• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

தாழ்ச்சியிலிருந்து உயர்வு. இன்றைய இறைமொழி. ஞாயிறு, 31 ஆகஸ்ட் ’25.

Sunday, August 31, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி முதன்மையானவர்கள் தாழ்ச்சி-உயர்வு மேன்மை விரும்பிகள் விருந்தின் விருந்தினர்கள் தனிமனித அடையாளங்கள் வேறுபடுத்தும் அடையாளங்கள் தன்னியல்பு இறைஇயல்பு பெரியோர்-சிறியோர் கலாச்சாரம்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 31 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு
சீராக்கின் ஞானம் 3:17-18, 20, 28-29. எபிரேயர் 12:18-19, 22-24. லூக்கா 14:1, 7-14

 

தாழ்ச்சியிலிருந்து உயர்வு

 

உணவு இயேசு வாழ்ந்த சமூகத்தில் மட்டுமல்ல, நம் சமூகத்திலும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றது. எங்கே ஒருவர் சாப்பிடுகிறார், யாரோடு சாப்பிடுகிறார், என்ன சாப்பிடுகிறார், எங்கே அமர்ந்து உண்கிறார் என அனைத்துமே முக்கியமானதாகவும், ஒருவரின் சமூக அந்தஸ்தைக் காட்டுவதாகவும் இருக்கின்றன.

 

இயேசுவின் இன்றைய போதனை விருந்தினர்களுக்கும், விருந்து வைப்பவர்களுக்கும் என இரண்டு நிலைகளில் உள்ளது.

 

விருந்திற்கு வருபவர்கள் தாங்களாகவே மேன்மையைத் தேடிக்கொள்ளக்கூடாது எனவும், விருந்து வைப்பவர்கள் தங்கள் மேன்மைக்கேற்ற மக்களையே அழைக்கக்கூடாது எனவும் கற்பிக்கின்றார்.

 

இந்த இரண்டிலும் மையமாக இருப்பது ‘நம் அடையாளங்களை நம்மால் இழக்க முடியுமா?’ என்பதுதான். நாம் பிறந்தது முதல் பல அடையாளங்களைச் சுமந்து கொண்டேதான் இருக்கின்றோம். நம் பெற்றோர், நம் ஊர், நாம் பேசும் மொழி, நாம் வழிபடும் கடவுள், நம் படிக்கும் படிப்பு, நாம் பார்க்கும் வேலை, நாம் வகிக்கும் பதவி, நாம் வாழும் நாடு, நாம் சார்ந்திருக்கும் மனித இனம் என எண்ணற்ற அடையாளங்கள் நம்மையறியாமலேயே நம்மேல் ஒட்டிக்கொண்டுள்ளன. இவற்றையெல்லாம் ஒரே இரவில் துடைத்து எறிந்து விடுவதும் சாத்தியமில்லை.

 

நம் வாழ்வில் பல சிக்கல்கள் வருவதற்குக் காரணம் நம் அடையாளங்களோடு நாம் நம்மை ஒன்றிணைத்துக்கொள்வதுதான். நம்மை ஒன்றித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் அவர்களின் அடையாளங்களோடே இணைத்துப் பார்க்கின்றோம். அடையாளங்களோடு இணைத்துப் பார்ப்பது நமக்கு மிக சாதகமாக இருக்கிறது. மற்றவர்களை ஏற்று அன்பு செய்யவும், கண்டுகொள்ளாமல் இருக்கவும், வெறுக்கவும் அடையாளங்கள் நம்மைத் தூண்டுகின்றன.

 

ஓர் அடையாளம் மற்ற அடையாளத்திலிருந்து நம்மை பிரிக்கிறது. முதன்மை இருக்கை என்ற அடையாளம் இறுதி இருக்கை என்ற அடையாளத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறது. நண்பர்கள் என்ற அடையாளம், நண்பர்கள் அல்லாதவர்கள் என்ற ஒரு குழுவை வேறுபடுத்திக் காட்டுகிறது. உடன்பிறந்தோர், உறவினர் என்ற அடையாளம் உறவினர் அல்லாதவரை நம்மிடமிருந்து பிரிக்கிறது. பணம் உடையவர் என்ற அடையாளம், பணமில்லாதவரிடமிருந்து பிரிக்கிறது.

 

இன்றைய நற்செய்தி நமக்கு வைக்கும் பாடங்கள்:

 

1. நம் அடையாளங்கள் நம் இயல்பைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை. நம் இயல்பு நம் அடையாளங்களைவிட உயர்ந்தது. நம் இயல்பைக் கண்டுபிடித்து அதில் வளர்வதுதான் நிறைவு தருகின்றது. அடையாளங்கள் நிலையானவை அல்ல. நாம் வங்கியின் மேலாளர் என்ற அடையாளம், நம் பணி ஓய்விற்குப்பின் அர்த்தம் இல்லாததாகின்றது. நாம் நம்மை நம் அடையாளங்களோடும், மற்றவர்களையும் அவர்களின் அடையாளங்களோடும் இணைத்துப் பார்த்தலை விடுக்க வேண்டும்.

 

2. நாம் உணவைப் பகிரும்போது நம் மனித இயல்பிலிருந்து இறைஇயல்பிற்குக் கடந்து போகின்றோம். எப்படி இறைவன் மற்றவர்களுக்கு உணவு தருகிறாரோ, அதேபோல நாமும் மற்றவர்களுக்குப் பகிர்கின்றோம். அப்படிச்செய்யும்போது வேறுபாடு படுத்திப் பார்க்கும் மனித இயல்பை விடுத்து, அனைவரையும் இணைத்துப் பார்க்கும் இறைவனின் இயல்பைப் பெற வேண்டும். ‘அவர் நல்லோர் மேலும், தீயோர் மேலும் தன் கதிரவனை ஒளிரச் செய்கிறார்’ எனில் நாமும் அனைவரையும் ஒரே கண்கொண்டு பார்க்க அழைக்கப்படுகின்றோம். நம் நண்பர்களும், சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோரும், நம் உறவினர்களும், நம் அருகில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளும் சமம் என்ற நிலைப்பாட்டை நாம் பெற வேண்டும்.

 

3, இன்றைய நற்செய்தி நம் கலாச்சாரம் நம்மைக் கட்டிவைக்கும் கட்டுக்களிலிருந்து நம்மை விடுதலை செய்கிறது. நம் கலாச்சாரம் நம்மை அதிகாரத்தோடும், ஆள்பலத்தோடும் நம்மையே இணைத்துக்கொள்ளச் சொல்கின்றது. யார் அதிகாரம் கொண்டிருக்கிறார்களோ, யார் ஆள்பலம் கொண்டிருக்கிறார்களோ அவர்களே பெரியவர்கள் என்றும், அவர்களே முதன்மையானவர்கள் என்றும் முன்னிறுத்துகின்றது. நம் உயர்வு நம்மைச்சுற்றியிருப்பவர்களிடமிருந்து வருவதில்லை. நம் உள்ளேயிருந்தே வருகின்றது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: