
இன்றைய இறைமொழி
ஞாயிறு, 30 நவம்பர் ’25
திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
எசாயா 2:1-5. திபா 122. உரோமையர் 13:11-14. மத்தேயு 24:37-44
புதிய திருவழிபாட்டு ஆண்டை இன்று நாம் தொடங்குகிறோம். மத்தேயு நற்செய்தியாளரோடு இந்த ஆண்டு முழுவதும் நாம் பயணம் செய்யவிருக்கிறோம். திருவருகைக் காலத்தின் மூன்று நோக்கங்கள்: (அ) இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையை நினைவுகூர்ந்து கொண்டாடக் கூடிய கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு நம்மையே தயாரிப்பது. (ஆ) இயேசுவின் இரண்டாம் வருகைக்கான நம் காத்திருத்தலை நமக்கு நினைவூட்டுவது. (இ) அன்றாம் இறைவார்த்தையிலும் அருளடையாளங்களிலும் நம் நடுவில் வசிக்கும் மனிதர்கள் வழியாகவும் நம்மிடம் வருகிற இயேசு கிறிஸ்துவை அடையாளம் காணக் கற்றுக்கொள்வது.
இன்றைய முதல் வாசகத்தில், தன் சமகாலத்து இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கு உரைக்கிற எசாயா, ‘புறப்படுங்கள். ஆண்டவரின் மலைக்குப் போவோம் … யாக்கோபின் குடும்பத்தாரே, நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்’ என்று அழைப்பு விடுக்கிறார். போர்களாலும் அசீரிய மற்றும் பாபிலோனிய அடிமைத்தனங்களாலும் சிதறடிக்கப்பட்ட மக்கள் தங்கள் கண்களை ஆண்டவரின் மலை நோக்கித் திருப்ப வேண்டும். இவ்வாறாக, ஆண்டவரின் மலை அவர்களுக்கு இலக்குத் தெளிவையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், இணைந்த பயணத்தையும் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் தந்த திருச்சட்டங்களை விட்டுவிட்டு இஸ்ரயேல் மக்கள் சிலைவழிபாட்டில் இறங்கி தங்களையே தீட்டுப்படுத்தி இருளை அணிந்துகொண்டார்கள். திருச்சட்டம் என்னும் ஒளியில் நடப்போம் என்று அவர்களை அழைக்கிறார் எசாயா.
இன்றைய பதிலுரைப்பாடல் சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ஆண்டவரது இல்லத்துக்குப் போவோம் என்னும் அழைப்பைக் கேட்கிற திருப்பயணி ஒருவருடைய உள்ளத்தில் எழுகிற நேர்முகமான உணர்வுகளை எடுத்துரைக்கிறது இப்பாடல். அவர்கள் செல்கிற எருசலேம் நகரில் அவர்களுக்கு நீதியும் அமைதியும் நலமும் இருப்பதாக திருப்பயணி உணர்கிறார். ஆண்டவராகிய கடவுள் அங்கே குடியிருப்பதால் அந்நகர் மேன்மையும் அழகும் பெற்றிருக்கிறது. இறைவனின் இல்லத்தில் நமக்கு நீதியும் அமைதியும் நலமும் கிடைக்கும் என்பது நம் எதிர்நோக்காகவும் இருக்கிறது.
அகுஸ்தினாரின் மனமாற்றத்துக்குக் காரணமான விவிலியப் பகுதியாகச் சொல்லப்படுகிற பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம். ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்ள வேண்டும் என்னும் திருத்தூதர் பவுலின் அழைப்பை தனக்கே தரப்பட்ட அழைப்பாக எடுத்து உடனடியாக மனம் மாறுகிறார் அகுஸ்தினார். உரோமையருக்கு எழுதுகிற திருமடலை நிறைவுசெய்கிற பவுல் அறிவுரையுடன் நிறைவு செய்கிறார். உடனடியான உளமாற்றத்துக்கு அவர்களை அழைக்கிறார். ‘இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்’ என்னும் அழைப்பு சவால் நிறைந்ததாக இருக்கிறது. ஒருவர் தனக்குரிய இயல்பை முழுமையாக ஒதுக்கிவிட்டு இயேசுவை – இயேசுவின் இயல்பை – அணிந்துகொள்ள வேண்டும் என்பது பவுல் தருகிற அழைப்பு.
மானிட மகனின் வருகை பற்றிய எச்சரிக்கையும் அறிவுரையையும் வழங்குகிறார் இயேசு. அந்த நாள் திடீரென வரும் என்றும், விழிப்பு நிலையும் தயார்நிலையும் கொண்டிருப்பவர்கள் மானிட மகனை எதிர்கொள்ள முடியும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை – போர், இயற்கைப் பேரிடர், வெள்ளம், பெருமழை, புயல், அரசியல் குழப்பங்கள், சமயப் பிறழ்வுகள் – சிலர் மானிட மகனுடைய இறுதி நாள்கள் என்று பொருள்கொள்கிறார்கள். ‘தொடக்க நாள்’ என்று ஒன்றைக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அனைத்துக்கும் ‘இறுதி நாள்’ இருக்கும் என்பது வாழ்வியல் எதார்த்தம். ‘இன்றே’ அந்த ‘இறுதி நாள்’ என்று நாம் நினைத்து வாழத் தொடங்கினால், பல மாற்றங்களை நம் தனிப்பட்ட வாழ்வில் கொண்டுவர முடியும். ‘இன்று இல்லை அந்த நாள்!’ என்ற சாக்குப் போக்கே நம் வாழ்வின் மாற்றத்தை தள்ளிப்போடுவதற்கான முக்கியக் காரணியாக இருக்கிறது. ‘நாளை பார்த்துக்கொள்ளலாம்!’ என்றும் நம் மனப்பாங்கை சற்றே மாற்றுவோம்!
‘களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவு’ போன்றவை இன்று பல வடிவங்கள் எடுத்து நிற்கின்றன. தான் காய்வது தெரியாமாலேயே தண்ணீரின் சூட்டுக்குள் கிடக்கும் தவளை போல, நாமும் நம் நேரமும் ஆற்றலும் கவனமும் குடும்பமும் வாழ்வும் அழிவது தெரியாமலேயே நாம் அன்றாடம் அழிந்துகொண்டிருக்கிறோம். ஏதாவது ஒன்றை நம் கண்களும் காதுகளும் கேட்டுகொண்டே இருக்குமாறு பழகிவிட்டோம். இந்த உறக்கத்தினின்று விழிக்கும் நேரம் வந்துவிட்டது. இப்பொழுது நாம் விழிக்கவில்லை என்றால், விரைவில் இறந்துவிடுவோம்!
உறக்கத்தினின்று இப்போது விழித்தெழுகிற நாம் கடவுளின் மலை நோக்கி நம் கண்களைத் திருப்புவோம். இந்த நாள்களில் நம் இந்து சகோதர சகோதரிகள் சிறப்பான மாலையும் தவ உடையும் அணிந்து சபரிமலை அல்லது பழனி மலைகளுக்குச் செல்லத் தயாராகிறார்கள். மலை நோக்கிய பயணத்திற்கு தயாரிப்பும் தூய்மையும் அவசியம். நம் சுமைகள் குறைய வேண்டும். இலக்கு நோக்கிய கூர்மையும் கவனமும் வேண்டும். உடன் பயணிகளோடு பயணம் செய்ய தயாராக வேண்டும். நம் உள்ளத்தில் நீதியும் அமைதியும் நலமும் குடிகொள்ள வேண்டும்.
இன்று நாம் ஏற்றுகிற எதிர்நோக்கு என்னும் மெழுகுதிரி, ஆண்டவரின் வருகைக்கான காத்திருத்தலை நமக்கு நினைவூட்டுகிறது. ‘எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது!’ (உரோ 5:5) என்று இந்த யூபிலி ஆண்டு முழுவதும் நாம் சிந்தித்தோம்.
கிரேக்கப் புராணத்தின்படி பண்டோராவிடம் ஒப்படைக்கப்பட்ட பெட்டி திறக்கப்பட்டவுடன் நோய், வறுமை, இறப்பு ஆகியவை வெளியேறி பூமியை நிரப்புகின்றன. அனைத்தும் வெளியேறியவுடன் பெட்டியின் அடியில் இருந்தது ‘எதிர்நோக்கு’. அந்த எதிர்நோக்கே நாம் அனைத்துத் தீமைகளையும் எதிர்கொள்வதற்கான துணிவைத் தருகிறது.
எதிர்நோக்கு என்னும் திரி நம் விழிப்புநிலையின் அடையாளமாக அமைவதாக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: