இன்றைய இறைமொழி
வியாழன், 6 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 4-ஆம் வாரம் – வியாழன்
எபிரேயர் 12:18-19, 21-24. திருப்பாடல் 48. மாற்கு 6:7-13
இருவர் இருவராக!
போதனை, வல்ல செயல்கள், சொந்த ஊர் பயணம் என நகர்கிற இயேசு, இன்றைய நற்செய்தி வாசகத்தில் தம் பணியில் சீடர்களை இணைக்கிறார். இருவர் இருவராக அவர்களைப் பணிக்கு அழைக்கிறார். தம் சீடர்கள் தம்மைப் பின்பற்றுபவர்கள் மட்டுமல்லர், தம் பணியில் பங்கேற்பாளர்கள் என்பதை உணர்ந்தவராக இருக்கிறார் இயேசு. பணியை மற்றவர்களோடு பகிர்தல், பணிகளில் மற்றவர்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை இயேசு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
நாம் செய்கிற பணியோடு – ஆசிரியப் பணி, அலுவலகப் பணி, அருள்பணியாளர் பணி போன்றவே – நாம் பல நேரங்களில் நம்மையே ஒன்றித்துக்கொள்கிறோம். நம் பணியே நம் பற்றாக, அடையாளமாக மாறுவதால் அதை நாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை. அல்லது மற்றவர்கள் நம்மைவிடச் செயல்திறன் குறைவானவர்கள் என்னும் முற்சார்பு எண்ணம் கொண்டவர்களாக இருக்கும்போது நாம் பணிகளைப் பகிர்வதில்லை. அல்லது மற்றவர் நம்மைவிட நன்றாகச் செய்து நற்பெயர் பெற்றுவிடுவார் என்ற ஒப்பீட்டின் காரணமாக நாம் பணிகளைப் பகிர்வதில்லை.
‘நான் ஒன்றுமில்லை!’ என்று நினைப்பவர் மட்டும்தான் தம் பணிகளைப் பகிர்ந்துகொடுக்க இயலும்.
இயேசுவைப் போலவே சீடர்கள் போதிக்கிறார்கள். இயேசு செய்த வல்ல செயல்களை அவர்களும் செய்கிறார்கள். ஆனால், இயேசுவிடம் ஒப்பீட்டு உணர்வோ, பயமோ, பொறாமையோ இல்லை.
இயேசு தம் சீடர்களைப் பணிக்கு அனுப்பும் நிகழ்வு நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுத் தருகிறது:
(அ) இருவர் இருவராக
‘தனி மனிதராய் இருப்பதை விட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும். ஒருவர் விழுந்தால் அடுத்தவர் அவரைத் தூக்கி விடுவார்’ (சஉ 4:9-10) என்கிறார் சபை உரையாளர். இன்றைய உலகம் நாம் தனிமையாக இருக்க வேண்டும் என்று கற்பிக்கிறது. தனித்திருத்தல் நேர மேலாண்மைக்கும் குவியத்துக்கும் உகந்ததாக இருந்தாலும், சோர்வையும் விரக்தியையும் தருகிறது. மற்றவரின் உடனிருப்பு என் ஆற்றலைக் கூட்டுகிறது என்பதை உணர்ந்து மற்றவருடன் வழிநடக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
(ஆ) சிறுகச் சொல்தல்
சீடர்கள் என்ன போதிக்க வேண்டும் என்பதை இயேசு தயார் செய்து கொடுக்கவில்லை. என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் எனக் கற்றுத் தரவில்லை. ‘மனம் மாறுங்கள்’ என்னும் சொற்கள் மட்டுமே சீடர்கள் பேசுகிற சொற்களாக இருக்கின்றன. இன்று நம்மைச் சுற்றி சொற்கள்தாம் குவிந்துகிடக்கின்றன. சொற்கள் படங்களாகவும் காணொலிகளாகவும் மாறி நிற்கின்றன. சொற்கள் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நலம்.
(இ) சிறுநுகர் வாழ்வு
பை, உணவு, செப்புக் காசு போன்றவற்றைத் தடை செய்கிற கடவுளையும் மக்களையும் சார்ந்து வாழ அழைக்கிறார். தன்நிறைவு என்பது ஒரு சோதனை. நம் தேவைகள் நிறைவேறிவிட்டால் நாம் கடவுளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்து தூரப் போய்விடுகிறோம். நமக்குத் தேவையானவற்றைக் கொண்டு மட்டும் வாழவும், பற்றுக்கள் குறைக்கவும் இயேசு நம்மை அழைக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், இரண்டு மலைகளை – சீனாய் மலை, சீயோன் மலை – ஒப்பிடுகிறார் ஆசிரியர். சீனாய் மலை தண்டனையைக் குறிக்கிறது. சீயோன் மலை இரக்கத்தைக் குறிக்கிறது. நம் வாழ்க்கையை நாம் சீயோன் மலையில் வாழ்வதுபோல இரக்கத்துடனும் கனிவுடனும் வாழ வேண்டும்.
கடவுளின் உடனிருப்பு தங்கள் நடுவே இருத்தல் குறித்து மகிழ்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 48).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: