
இன்றைய இறைமொழி
ஞாயிறு, 26 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு
சீராக்கின் ஞானம் 35:12-14, 16-18. 2 திமொத்தேயு 4:6-8, 16-18. லூக்கா 18:9-14
இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர் ஆண்டவரின் இல்லத்திற்குள் நின்று கொண்டு செபிக்கின்றார். அவரின் செபம் முழுவதும் அவரையே மையமாக வைத்து இருக்கின்றது. அவர் தன்னைப் பற்றி தன்னிடமே பேசிக்கொள்கின்றார். ‘நான்’ என்ற வார்த்தை ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. பரிசேயரின் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, அவர் கடவுளைப் பற்றியும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, தன்னைப் பற்றியும் புரிந்துகொள்ளவில்லை எனவே தோன்றுகிறது.
வரிதண்டுபவர் தொலைவில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, 'கடவுளே பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார். தன்னைப் பாவியாகவும், கடவுளை இரக்கம் மிக்கவராகவும் ஏற்றுக்கொள்கின்றார்.
நாம் வாழும் இந்தக் காலத்தின் கலாச்சாரம் கடவுள் யார் என்பதை மறந்து கொண்டே வருகின்றது. கடவுள் யார் என்பதை நாம் மறக்கின்றோம் என்றால், நாம் யார் என்பதையும் மறந்து விடுகிறோம். ஏனெனில் கடவுளின் சாயலில்தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம். ‘கடவுள் யார் என்பதை’ மறந்து விட்ட வெற்றிடத்தை நிரப்ப மனிதன் அங்கே தன் சாயலை முன்னிறுத்துகின்றான். மனிதன் தன்னையே கொண்டு நிரப்பினால் எது தவறு? எது சரி? என்பதை எப்படி முடிவெடுப்பது? வலிமையானவர்களின் சொல்லும் செயலும் சரி எனவும், மற்றது தவறு எனவும் மாறி விடும். வலிமையானவன் சொல்வதே வாய்மை என ஆகிவிடுகிறது. அன்பிற்குப் பதில் வலிமைக்குக் கட்டுப்படுபவர்களாக நாம் மாறி விடுகிறோம்.
நாம் யார்? என்பதையும் மறந்து விடுகிறோம். எது சரி? என்ற அறநெறியிலும் பிறழ்வு ஏற்பட்டு விடுகின்றது. பரிசேயருக்குத் தன் பாவநிலை எப்போது மறந்து போயிருக்கும்? ஒரே இரவிலா? இல்லை. படிப்படியாக! கொஞ்சம் கொஞ்சமாக!
கொதிக்கின்ற தண்ணீரில் விழுகின்ற தவளை சூடு தாளாமல் உடனே வெளியே குதித்து விடும். அதே நேரத்தில் சாதாரண தண்ணீரில் தவளையைப் போட்டு மெதுவாகப் பாத்திரத்தை சூடேற்றினால், அதன் வெதுவெதுப்பிலேயே இன்பம் காண்கின்ற தவளை ஒரு கட்டத்தில் இறந்தே போய்விடும். பரிசேயரின் மனச்சான்றும் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக, படிப்படியாக மாறியிருக்க வேண்டும்.
பரிசேயர்கள் தங்கள் கொள்கைகளில் மிகவும் பிடிப்புள்ளவர்கள். பரிசேயர் என்ற வார்த்தைக்கு பிரித்து வைக்கப்பட்டவர் என்பது பொருள். தன் பிறப்பிலேயே, தன் வளர்ப்பிலேயே மற்றவர்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டவர், மேன்மையானவர் என்ற சிந்தனையில் இருப்பவர்கள். தங்கள் செபத்தாலும், நோன்பினாலும், திருச்சட்ட நூற்களைக் கற்பதனாலும் விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை உடையவர்கள். ஆனால் இயேசு அவர்களின் இந்த நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்துகின்றார்.
ஆன்மீகம் இறைவனை நோக்கி இருப்பதற்குப் பதிலாக நம்மை நோக்கித் திரும்பினால் அது ஆபத்தாகவே முடிகிறது. பல நேரங்களில் நமது வழிபாடுகளும், நம் மறையுரைகளும் இறைவனைப் பற்றியதாக இருப்பதை விடுத்து, ‘நாம் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற வேண்டும்’ என்ற அடிப்படையிலேயே நீர்த்துப் போவதாக இருக்கின்றது. அப்படிப்பட்ட நேரங்களில் நாம் இறைவனை வழிபடுவதற்குப் பதிலாக நம்மை நாமே வழிபடுகிறோம். இறைவன் நம் மையமாவதற்குப் பதிலாக நாமே நம் மையமாகின்றோம்.
இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர் தான் மற்றவர்களைப் போல இல்லாதது பற்றி நன்றி செலுத்துகின்றார். இதில் பரிசேயரின் தவறு ‘ஒப்பீடு’. ஆலயத்திற்கு நன்கொடை கொடுப்பவரும், பூசைக்கருத்து கொடுப்பவர்களும் கூட ஒரு கட்டத்தில் ‘நான் மற்றவர்களைப் போல இல்லை. நான் நல்லவன்’ என்ற சிந்தனைக்குக் தள்ளப்படுகின்றனர். நம்மை ஒருவர் மற்றவரோடு இணைக்க வேண்டிய இறைச்சாயலே நம்மை மற்றவரிடமிருந்து பிரித்து விடுகிறது. இறைவனின் பிரசன்னம் நம்மை ஒருவர் மற்றவரோடு ஒன்றிணைக்க வேண்டும். நம் செயல்கள் அளவிலும், நம் பொருள்கள் அளவிலும் நாம் மற்றவரிடமிருந்து உயர்ந்தோ, தாழ்ந்தோ இருந்தாலும் நம் இருத்தல் அளவில் நாம் அனைவரும் சமமே. நம்மிடமிருக்கும் இறைச்சாயிலில் நாம் அனைவரும் சமமே.
தன் நோன்பையும், தன் காணிக்கையையும் முன்னிறுத்துகின்றார் பரிசேயர். நோன்பும், காணிக்கையும் நம்மை மற்றவரோடு ஒன்றிணைக்கும் காரணிகள். நோன்பு இருக்கும்போது வறியோரின் பசியோடு நம்மை ஒன்றிணைக்கின்றோம். நாம் காணிக்கை செலுத்தும்போது இல்லாதவரோடு நமக்குள்ளதை நாம் பகிர்ந்து கொள்கின்றோம். மற்றொரு பக்கம், நோன்பினாலும், பிறரன்புச் செயல்களாலும் இறைவனின் இரக்கத்தை வென்று விடலாம் என நினைக்கின்றார் பரிசேயர். நோக்கம் தவறாக இருக்கும் எந்தச் செயலினாலும் பலன் இல்லை. செயல்கள் நல்லவையாக இருந்து அவற்றின் பின் இருக்கும் நோக்கம் தவறு என்றால் அச்செயல்களால் பலன் ஒன்றும் இல்லை.
வரிதண்டுபவர் இறைவனின் முன்னிலையில் தன் ஒன்றுமில்லாமையை உணர்கின்றார். ‘பிறர் உங்களைவிட உயர்ந்தவர்கள் என எண்ணுங்கள்’ என இறைவன் முன்னிலையிலும், பிறர் முன்னிலையிலும் தன்னைத் தாழ்த்துகின்றார். நம் இருத்தல் அளவில் நாம் அனைவருமே தாழ்ந்தவர்கள்தாம், ஒன்றுமில்லாதவர்கள்தாம். அதை நாம் ஏற்றுக்கொள்கின்றோமா?
இன்று நாம் இறைவனை வழிபடுகிறோமா? அல்லது நம்மையே வழிபட்டுக்கொள்கின்றோமா? இது நம் ஆலயமா? அல்லது இறைவனின் ஆலயமா?
ஆண்டவர் ஒருதலைச் சார்பு அற்றவர். அவர் ஒடுக்கப்பட்டோரின், கைவிடப்பட்டோரின் மன்றாட்டுக்களைக் கேட்கின்றார். இறைவன் முன்னிலையில் தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல்கள் மேகங்களையும் ஊடுருவிச் செல்லும் இயல்புடையது. இறைவன் முன்னிலையில் நம்மையே வெறுமையாக்கி அர்ப்பணமாக்க அழைப்பு விடுக்கின்றது இன்றைய முதல் வாசகம்.
தன் வாழ்வின் முடிவு நெருங்குவதை உணர்கின்ற தூய பவுல், தான் இறுதிவரை இறைவனுக்கு பிரமாணிக்கமாய் இருந்ததையும், தான் அசைவுறாத விசுவாசத்தைக் காத்துக் கொண்டதாகவும், இந்தப் போராட்டத்தில் இறைவன் தனக்கு வலுவூட்டியதாகவும், தன் வாழ்வால் தான் இறைவனுக்கு மாட்சி தருவதாக பெருமைப்படுகின்றார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: