• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இறுதிவரை நல்ல இரசம்! இன்றைய இறைமொழி. ஞாயிறு, 19 ஜனவரி ’25.

Sunday, January 19, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 19 ஜனவரி ’25
பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு
எசாயா 62:1-5. திருப்பாடல் 96. 1 கொரிந்தியர் 12:4-11. யோவான் 2:1-12

 

இறுதிவரை நல்ல இரசம்!

 

புத்தாண்டு தொடங்கி இன்று 19-ஆவது நாள். புத்தாண்டு அன்று நாம் நிறைய வாக்குறுதிகள் எடுத்திருப்போம் அல்லது கொடுத்திருப்போம். ‘காலையில் சீக்கிரம் எழுதல், புத்தகம் வாசித்தல், கோபம் குறைத்தல், அனைவரோடும் நட்பு பாராட்டுதல், உடல்நலம் பேணுதல், நிதிவளம் மேம்படுத்துதல், குழந்தைகள்மேல் அதிக கவனம் செலுத்துதல்’ போன்ற வாக்குறுதிகளை எடுத்திருப்போம். இவை நாம் நமக்கு அளித்த வாக்குறுதிகள். ஆனால், நாமே அவற்றை தன்விருப்பத்தோடு அளித்திருந்தாலும் அவற்றை நிறைவேற்றத் தவறியிருப்போம். ‘ஐயோ, என்னால இத செய்ய முடியலயே!’ என்ற கலக்கம், குற்றவுணர்வு, பயம் நம்மைத் தழுவத் தொடங்கியிருக்கும். இறுதிவரை நல்ல இரசத்தை நாம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி, மீண்டும் நம் புத்தாண்டுப் பயணத்தை நெறிப்படுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இறுதி வரை நல்ல இரசம் வேண்டுமெனில் அங்கே இறைவன் இருத்தல் வேண்டும்!

 

இயேசுவின் பணிவாழ்வை அறிமுகம் செய்கிற ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் (மாற்கு, மத்தேயு, லூக்கா) அவர் தொழுகைக்கூடத்தில் அல்லது வீதியில் நற்செய்தியை அறிவிப்பவராகவும், தொழுகைக்கூடத்தில் பேய் ஓட்டுபவராகவும், தொழுநோய் பீடித்தவருக்கு நலம் தருபவராகவும் அறிமுகம் செய்கிறார்கள். இவர்களுக்கு முற்றிலும் மாறாக, யோவான் நற்செய்தியாளர், திருமண விழா என்னும் சூழலில் இயேசுவின் முதல் போதனையை, அறிகுறியை (வல்ல செயலை) பதிவு செய்கிறார்.

 

கானாவூர் திருமண விழாவில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றும் நிகழ்வை இன்றைய நற்செய்தியாக வாசிக்கிறோம். முதலில் இந்நிகழ்வில் உள்ள சில இறையியல் மற்றும் இலக்கியக் கூறுகளைப் புரிந்துகொள்வோம். பின்னர், இந்நிகழ்வு நமக்கு அளிக்கும் வாழ்க்கைப் பாடங்களை எடுத்துக்கொள்வோம்.

 

(1) எதிர்பாராத நிகழ்வு

 

மனிதர்கள் எதிர்பாராத வேளையில் கடவுள் மனுவுரு ஏற்கிறார். அவர்கள் எதிர்பாராத நேரங்களில் இடங்களில் அவர் அவர்களைச் சந்திக்கிறார். திருமண விழாவுக்கான முன்தயாரிப்பாகத் தயாரிக்கப்பட்ட திராட்சை இரசம் – தேவையான அளவு செய்யப்பட்டிருந்தாலும் வாங்கப்பட்டிருந்தாலும் – எதிர்பாராத விதமாக இரசம் தீர்ந்துவிடுகிறது. இயேசுவே எதிர்பாராத வேளையில் அவருடைய தாய், ‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது’ எனச் சொல்லி அறிகுறி நிகழ்வைத் தொடங்குகிறார். பந்தி மேற்பார்வையாளரே எதிர்பாராத அளவுக்கு நல்ல இரசம் இறுதி வரை பரிமாறப்படுகிறது. இதுவரை தங்களில் ஒருவர் என இயேசுவை நினைத்த சீடர்கள் எதிர்பாராத விதமாக புதிய அனுபவம் – கடவுளின் மாட்சி இயேசுவில் வெளிப்படுத்தப்பட்டதை – உணர்கிறார்கள்.

 

(2) அனைவரின் ஒத்துழைப்பு

 

கூட்டொருங்கியக்கத்தின் பொருளை நாம் இந்த அறிகுறியில் கண்டுகொள்ள முடிகிறது. அனைவரும் அவரவருக்குரிய பணியைச் செய்கிறார்கள். மரியா செயலைத் தொடங்குகிறார். இயேசு தம் மாட்சியை வெளிப்படுத்துகிறார். பணியாளர்கள் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புகிறார்கள். அவர்களே மொண்டு இரசத்தைப் பரிமாறுகிறார்கள். பந்தி மேற்பார்வையாளர் நிகழ்வில் மணமகனைப் பாராட்டுகிறார். சீடர்கள் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கிறார்கள். அனைவரும் அவரவருடைய பணிகளைச் செய்வதோடல்லாமல், ஒருவருடைய பணி மற்றவர்மேல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற நிலையில் அவர்களுடைய பணிகள் ஒன்றோடொன்று பிண்ணிக்கிடக்கின்றன. வெறுமனே மேஜிக் செய்து திராட்சை இரசத்தை உருவாக்கவில்லை இயேசு. பணியாளர்கள் நிரப்பிய தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றுகிறார் இயேசு. கடவுள் நம் வாழ்வில் திராட்சை இரசம் என்னும் அறிகுறியை நிகழ்த்த வேண்டுமெனில் நம் தொட்டிகளைத் தண்ணீர்கொண்டு நாம்தான் நிரப்ப வேண்டும்.

 

(3) இயேசுவே மணமகன்

 

யோவான் நற்செய்தியில் பொருள் இரண்டு நிலைகளில் காணப்படுகிறது. மேலோட்டமான வாசிப்பில், நிகழ்வு திருமண விழா போல இருக்கிறது. ஆழமான வாசிப்பில், சில கேள்விகள் எழுகின்றன. திருமண நிகழ்வில் விருந்தினர்கள், பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், மணமக்கள் எங்கே? பழைய ஏற்பாட்டில், எப்போதெல்லாம் கதாநாயகர்கள் தண்ணீர்த்தொட்டிக்கு அல்லது கிணற்றுக்கு அருகில் வருகிறார்களோ அங்கே அவர்களுக்குத் திருமணம் நிறைவேறும்: ஈசாக்கிற்காக பெண் தேடுகிற ஆபிரகாமின் பணியாளர் ரெபேக்காவை கிணற்றருகில் காண்கிறார். யாக்கோபு இராகேலைக் கண்டது, மோசே மிதியானின் அர்ச்சகருடைய மகளைக் கண்டதும் கிணற்றருகில்தான். சவுல் இஸ்ரயேல் மக்களின் அரசன் என்னும் நிகழ்வும் அவர் தண்ணீர் சுமந்துவந்த பெண்களைக் காணும்போதுதான் நிறைவேறுகிறது. ஆறு கல்தொட்டிகளில் தண்ணீர். அத்தண்ணீர் அருகில் வருகிற இயேசு, புதிய இஸ்ரயேல் என்னும் மணமகளை மணமுடிக்கிற மணமகனாக மாறுகிறார். மேலும், இறுதிவரை திராட்சை இரசத்தைத் தக்க வைக்கிற மேன்மையான மணமகனாகவும் இருக்கிறார்.

 

(4) இயேசுவே நல்ல இரசம்

 

‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது’ என்று சொல்வதன் வழியாக, இயேசுவின் தாய், பழைய உடன்படிக்கையின் இரசம் தீர்ந்துவிட்டது என்று சொல்கிறார். பழைய உடன்படிக்கையை கனியால் அறிமுகம் செய்த ஏவா போல, புதிய உடன்படிக்கையை திராட்சை இரசத்தால் அறிமுகம் செய்கிறார் மரியா. ஏற்கெனவே இருந்த சட்டம், இறைவாக்குகள், அச்சம் என்னும் இரசம் தீர்ந்துவிட, இரக்கத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட புதிய உடன்படிக்கை இயேசுவில் தொடங்குகிறது. ‘திராட்சை இரசம் எங்கிருந்து வந்தது’ என்பது பணியாளர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ‘இவர் எங்கிருந்து வந்தவர்?’ என்பது யோவான் நற்செய்தியின் முதன்மையான கேள்வி. நிக்கதேம் தொடங்கி, இறுதியில் பிலாத்து வரை, ‘இயேசு எங்கிருந்து வந்தவர்?’ என்ற கேள்வியோடு நிற்கிறார்கள். பதில் தெரிந்ததுபோலவும் இருக்கிறது, தெரியாதது போலவும் இருக்கிறது.

 

(5) இயேசுவின் மாட்சி

 

‘இந்நிகழ்வின் வழியாக இயேசு தம் மாட்சியை வெளிப்படுத்தினார்’ என்று பதிவு செய்கிறார் யோவான். தன் நற்செய்தியின் முகவுரையில் மனுவுருவாதல் பற்றிய நிகழ்வை மாட்சியின் வெளிப்பாடு என்றே குறிப்பிடுகிறார்: ‘வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்’ (யோவா 1:14). நிகழ்வில் ஒரு முரணும் இருக்கிறது. இயேசுவின் மாட்சி அனைவருக்கும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால், இரசம் எங்கிருந்து வந்தது என்பது அனைவருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை. அடித்தளப் பணியாளர்களுக்கே வெளிப்படுத்தப்படுகிறது. வெளிப்பாடும் மறைபொருளும் இணைந்தே நிற்கிறது இயேசுவில். கடவுள் தம்மை வெளிப்படுத்தினாலும் அவர் மறைபொருளாகவே இருக்கிறார்.

 

(6) சீடர்களின் நம்பிக்கை

 

நிகழ்வின் இறுதியில், ‘அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்’ எனப் பதிவு செய்கிறார் யோவான். திருமண விழாவுக்கு விருந்தினர்களாக வந்தவர்கள் புதிய மணமகனின் நம்பிக்கையாளர்களாக மாறுகிறார்கள். இந்த மாற்றம் நிகழ்வதால்தான் இயேசுவின் வல்ல செயலை ‘அறிகுறி’ எனப் பதிவு செய்கிறார் யோவான். இயேசுவின் செயல்கள் அனைத்தும் அவர் யார் என்பதைச் சுட்டிக்காட்டும் விரல்களாக இருக்கின்றன.

 

இந்நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) பிரச்சினைக்கும் செயல்பாட்டுக்கும் உள்ள தூரம் குறைய வேண்டும்

 

‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது’ என்பது ஒரு பிரச்சினை. திராட்சை இரசக் குறைவு என்பது திருமண விழாவின் மகிழ்ச்சியைக் குறைப்பதோடு, மணவீட்டாருக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும். இந்தப் பிரச்சினையைக் கண்டவுடன் உடனடியாக செயலாற்றுகிறார் இயேசுவின் தாய். பிரச்சினையை இயேசுவிடம் முன்மொழிந்ததோடல்லாமல், ‘அவர் உங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்!’ என்று பணியாளர்களுக்குக் கட்டளை இடுகிறார். இயேசுவும் தொடர் செயல் ஆற்றுகிறார். வெற்றி என்பது பிரச்சினைக்கும் செயல்பாட்டுக்கும் உள்ள இடைவெளிக் குறைவைப் பொருத்ததே. எனக்கு உடல்நலக் குறைவு என்றால் அதை சரி செய்வதற்கான செயல்பாட்டை உடனடியாக நான் தொடங்க வேண்டும். ஒரு நூல் அல்லது கட்டுரை எழுத வேண்டும் என்னும் தேவை இருந்தால் அதை உடனடியாக நான் தொடங்க வேண்டும். ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தில் ஒரு சொலவடை உண்டு: ‘தவறான பேருந்தில் ஏறிவிட்டோம் எனத் தெரிந்தால், உடனடியாக அதிலிருந்து இறங்கிவிடு. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் திரும்பி வருவதற்கான நேரத்தையும் பொருள்செலவையும் கூட்டும்.’ உடனடியான செயல்பாடு நம் வாழ்வை மேம்படுத்துகிறது. வெறும் எண்ணம் அல்ல, மாறாக, செயல்பாடே மாற்றத்துக்கு வழிவகுக்கிறது.

 

(ஆ) ஒவ்வொருவரும் அவரவர் பணியைச் செய்ய வேண்டும்

 

‘அருள் கொடைகள் பலவகையுண்டு … திருத்தொண்டுகள் பலவகையுண்டு’ என்று கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், ‘பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகின்றன’ என்கிறார். திராட்சை இரசம் நிறைவாகக் கிடைக்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் பணியைச் செய்ய வேண்டும். குறிப்பாக இயேசு நம் இல்லம் வர வேண்டும். இயேசு நம் இல்லம் வராதவரை தொட்டிகளில் தண்ணீர் மட்டுமே இருக்கும். மேலும், நம் செயல்பாடு இல்லாமல் கடவுள் செயலாற்ற இயலாது. நம்மால் முடிந்ததை நாம் முழுமையாகச் செய்யும்போது கடவுள் செயலாற்றத் தொடங்குவார்.

 

(இ) மகிழ்ச்சி என்னும் அளவுகோல்

 

நிகழ்வின் தொடக்கத்திலிருந்த இறுக்கம் மறைந்து மகிழ்ச்சி பெருகுகிறது. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் மகிழ்ச்சியை வழங்குபவராக வருகிறார். ‘எப்சிபா’ (‘என் மகிழ்ச்சி அவளில்’), ‘பெயூலா’ (‘திருமணம் முடிக்கப்பட்டவள்’) என்னும் புதிய பெயர்களை இஸ்ரயேலுக்கு வழங்குகிறார் கடவுள். எகிப்திய இலக்கியங்களின் கூற்றுப்படி, மனிதர்கள் இறந்தவுடன் அவர்களுடைய ஆன்மா நிலைவாழ்வின் வாயிலுக்குச் செல்லும். அங்கே இரண்டு கேள்விகள் கேட்கப்படும்: ‘நீ உன் வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தாயா?’ ‘உன்னால் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்களா?’ இந்த இரண்டு கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்று விடையளிக்கிற ஆன்மா பேரின்பத்துக்கும், ‘இல்லை’ என்று விடையளிக்கிற ஆன்மா நிலையான தண்டனைக்கும் செல்லும். திருமண விழா, மணமகன், திராட்சை இரசம் என அனைத்தும் மகிழ்ச்சியின் அடையாளங்களாக உள்ளன. இயேசுவின் உடனிருப்பு மகிழ்ச்சி தருகிறது. ஆறாவது கற்சாடிக்கு அருகில் ஏழாவது கற்சாடியாக நின்று நிறைவைத் தருகிறார் இயேசு. நம் வாழ்வின் மகிழ்ச்சியை நாம் இறுதிவரை தக்கவைத்துக்கொள்ளுமாறு வாழ்தல் நலம்.

 

18 ஜனவரி (நேற்று) முதல் 25 ஜனவரி வரை உள்ள வாரத்தை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் எனக் கொண்டாடுகிறோம். ஒரே கிறிஸ்துவை அறிக்கையிடுகிற நாம் நமக்குள்ளேயே பிளவுபட்டு நின்றால், ஒருமைப்பாட்டுக்காக இறைவேண்டல் செய்த கிறிஸ்துவுக்கு எதிர்சான்றுகள் ஆகிவிடுவோம். கிறிஸ்துவை மையப்படுத்திய பார்வையும் வாழ்க்கையும் நம் ஒன்றிப்பு வழிவகுக்கும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: