இன்றைய இறைமொழி
திங்கள், 28 ஜூலை ’25
பொதுக்காலம் 17-ஆம் வாரம் – திங்கள்
புனித அல்ஃபோன்சா, நினைவு
விடுதலைப் பயணம் 32:15-24, 30-34. மத்தேயு 13:31-35
மறைவான ஆற்றல்
பத்துக் கட்டளைகளை சீனாய் மலையில் ஆண்டவராகிய கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட மோசே (மற்றும் யோசுவா) மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள். கீழே மக்கள் ஆரோனின் தலைமையில் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபாடு நடத்துகிறார்கள். மோசே கோபம் கொள்கிறார். ஆண்டவராகிய கடவுளின் கோபமும் பற்றி எரிகிறது. மக்களை அழித்துவிட நினைக்கிறார் ஆண்டவர். மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசுகிறார். மக்கள் செய்த தவறு என்ன? (அ) மோசே நீண்டநாள் அவர்களிடமிருந்து விலகியிருந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. (ஆ) ஆண்டவராகிய கடவுள் எகிப்து நாட்டில் தங்களுக்காக ஆற்றிய அரும்பெரும் செயல்களை மறந்துபோகிறார்கள். (இ) தங்களுக்கென்று ஒரு கடவுளை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு என்னும் இரு உருவகங்கள் வழியாக விண்ணரசின் தன்மையை எடுத்துரைக்கிறார் இயேசு. இரண்டுமே உருவத்தில் அளவில் சிறியவை. இரண்டிலும் ஆற்றல் மறைந்து இருக்கிறது. இரண்டும் வேகமாகச் செயலாற்றத் தொடங்குகின்றன. இரண்டின் செயல்பாட்டையும் யாராலும் தடுக்க இயலாது. இவ்வாறாக, அளவில் சிறியனவாக இருப்பவை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன.
சீனாய் மலையடிவாரத்தில் நிற்கிற இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுள் தங்களோடு இருந்தார் என்பதை மறந்துவிட்டார்கள். ஆண்டவர் கடுகு விதை போல, புளிப்பு மாவு போல மறைவாகவே செயலாற்றுகிறார் என்பதை மறந்துவிட்டார்கள். மறைவாக இருக்கும் இறைமையை மறந்துவிட்டு, தங்கள் கண்களுக்குத் தெரியுமாறு கடவுள் ஒன்றை பொன்னால் உருவாக்கிக்கொள்கிறார்கள். நம்மில் மறைவாகச் செயல்படும் இறைவனின் ஆற்றலை உணர்ந்து வாழ நம்மை அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.
இன்று புனித அல்ஃபோன்சாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். எளிய வழியில், தன் வலிகளைத் தாங்கிக்கொண்டு கிறிஸ்துவின் அன்புக்குத் தன் இறைவேண்டல் வாழ்வால் சான்று பகர்ந்த இந்தப் புனிதை நாம் தூய்மையில் வளர நம்மைத் தூண்டி எழுப்புவாராக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: