இன்றைய இறைமொழி
சனி, 12 அக்டோபர் ’24
பொதுக்காலம் 27-ஆம் வாரம், சனி
கலாத்தியர் 3:22-29. லூக்கா 11:27-28
இருவகை உறவு
‘நீ வளரும்போது, ‘அவன் இன்னாருடைய மகன்’ என்று சொல்லும் உலகம், நீ வளர்ந்தபின், ‘இவனுடைய தந்தைதான் அவர்’ என்று சொல்லத் தொடங்கினால், அது உனக்கும் பெருமை, உன் தந்தைக்கும் பெருமை!’
ஏதோ, ஒரு திரைப்படத்தில் நான் கேட்ட வசனம் இது.
நம் இருத்தல் மற்றும் இயக்கத்தைக் காண்கின்ற உலகம், அது கண்டு நம் பெற்றோரைப் புகழ்வது இயல்பு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தேறுகிறது.
பெண் ஒருத்தி, இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து வாழ்த்துகிறார்:
‘உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்’
அப்பெண் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, மரியாள் உடனிருந்திருக்கலாம். அல்லது மரியாள் அந்த இடத்திற்கு வந்திருக்கலாம். மரியாளின் வருகையை இயேசுவுக்கு உணர்த்துவதற்காக அப்பெண் சொல்லியிருக்கலாம்.
அல்லது, மரியாளின் இருத்தல் இல்லாமலேயே அப்பெண் அவ்வார்த்தைகளைச் சொல்லி இயேசுவை வாழ்த்தியிருக்கலாம்.
இந்த வாழ்த்தின் உள்பொருள் எளியதுதான்: ‘நல்ல மரம் நல்ல கனியைக் கொடுக்கும். நீ நல்ல கனி. அப்படி என்றால் உன் அம்மா அல்லது அப்பா நல்ல மரம். மரம் இனிதே வாழ்க!’
அப்பெண், இயேசுவுக்கும் மரியாளுக்கும் இருந்த உடல்சார் உறவு பற்றிப் பேசுகின்றார்.
ஆனால், இயேசுவோ, அப்பெண்ணின் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து, தனக்கும் மரியாளுக்கும் இருக்கிற ஆவிசார் உறவு பற்றிப் பேசுகின்றார்:
‘இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்’
ஆக, மரியாளின் பேறு பெற்ற நிலை இப்போது இன்னும் ஒரு படி மேலே போகிறது. இயேசுவைப் பெற்றதால் மட்டுமல்ல, இறைத்திட்டத்திற்கு, ‘ஆம்’ என்று சொன்னதால் இன்னும் அதிகம் பேறுபெற்றவர் கிறார்.
மேலும், இதன் உள்பொருள் என்ன?
இறைவார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடிக்கும் எவரும் பேறுபெற்ற நிலையை அடைய முடியும்.
நமக்கும் இயேசுவுக்கும் உடல்சார் உறவு சாத்தியமில்லை என்றாலும், ஆவிசார் உறவு சாத்தியமே. அந்த ஆவிசார் உறவுக்கான வழி இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்பது.
நிற்க.
அந்தப் பெண் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது இயேசு கண்டிப்பாக புன்முறுவல் பூத்திருப்பார். ‘அப்படியா! அதெல்லாம் ஒன்னுமில்லங்க!’ என்று வெட்கப்பட்டிருப்பார்.
இயேசுவின் கவனத்தை ஈர்த்து, அவரின் முகத்தில் புன்முறுவல் ஏற்படக் காரணமாயிருந்த அந்த பெயரில்லாப் பெண்ணும் பேறுபெற்றவளே!
கடவுளின் கவனத்தை ஈர்க்கவும், அவரைச் சிரிக்க வைக்கவும் ஆயிரம் வழிகள் இருக்கின்றன.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ கடவுளின் கவனத்தை ஈர்க்கக் கற்றவர்களாக இருக்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 223)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: