• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

சீடத்துவமும் விடுதலையும். இன்றைய இறைமொழி. திங்கள், 30 ஜூன் ’25.

Monday, June 30, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time Discipleship சீடத்துவம் Radical Call Earthly Poverty Homelessness

இன்றைய இறைமொழி
திங்கள், 30 ஜூன் ’25
பொதுக்காலம் 13-ஆம் வாரம் – திங்கள்
தொடக்கநூல் 18:16-33. மத்தேயு 8:18-22

 

சீடத்துவமும் விடுதலையும்

 

‘நீர் என்னைப் பின்பற்றி வாரும்!’

 

‘முழுமையான இழப்பு,’ ‘முதன்மையான இலக்கு’ – இவ்விரண்டும் சீடத்துவத்தின் இரு தூண்கள் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்.

 

மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவைப் பின்தொடர விரும்புகின்றார். இயேசுவின் சீடர்கள் குழாமில் மறைநூல் அறிஞர் ஒருவர் இருப்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும். யூத சமூகத்தில் மறைநூல் அறிஞர்கள் நிறைய மொழிகள் கற்றவர்களாக இருந்தனர். யூதர்களின் தோரா, இறைவாக்கினர்கள், மற்றும் திருப்பாடல்கள் நூல்களை விரித்துரைக்கும் ஆற்றலும் அதிகாரமும் அவர்களுக்கே இருந்தது. அத்தகையோரில் ஒருவர் இயேசுவின் சீடராக இருந்தால், இயேசுவின் போதனைகளுக்கு மக்கள் நடுவே இன்னும் வரவேற்பு இருக்கும். ஆனால், அந்த மறைநூல் அறிஞர் தன்னைப் பின்பற்றுவதைத் தடைசெய்கின்றார் இயேசு: ‘நரிகளுக்கு பதுங்கு குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்குத் தலைசாய்க்கக்கூட இடமில்லை.’

 

இயேசுவின் சமகாலத்துப் போதகர்கள் தங்களுக்கென்று பள்ளிகள் வைத்திருந்தனர். அந்தப் பள்ளிகளில் மாணவர்கள் தங்கிப் படிப்பதுண்டு. அப்படி மாணவர்களாக வருகின்றவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் என எல்லாவற்றுக்கும் உத்தரவாதம் உண்டு. அந்தப் பின்புலத்தில் அவர் இயேசுவைப் பின்பற்ற விரும்பியிருக்கலாம். எனவே, இயேசு சீடத்துவத்துக்கான விலையைத் தெளிவுபடுத்துகின்றார். மனிதத் தேவைகளில் முதன்மையானதாக உணவு இருந்தாலும், சமூகவியலில் இருப்பிடமே முதன்மையான தேவை என மொழியப்படுகிறது. ஏனெனில், சொந்தமாக ஒரு வீடு இருந்தால் அந்த வீட்டுக்குள் அவர் உணவின்றியோ, அல்லது ஆடையின்றியோ கூட தன்மானத்தோடு இருந்துவிடலாம். இருப்பிடமும் இல்லாத நிலையே சீடத்துவம் என்கிறார் இயேசு. இன்னொரு வகையில், இப்படி இருப்பதில் மிகப்பெரிய கட்டின்மை இருக்கிறது.

 

இரண்டாவதாக, இன்னொருவரிடம் இயேசு தன்னைப் பின்பற்றுமாறு சொல்ல, அவரோ, ‘நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்’ எனக் கேட்கின்றார். அவருடைய தந்தை இப்போது இறந்திருக்கலாம், அல்லது இறக்கும் நிலையில் இருக்கலாம். அல்லது யூத சமூக வழக்கத்தின்படி இறந்த ஓராண்டுக்குப் பின்னர் இறந்தவரின் எலும்புகளைச் சேகரிக்கும் சடங்கு ஒன்று உண்டு. அதை மனத்தில் வைத்து அவர் சொல்லியிருக்கலாம். ஆனால், இது சீடத்துவத்தின் கவனச்சிதறல் என எச்சரிக்கின்றார் இயேசு. மேலும், முதன்மையான இலக்காக சீடத்துவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது இயேசுவின் அறிவுரை.

 

சீடத்துவம் என்பதை நாம் பல நேரங்களில் அருள்பணியாளர்கள் அல்லது துறவறத்தாருக்கு ஒதுக்கப்பட்ட பணி என நாம் நினைத்து ஒதுங்கிக்கொள்கிறோம்.

 

இயேசு விடுக்கும் சீடத்துவத்துக்கான அழைப்பு அனைவருக்கும் பொதுவானது.

 

முழுமையான இழப்பும், முதன்மையான இலக்குமே சீடத்துவத்தின் பாடம்.

 

‘கடந்த காலத்தைப் பற்றி நாம் நினைக்கலாமா?’ என்ற கேள்விக்கு நம்முடைய விடை மூன்று நிலைகளில் இருக்கிறது: (அ) ‘கடந்த காலம்’ நம்முடைய வேர். வேர் இல்லாமல் கிளை இல்லை. ஆக, எவ்வளவுதான் நாம் கிளை பரப்பினாலும் நம்முடைய வேரை மறந்துவிடக்கூடாது. ஆக, கடந்த காலத்தை எப்போதும் மனத்தில் வைத்திருக்க வேண்டும். (ஆ) கடந்த காலத்தை நினைக்க வேண்டும். அதற்காக மனத்தை அதிலேயே வைத்திருக்கக் கூடாது. முன்நோக்கிப் பார்த்து நடந்து முன்னேற வேண்டும். அதாவது, கார் ஓட்டுவது போல. பின்னால் வரும் அல்லது நாம் கடந்த வந்த பாதையை ‘ரேர் மிரரில்’ பார்க்கலாம். ஆனால், ரேர் மிரரை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் நாம் முன்னால் மோதிவிடுவோம். ரேர் மிரரைப் பார்த்தும் பார்க்காமல் இருந்துகொண்டு, கண்முன் இருக்கும் பெரிய கண்ணாடி வழியாக வரவிருப்பதைப் பார்க்க வேண்டும். (இ) கடந்த காலத்தை முற்றிலும் மறந்துவிட வேண்டும். கடந்த காலம் நம்மைக் கட்டி வைக்கும் சங்கிலி. அதிலிருந்து விடுபடுவர் ஒருவரே மகிழ்ச்சியாளர். இதை கௌதம புத்தர் அதிகமாக வலியுறுத்துகின்றார்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, ‘நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்’ என்கிறார்.

 

இயேசுவின் அறிவுரையை எப்படிப் புரிந்துகொள்வது?

 

‘இறந்தவர்’ என்பது ‘கடந்த காலத்தின்’ உருவகமா? அல்லது

 

‘உறவு, உடைமை என்று இறந்து கிடப்போரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீர் நுழையும் இறையாட்சி உறவில் இரத்த உறவும் இல்லை, திருமண உறவும் இல்லை’ என்ற புதிய புரிதலா? அல்லது

 

‘நடக்க வேண்டியது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். நீ இன்றை மட்டும் நினைத்து வாழ்!’ என்பதா?

 

இன்றைய முதல் வாசகத்தை (தொநூ 18:16-33) நம் துணைக்கு அழைத்துக் கொள்வோம். ஆண்டவராகிய கடவுள் சோதோம் நகரை அழிக்க முடிவெடுக்கின்றார். ஏனெனில், அங்கே பாவம் பெருகிவிட்டது. தனது இத்திட்டத்தைக் கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகின்றார். ‘தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்துவிடுவீரோ?’ எனக் கேட்கின்ற ஆபிரகாம், ஐம்பது, நாற்பத்தைந்து, நாற்பது, முப்பது, இருபது, பத்துப் பேர் நீதிமான்களாக இருந்தாலும் நகர் அழிக்கப்படுமோ என இறைஞ்சுகின்றார். பத்துப் பேர் கூட இல்லை என்பதுதான் எதார்த்தம்.

 

இங்கே கடவுள் ஆபிரகாமிடம் சொல்வது இதுதான்: ‘(பாவத்தில்) இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவர். நீ என்னைப் பின்தொடர்!’

 

ஆக, இறந்தவர்கள் என்பவர்கள் தங்களைத் தாங்களே உறைநிலையில் வைத்துக்கொள்பவர்கள் – அது பாவமாக இருக்கலாம், எதிர்மறை உணர்வுகளாக இருக்கலாம், கடந்த காலமாக இருக்கலாம். உறைநிலையில் வாழ்க்கையை இருத்திக்கொள்பவர்கள் இறந்தவர்கள். இவர்களைப் பற்றிக் கவலைப்படுவதால் மற்றவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்பதே உண்மை.

 

ஆகையால்தான், தன்னைப் பின்பற்றும் சீடர்களை உறைநிலையிலிருந்து விடுவிக்க நினைக்கின்ற இயேசு, ‘இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்கிறார்.

 

இன்று என் வாழ்வின் உறைநிலை எது? நான் எதில் இறந்தவராக இருக்கிறேன்?

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: