இன்றைய இறைமொழி
புதன், 27 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 21-ஆம் வாரம், புதன்
புனித மோனிக்கா – நினைவு
1 தெசலோனிக்கர் 2:9-13. மத்தேயு 23:27-32
1. தெசலோனிக்கத் திருஅவைக்குத் தான் அறிவித்த நற்செய்தியைப் பற்றிப் பெருமை பாராட்டுகின்ற பவுல், அந்நற்செய்தி அறிவிக்கப்பட்ட விதம் பற்றியும் பெருமை பாராட்டுகிறார். நற்செய்திப் பணியின் பலன்களைத் தான் அனுபவிப்பதற்கான உரிமை இருந்தாலும், அதை அனுபவிப்பதற்குப் பதிலாக, தன் சொந்த உழைப்பால் தன் தேவைகளை நிவர்த்தி செய்துகொண்டதாக எழுதுகிறார். மேலும், ஒரு தந்தை தன் பிள்ளைகளை வழிநடத்துவதுபோல, அவர்களை வழிநடத்தி, அறிவுரை வழங்கி, ஊக்குவித்து, வற்புறுத்தியதாகவும் சொல்கிறார். ஆக, உரிமைகளை மையப்படுத்தாமல் தன் கடமைகளை மட்டுமே மையப்படுத்தி, கடமைகளுடன் கனிவையும் இணைத்து நற்செய்திப் பணி ஆற்றுகிறார் பவுல்.
2. நற்செய்தி வாசகத்தில், இயேசு மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களைச் சாடுகிறார். அவர்களின் வெளிவேடம், போலித்தனம், நெறிகேடு ஆகியவை இயேசுவுக்கு ஏற்புடையனவாக இல்லை.
3. திருமுழுக்கு பெற்ற அனைவருமே நற்செய்தியை அறிவிக்கும் கடமை பெற்றுள்ளதாகச் சொல்கிறது நம் திருஅவையின் மறைக்கல்வி. நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க நமக்கு உள்ள கடமையை நினைவுகூர்ந்து வாழ்தல் நலம்.
நம் தாய்த் திருஅவை இன்று புனித மோனிக்காவின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. தன் மகனது வாழ்வு பற்றி விழிப்பாயிருந்தார். சிறியவற்றிலும் அவர் சீராக இருக்க விரும்பினார். தன் கண்ணீரையே தன் மகனுக்கான இறைவேண்டலாக வடித்தார்.
‘என் மகன் இப்படி இருக்கிறானே!’ என்று தன் உள்ளத்தில் எந்த விமர்சனமும் அவர் உள்ளத்தில் எழவில்லை. தன் ஒற்றை மகனை நிலத்தில் புதைத்துவிட அவர் விரும்பவில்லை. தாயின் சிறிய சிறிய கண்ணீர்த் துளிகளே பெரிய புனிதராக அகுஸ்தினாரை நம் முன் நிறுத்துகின்றது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: