இன்றைய இறைமொழி
வியாழன், 28 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 21-ஆம் வாரம், வியாழன்
புனித அகுஸ்தினார் – நினைவு
1 தெசலோனிக்கர் 3:7-13. மத்தேயு 24:42-51
இன்றைய நற்செய்தி இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், விழிப்பாயிருக்கும் உரிமையாளர் பற்றிப் பேசுகின்றார் இயேசு. விழிப்பாயிருக்கின்ற உரிமையாளர் தன் உடைமைகள் களவு போகாதவாறு காத்துக்கொள்கின்றார். இரண்டாவது பகுதியில், இரு வகை மேற்பார்வையாளர்களை முன்வைக்கின்றார் இயேசு. நம்பிக்கைக்குரிய மற்றும் அறிவாளியான பணியாளர் வேலையாள்களுக்குரிய உணவை நேரத்துக்குத் தருவதுடன் தலைவர் வரும்போது தன் பணியைச் செய்துகொண்டு இருக்கின்றார். பொல்லாத பணியாளரே வேலைக்காரரை அடிக்கவும், மற்றவர்களுடன் சேர்ந்து குடிக்கவும் செய்கின்றார். மேலும், தலைவரின் வருகைக்கு ஆயத்தம் இல்லாதவராகவும் இருக்கின்றார்.
மேற்காணும் இரு பணியாளர்களில் முன்னவர் நம்பிக்கைக்குரிய அறிவாளியாகவும், பின்னவர் பொல்லாதவராகவும் இருக்கின்றார்.
நம்பிக்கைக்குரிய அறிவாளி தான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்கின்றார்.
பொல்லாதவரோ தனக்குத் தானே ஓர் எண்ணத்தை வகுத்துக்கொண்டு, அந்த எண்ணத்தின்படி தன் தலைவர் செயலாற்றுவதாக நினைக்கின்றார். இந்த வகையில் அவர் தனக்கு எதிராகவும் மற்றவர்களுக்கு எதிராகவும் தீமை செய்யத் தொடங்குகின்றார்.
இந்தப் பொறுப்பாளர் இரண்டு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் இயேசு: ‘நம்பிக்கைக்கு உரியவர்,’ ‘அறிவாளி.’ நம்பிக்கை உரியவராய் இருத்தல் என்பது மேல்நோக்கிச் செல்லக் கூடியது. அறிவாளியாய் இருத்தல் என்பது எனக்குச் சமமாக அல்லது கீழ்நோக்கி இருத்தல் வேண்டும். இது மாறினால்தான் நிர்வாகப் பிரச்சினை வரும். எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் தன்னுடைய தலைமை ஆசிரியரிடம் அறிவாளியாய் இருக்க நினைத்தால் அது அவருடைய வேலைக்கு ஆபத்தாய் முடியும். அதுபோல, ஆசிரியர் தனக்குக் கீழிருக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கைக்கு உரியவராய் நடக்க ஆரம்பித்தால் மேலிருப்பவர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க நேரிடும். ஆக, ‘வீட்டுப் பொறுப்பாளர்’ இந்த இரண்டு பண்புகளையும் சரியான திசையில் கொண்டிருக்க வேண்டும். இரண்டுமே மதிப்பீடுகள்தாம். ஆனால், அவைகளின் திசைகளே அவற்றை பயனுள்ளவை ஆக்குகின்றன.
இந்தப் பொறுப்பாளர் மூன்று குணங்களைப் பெற்றிருத்தல் கூடாது: ஒன்று, தனக்குத்தானே சாக்குப் போக்கு சொல்லக் கூடாது, இரண்டு, தனக்குக் கீழிருக்கும் பணியாளர்களை அடித்தல் கூடாது, மற்றும் மூன்று, மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் கூடாது. ஆக, இவருடைய மனம், கரம், ஆன்மா அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும்.
மேலும், பொறுப்பாளர் நிலை என்பது இவர் தெரிந்தெடுத்த நிலை அல்ல. மாறாக, இவர்மேல் சுமத்தப்பட்ட ஒன்று. இவர் தன் தலைவரின் விருப்பத்திற்குக் கீழ் தன்னுடைய விருப்பத்தை வைத்துவிட்டார். ஆக, பொறுப்புணர்வு இன்னும் அதிகம் தேவை. இதுவே, இவரிடம் அதிகம் ஒப்படைக்கப்பட்ட நிலை.
இன்றைய முதல் வாசகத்தில், தெசலோனிக்க நகர் திருஅவைக்கு எழுதுகிற பவுல், ‘எங்கள் இன்னல் இடுக்கண்கள் நடுவிலும் உங்களது நம்பிக்கையைக் கண்டு உங்களால் நாங்கள் ஆறுதல் அடைகிறோம்’ என எழுதுகிறார். திருத்தூதர் பணி செய்பவர்கள் அல்லது நற்செய்தி அறிவிப்பவர்கள் துன்பம் அனுபவித்தாலும் அவர்கள் வழியாக மக்கள் பெறுகிற நம்பிக்கை அவர்களுக்கு ஆறுதல் தருகிறது. மேலும், ‘அன்பை ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்யுமாறு’ வாழ்த்துகிறார்.
இன்றைய நாளில் ஆயரும் மறைவல்லுநருமான புனித அகுஸ்தினாரை நினைவுகூர்கிறோம். கடவுளை விட்டுத் தூரமாக நின்றவர் அவருடைய தாய் மோனிக்காவின் இறைவேண்டலால் கடவுளை நோக்கித் திரும்புகிறார். ‘நீர் எங்களை உமக்காகவே படைத்துள்ளீர்! உமக்காகப் படைக்கப்பட்டுள்ள எங்கள் இதயங்கள் உம்மில் அமைதி காணும் வரை அமைதியற்று இருக்கின்றன!’ என்று சரணடைகிறார். இவருடைய எழுத்துகள் இன்றைய இறையியலுக்கு அடித்தளம் இடுகின்றன. இறைவனை மட்டுமே பற்றிக்கொள்ளும் இனிய வரம் வேண்டுவோம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: