• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஊக்குவித்தல். இன்றைய இறைமொழி. செவ்வாய், 28 ஏப்ரல் 2026.

Tuesday, April 28, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
செவ்வாய், 28 ஏப்ரல் 2026
பாஸ்கா காலம் நான்காம் வாரம்
திப 11:19-26. யோவா 10:22-30

 

ஊக்குவித்தல்

 

இன்றைய முதல் வாசகத்தின் முதன்மையான கதைமாந்தராக இருப்பவர் பர்னபா. ‘ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்’ என்று தொடக்கத் திருஅவையில் அறியப்பட்ட இவர் தானாகவே முன்வந்து புதிய நெறியை ஏற்கிறார். மேலும், திருஅவைக் குழுமம் எங்கெல்லாம் தன்னை அனுப்பியதோ அங்கே செல்வதற்குக் காத்திருக்கிறார்.

 

பேதுருவும் பவுலும் ஆண்டவர் இயேசுவால் நேரடியாக அனுப்பப்பட்டவர்கள். பர்னபாவுக்கு அப்படிப்பட்ட காட்சி எதுவும் கிடைக்கவில்லை. குழுமத்தின் குரலே கடவுளின் குரல் என்று செவிமடுக்கிறார். பவுல் திருத்தூதர்களோடு சேர்த்துக்கொள்ளப்படுவதற்கும், பவுலின் பணிகள் வெற்றி அடைந்ததற்கும் பர்னபாவே முதன்மையான காரணம். இவர் ஒருவர் மற்றவரை இணைக்கக்கூடிய இணைப்பாளராக இருந்தார்.

 

இவருடைய நேர்முக ஆற்றல் நமக்கு வியப்பளிக்கிறது.

 

அந்தியோக்கியாவுக்கு அனுப்பப்படுகிற இவர், அந்தப் பணி முடிந்தவுடன் தானாகவே பயணம் செய்து சவுலைத் தேடிச் செல்கின்றார். ஒருவர் மற்றவரைத் தேடிச் செல்லும் போக்கு, ஒருவர் மற்றவருடைய நலம் விரும்பும் எண்ணம் இப்போது வேகமாகக் குறைந்துவருகிறது.

 

நம் இன்றைய உலகம் நமக்கு நாமே சுருக்கிக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது. நம் இலக்கு, நோக்கம், பயணம், அனுபவம் என உலகத்தை நாம் அதீத எண்ணங்களால் மூடிக்கொள்கிறோம். ஆனால், நமக்கு வெளியே செல்லத் தொடங்கும்போது நம் வாழ்க்கைப் பயணம் இனிதாகிறது. மற்றவர்களை மையப்படுத்திச் சிந்திக்கத் தொடங்குகிற ஒருவர் தலைவராக மாறுகிறார்.

 

நம்பிக்கையாளர்கள் அந்தியோக்கியாவில் கிறிஸ்தவர்கள் என்னும் பெயர் பெறுகிறார்கள். இந்தப் புதிய பெயரே இன்றைய நம் பெயராகவும் இருக்கிறது.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘ஆடுகள்-செவிமடுத்தல்’ என்னும் கருத்துருவை மீண்டும் எடுக்கிற இயேசு, நம்புதலே செவிகொடுத்தலுக்கான தொடக்கம் என்கிறார்.

 

பர்னபா என்னும் நபர் நம்மில் உள்ள நேர்முக ஆற்றலையும் தூண்டி எழுப்புவாராக.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: