இன்றைய இறைமொழி
சனி, 29 மார்ச் ’25
தவக்காலம் மூன்றாம் வாரம் – சனி
ஓசேயா 6:1-6. லூக்கா 18:9-14
இருவகை இறைவேண்டல்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஓர் உவமையை மொழிகிறார். ‘கடவுளின் திருமுன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்படுபவர் யார்?’ என்னும் கேள்விக்கு விடையாக அமைகிறது இந்த உவமை. இறைவேண்டல் வழியாக நாம் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆக முடியும் என்பது இயேசுவின் சமகாலத்துப் புரிதலாக இருந்தது. இறைவேண்டலில் நாம் கொண்டிருக்கும் மனநிலை அல்லது மனப்பாங்கே நம்மைக் கடவுளை நோக்கி அல்லது கடவுளை விட்டு நகர்த்துகிறது எனக் கற்பிக்கிறார் இயேசு.
இறைவேண்டல் செய்கிற பரிசேயர் தன்னை மையப்படுத்தியும் தன் நற்செயல்களை மையப்படுத்தியும் தன் நேர்மையை மையப்படுத்தியும் பேசுகிறார். தன் நற்செயல்களைப் பட்டியலிடுகிறார். அவற்றுக்கான பலனைக் கொடுப்பது கடவுளுடைய கடமை என்பதுபோல கடவுளோடு வியாபாரம் செய்கிறார்.
வரிதண்டுபவரோ கடவுளை மையப்படுத்தி இறைவேண்டல் செய்கிறார். இவர் தன்னுடைய நொறுங்குநிலையை அறிக்கையிடுவதோடு கடவுளுடைய இரக்கப் பெருக்காலேயே அனைத்தும் சாத்தியம் என்பதை உணர்ந்தவராக இருக்கிறார்.
இயேசு அவருடைய சமகாலத்துப் புரிதலைப் புரட்டிப்போடுகிறார்.
மிகுதியான சொற்கள், மிகுதியான நற்செயல்கள், மிகுதியான நேர்மை அல்ல, மாறாக, கடவுளின் இரக்கமே நம்மை வழிநடத்துகிறது.
மேலும், தாழ்ச்சியின் மேன்மையையும் இங்கே எடுத்துரைக்கிறார்: ‘தம்மைத் தாமே உயர்த்துகிறவர் தாழ்த்தப்படுவார். தம்மைத் தாமே தாழ்த்துபவர் உயர்த்தப்படுவார்.’
முதல் வாசகத்தில், ஏறக்குறைய இதே கருத்தையே வாசிக்கிறோம். ஆண்டவராகிய கடவுளுக்கு நாம் அளிக்கும் பலிகள் அல்ல, மாறாக, அவருடைய இரக்கம் பற்றிய அறிவே நம்மை வழிநடத்துகிறது.
இன்று நாம் செய்யும் இறைவேண்டலை எண்ணிப் பார்ப்போம்? மேற்காணும் இருவகை இறைவேண்டல்களில் இது எத்தகையது?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: