை பிளவுபட்ட வீடாக மாற்றுகிறது. வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்டிருக்கும்போது நம் இல்லத்தை நாம் பாதுகாத்துக்கொள்கிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: