இன்றைய இறைமொழி
செவ்வாய், 4 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 4-ஆம் வாரம் – செவ்வாய்
புனித ஜான் தெ பிரிட்டோ (அருளானந்தர்)
எபிரேயர் 12:1-4. திருப்பாடல் 22. மாற்கு 5:21-43
(வாசகங்கள் பொதுக்காலத்துக்கு உரியவை)
இயேசுவின்மீது கண்கள்!
இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குரு என்று ஒரு பக்கம் இறையியல் கட்டுரையாக வளர்ந்தாலும், இன்னொரு பக்கம் துன்புறும் திருஅவைக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்குவதாக நகர்கிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல்.
மிக அழகான சொல்லோவியம் ஒன்றை இங்கே ஆசிரியர் பயன்படுத்துகிறார் (முதல் வாசகம்): ‘எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக! நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம்!’
பந்தயத்தில் ஓடுதல், குத்துச் சண்டை இடுதல், விவசாயம் செய்தல், போருக்குச் செல்தல் ஆகியவை இயேசுவின் (பவுலின்) சமகாலத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க அறநெறி இலக்கியங்களில் நாம் காணும் உருவகங்கள் (சொல்லோவியங்கள்) ஆகும்.
சுமைகளைச் சுமப்பவரும், மற்றவரால் (மற்றவற்றால்) நிறுத்தப்படுபவரும் ஓட இயலாது! ஆக, நாம் சுமக்கும் சுமைகளையும், நம்மைப் பற்றியுள்ள பற்றுகளையும் அகற்ற வேண்டும். ‘மன உறுதியோடு’ பந்தயத்தில் ஓட வேண்டும். மற்றவர்கள் வேகமாக ஓடுகிறார்கள், காலில் கல் குத்துகிறது, சோர்வாக இருக்கிறது, வெயில் அதிகமாக அடிக்கிறது என்று நம்மைச் சுற்றி நாம் காணும் அனைத்தும் நமக்குப் பயத்தை வருவிக்கும். மன உறுதியின் வழியாக பயத்தை எதிர்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட எதை நோக்கி ஓட வேண்டுமோ – இலக்கு – அதை நோக்கி நாம் ஓட வேண்டும். வேகமாக ஓடுகிறேன் என்பதற்காக இங்குமங்கும் நான் ஓடினால் வெற்றி கிடைக்காது. இலக்கின்மேல் கண்கள் – இயேசுவின்மேல் கண்கள்!
இங்கே இன்னொன்றையும் சொல்கிறார் ஆசிரியர். நம்பிக்கை என்பது ஒரு பயணம். அதைத் தொடங்குபவரும், நகர்த்துபவரும், அடையச் செய்கிறவரும் கடவுளே.
இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்த இரண்டு கதைமாந்தர்களை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம்: (அ) இரத்தப் போக்கினால் வருந்திய பெண், (ஆ) தொழுகைக்கூடத் தலைவர் யாயிர். இவர்கள் இருவருடைய பயணங்களும் இயேசுவின்மேல் உள்ள நம்பிக்கையில் தொடங்குகிறது. நம்பிக்கைக்கு இடையே வருகிற தடைகளை அவர்கள் தாண்டுகிறார்கள். இறுதியில் தாங்கள் எதற்காக வந்தார்களோ அவற்றைப் பெற்றுக்கொள்கிறார்கள். இருவருமே மன உறுதியுடன் பந்தயத்தில் ஓடினார்கள்.
இன்றைய வாசகங்கள் தரும் ஆன்மிகப் பாடங்கள் எவை?
(அ) தடைகளைக் களைதல்
இரத்தப் போக்குடைய பெண்ணுக்குத் தடையாக இருப்பது கூட்டம். அவருக்கு எட்டியது என்னவோ இயேசு அணிந்திருந்த அங்கியின் தொங்கல்தான். அதைத் தொட்டுவிடுகிறார். யாயிருக்கு மூன்று தடைகள்: ஒன்று, கூட்டம். இயேசுவின் பயணம் தனியாகத் தொடங்கினாலும் அவர் நகர நகர மக்கள் அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். இரண்டு, இரத்தப் போக்குடைய பெண். அந்தப் பெண்ணின் வருகை, அவர் பெற்ற நலம், அது குறித்த இயேசுவின் விசாரனை, சீடர்களின் உரையாடல் என நிகழ்வுகள் தாமதத்தை ஏற்படுத்துகின்றன. இறக்கும் தருவாயில் இருக்கும் தன் மகளுக்கு இது பெரிய ஆபத்து என்பதை உணர்கிறார் யாயிர். மூன்று, பணியாளர்கள் கொண்டு வந்த இறப்புச் செய்தியும், ‘போதகரால் ஒன்றும் செய்ய இயலாது!’ என்னும் போதனையும். நம்பிக்கையால் தங்கள் தடைகளை வெல்கிறார்கள். யாயிரின் நம்பிக்கைப் போராட்டத்தைக் காண்கிற இயேசு, ‘அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!’ என்கிறார்.
(ஆ) இயேசுவின் உடனிருப்பு
நாம் இயேசுவை (கடவுளை) நோக்கி ஓடுகிறோம் என்றால், அவர் நம்மை நோக்கி ஓடுகிறார் – இறுதிவரை! ‘சிறுமி இறந்துவிட்டாள்!’ என்ற செய்தி இயேசுவின் காதுகளிலும் விழுந்தது. ‘இறப்பை ஏற்றுக்கொள்! இதுதான் மனிதரின் எதார்த்தம்!’ என்று இயேசு யாயிருக்கு அறிவுறுத்தவில்லை. யாயிரின் இல்லம் நகர்கிறார். இறப்பின்மேலும் இயற்கையின்மேலும் தமக்கு அதிகாரம் உள்ளது என்பதை இயேசு மக்களுக்கு உணர்த்துகிறார். தோல்வி கண்டு நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கடவுள் நம்மோடு இறுதிவரை வரைகிறார்.
(இ) அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்!
‘என்னால் இது முடியும்!’ என்று நாம் சொல்லும்போது, மற்றவர்கள் உடனடியாக ‘உன்னால் இது முடியாது!’ என்று சொல்லி நகைப்பார்கள். அவர்களின் நகைப்பு காண்கிற அந்த நொடி நாமும் நகைத்துவிட்டு வழிநடக்க வேண்டும். நம்மைச் சுற்றி அமர்ந்துகொண்டு ஓலமிட்டு அழுபவர்கள் ஏராளம். அழுகுரலைக் கேட்டுக்கொண்டே இருப்பவர் நகர முடியாது. இந்த நேரத்திலும் யாயிரின் நம்பிக்கை சோதிக்கப்பட்டது. வாயிற்படி வரை வந்தவர் வீட்டுக்குள் வருவார் என்ற நம்பிக்கையை யாயிர் இழக்கவில்லை.
இன்றைய பதிலுரைப்பாடல், ‘ஆண்டவரை நாடுவோரின் இதயம் வாழும்!’ எனக் கற்பிக்கிறது (காண். திபா 22).
புனித ஜான் தெ பிரிட்டோ (அருளானந்தர்)
மறவ நாட்டு மாணிக்கம், செம்மண் புனிதர் என அன்போடு அழைக்கப்படும் புனித அருளானந்தரின் (ஜான் தெ பிரிட்டோ) திருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இயேசு சபையின் மதுரை மிஷன் களப்பணியின் முக்கியமான மறைசாட்சி இவர்.
1693-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதி பாம்பாற்றங்கரையில் உள்ள ஓரியூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றார். பிப்ரவரி 3-ஆம் தேதி சிறையில் தன் தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதுகின்றார்:
‘கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய ஓரியூர் தடியத்தேவனிடம் அனுப்பி வைத்தனர். கால தாமதமின்றி என்னைக் கொன்று விடுமாறு அவனுக்கு இரகசிய உத்தரவும் அனுப்பப்பட்டது. இங்கு நான் ஜனவரி 31-ஆம் தேதி வந்துசேர்ந்தேன். பொறுமையின்றி நான் மரணத்தை எதிர்நோக்கி இருக்கின்றேன். அதுவே என்னுடைய இலட்சியத்தை நிலைநிறுத்தக் கூடியது. இதுவரை நான் செய்துவந்த வேலைக்குக் கைம்மாறாக என் உயிரைத் தியாகம் செய்யக்கூடிய பொன்னான சந்தர்ப்பம் இப்போது வந்துவிட்டது.’
இந்த எழுத்துகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சோகம் அதிகம். தன் தலை வெட்டப்படுவதற்காக அவர் குனிந்தபோது அவருடைய உள்ளத்தில் எழுந்த உணர்வு என்னவாக இருந்திருக்கும்! தன் நாட்டின் பாதுகாப்பு, உறவினரின் உடனிருப்பு, பணி என அனைத்தையும் துறந்துவிட்டு, இந்த மண்மேட்டில் முழந்தாள்படியிட்டுக் கிடக்க அவரால் எப்படி முடிந்தது?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: