
இன்றைய இறைமொழி
சனி, 29 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 34-ஆம் வாரம், சனி
தானியேல் 7:15-27. லூக்கா 21:34-36
இன்றுடன் திருவழிபாட்டு ஆண்டு நிறைவு பெறுகிறது. நம்மிடமிருந்து விடைபெறும் இந்த ஆண்டு, ‘விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்’ என்ற அழைப்பை நமக்கு விடுத்து நம்மிடமிருந்து கடந்து செல்கிறது.
வரப்போகும் இறுதிநாள் பற்றி அறிவுறுத்துகின்ற இயேசு, அந்த நாளின் வருகையின் தவிர்க்க இயலாத நிலையை முன்வைத்து இரண்டு எச்சரிக்கைகளையும், ஓர் அறிவுரையையும் வழங்குகின்றார்.
இரு எச்சரிக்கைகள்:
எவற்றால் உள்ளம் மந்தம் அடையும்? குடிவெறி, களியாட்டம், மற்றும் உலகக் கவலைகள். வேறு எந்த எண்ணமும் நமக்குள் நுழையாத வண்ணம் இவை அந்த இடத்தில் அமர்ந்து கொள்கின்றன. இவற்றால் நமக்கு சோர்வும் நடுக்கமும் ஏற்படுமே தவிர வேறொன்றும் ஏற்படாது. ஆக, தாங்களும் அகலாமல், மற்ற நல்ல எண்ணங்களும் உள்ளே வர இயலாத நிலையில், இவை நம் உள்ளத்தை மந்தம் அடையச் செய்கின்றன.
கவனமற்ற கால்கள் கண்ணிகளில் சிக்கிக்கொள்கின்றன. கவனக்குறைவு என்பதால் வரும் விளைவு பெரிய ஆபத்தாக முடிந்தவுடன், நாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆவதில்லை. முதலில் கவனமாக இருந்தால் பெரிய ஆபத்து தவிர்க்கப்படலாம்.
ஓர் அறிவுரை:
‘குடிவெறி, களியாட்டம், கவலை ஆகியவற்றால் உங்கள் உள்ளம் மந்தம் அடைய வேண்டாம்’ என்றும் அறிவுறுத்துகின்றார் இயேசு.
கவலை என்பது நாம் கையில் ஏந்தும் கண்ணாடி கிளாஸ் போல. ஏந்துகின்ற அந்த நொடி நமக்கு ஒன்றும் வலிக்காது. ஆனால், நேரம் செல்லச் செல்ல நம் கையை அது மரத்துப் போகச் செய்யும். கண்ணாடி கிளாஸின் எடை என்னவோ மாறுவதில்லை. நேரம்தான் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நாம் செய்ய வேண்டியது என்ன? கண்ணாடி கிளாஸை கீழே வைக்க வேண்டியதுதான்.
குடிவெறி மற்றும் களியாட்டம் என்பது நாம் இடம் கொடுக்கும் சின்ன சின்ன இன்பங்கள். நம் உள்ளத்தை நம் உணர்வுகள் வெல்லும் பொழுதுகள் இவை. உள்ளம்தான் எப்போதும் உணர்வுகள்மேல் ஆட்சி செலுத்த வேண்டுமே தவிர, உணர்வுகள் உள்ளத்தின்மேல் அல்ல.
விழிப்பு மனநிலையுடன் கூடிய மன்றாட்டு, நம்மைக் கண்ணியிலிருந்து தப்புவிக்கும்.
இந்த திருவழிபாட்டு ஆண்டு முழவதும் இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்காக, அவர் பொழிந்த அருளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: