• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கனிவும் தூய்மையும் நிறைந்த நம்பிக்கை. இன்றைய இறைமொழி. செவ்வாய், 26 ஆகஸ்ட் ’25.

Tuesday, August 26, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி நம்பிக்கை கனிவு தூய்மை மறைப்பணி தூய நோக்கம் கிறிஸ்தவ சாட்சியம் உளத்தூய்மை வெளியடையாளம் நீதி-இரக்கம்-நம்பிக்கை தூய்மைநிறை உள்ளம் நேர்மை-துணிவு

இன்றைய இறைமொழி
செவ்வாய், 26 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 21-ஆம் வாரம், செவ்வாய்
1 தெசலோனிக்கர் 2:1-8. மத்தேயு 23:23-26

 

கனிவும் தூய்மையும் நிறைந்த நம்பிக்கை

 

  1. துணிவுநிறை மறைப்பணியும் தூய்மைநிறை நோக்கமும்

 

தெசலோனிக்க நகர் திருஅவைக்கு எழுதுகிற பவுல் தான் அறிவித்த நற்செய்தி ஏமாற்றம், பேராசை, முகத்துதி அடிப்படையில் அல்ல, மாறாக கடவுளின் அழைப்பால் வந்தது என்கிறார் (காண். 1 தெச 2:3-4). தான் துன்புற்றபோதும் துணிவோடு கிறிஸ்துவை அறிவித்தார் அவர். கடவுளின் விருப்பத்தைத் தெரிந்துகொண்டாரே அன்றி மனித புகழ்ச்சியை அல்ல.

 

அருள்பணியாளர்கள் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டுமே அன்றி, தங்களை அல்ல என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு (ப்ரெஸ்பிதெரோரும் ஓர்தினிஸ், எண் 12).

 

கிறிஸ்தவ சாட்சியம் துணிவோடும் தூய்மையான உள்ளத்தோடும் நடந்தேற வேண்டும்.

 

  1. கனிவுநிறை நம்பிக்கை

 

‘நாங்கள் உங்களிடையே இருந்தபோது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல் கனிவுடன் நடந்துகொண்டோம்’ என எழுதுகிறார் பவுல். நற்செய்தி என்பது அறிவிக்கப்படுவது அல்ல, கனிவுடன் வாழ்ந்துகாட்டப்பட வேண்டியது.

 

நற்செய்தி அறிவிப்பு நெருக்கத்தோடும் இரக்கத்தோடும் அன்போடும் நடைபெற வேண்டும் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 24).

 

இன்றைய போட்டிநிறை உலகில் நம்பிக்கை கனிவோடு அறிவிக்கப்பட வேண்டும் – குடும்பத்தில் பொறுமை, வறியோருக்கு இரக்கம், வலுவற்றோருக்கு ஆறுதல். நம் வழங்கிய மறையுரைகளை மக்கள் மறந்துவிடலாம், ஆனால், அவர்களை நாம் நடத்திய விதத்தை அவர்கள் நினைவுகொள்வார்கள்.

 

  1. உள்ளார்ந்த தூய்மையும் வெளிப்புற அடையாளமும்

 

நற்செய்தி வாசகத்தில் இயேசு பரிசேயர்களைக் கடிந்துகொள்கிறார். பத்தில் ஒரு பங்கைக் கொடுப்பதில் அக்கறை காட்டுகிற அவர்கள் நீதியையும் இரக்கத்தையும் நம்பிக்கையும் மறந்துவிடுகிறார்கள் என்பது இயேசுவின் செய்தியாக இருக்கிறது. வெளிப்புறத்தைத் தூய்மையாக்க முயற்சி செய்யும் அளவுக்கு உள்ளத்தைத் தூய்மையாக்க முயற்சி செய்வதில்லை.

 

தூய்மைநிறை உள்ளமே கடவுளைக் காண்பதற்கான வழி என்கிறது திருஅவையின் மறைக்கல்வி (எண். 2517).

 

சில நேரங்களில் நம் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் கண்ணுங்கருத்துமாய் இருக்கும் நாம் இரக்கத்தையும் நேர்மையையும் நீதியையும் மறந்துவிடுகிறோம். பொங்கி வரும் அன்பினால் நம் இதயங்களைத் தூய்மைப்படுத்த நம்மால் இயலும்.

 

துணிவும் தூய்மையும் நேர்மையும் நிறைந்த நம்பிக்கையே கடவுள் நம்மிடம் விரும்புகிறார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: