• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இறையாட்சிக்கான பதிலிறுப்பு. இன்றைய இறைமொழி. 14 நவம்பர் 2024

Thursday, November 14, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வியாழன், 14 நவம்பர் 2024
பொதுக்காலம் 32-ஆம் வாரம், வியாழன்
பிலமோன் 7-20. திருப்பாடல் 146:7, 8-9அ, 9ஆ-10. லூக்கா 17:20-25

 

இறையாட்சிக்கான பதிலிறுப்பு

 

‘இறையாட்சி கண்களுக்குப் புலப்படாதது, ஆவலோடு எதிர்பார்க்கப்படுவது, மாந்தர்களால் நிராகரிக்கப்படுவது.’

 

‘இறையாட்சி எப்போது வரும்?’ என்னும் பரிசேயர்களின் கேள்விக்கு இயேசு விடையளிக்கும் பகுதியே இன்றைய நற்செய்தி வாசகம்.

 

‘இறையாட்சி உங்கள் நடுவிலேயே செயல்படுகிறது’ எனச் சொல்கிறார் இயேசு.

 

இறையாட்சி என்னும் சொல் எதைக் குறிக்கிறது? (அ) இறையாட்சி என்னும் சொல் இயேசுவையே குறிக்கிறது. ஏனெனில், இறையாட்சி இயேசுவை மையமாகக் கொண்டது. (ஆ) இறையாட்சி என்பது இயேசுவின் போதனைகள் மற்றும் வல்ல செயல்களைக் குறிக்கிறது. (இ) இறையாட்சி என்பது சீடர்களின் குழுமம் ஏற்படுத்திய மாற்றுச் சமூகத்தைக் குறிக்கிறது.

 

கடுகுவிதை, புளிப்புமாவு போன்ற உருவகங்கள் வழியாக முன்னர் இறையாட்சி பற்றிய இயேசு, இங்கே இறையாட்சிக்கான பதிலிறுப்பு எப்படி இருக்கும் என்பதை முன்மொழிகிறார்.

 

(அ) இறையாட்சி கண்களுக்குப் புலப்படாதது

 

புளிப்பு மாவு எடுத்துக்காட்டு வழியாகவும் இச்செய்தி வழங்கப்படுகிறது. அதாவது, இறையாட்சியின் செயல்பாட்டை மக்கள் காணமாட்டார்கள். கண்ணுக்குப் புலப்படாத இயல்பு ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் இறையாட்சியைப் பற்றி அதிகமாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். இது முதல் பதிலிறுப்பு.

 

(ஆ) இறையாட்சி ஆவலோடு எதிர்பார்க்கப்படுவது

 

சமயம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்னும் தளங்களில் நலிவுற்ற மக்கள் இறையாட்சிக்காக ஆவலோடு காத்திருப்பார்கள். ஏனெனில், இறையாட்சியின் வருகை அவர்களுக்கு விடுதலையை அளிக்கும். இது இரண்டாவது பதிலிறுப்பு.

 

(இ) இறையாட்சி மாந்தர்களால் நிராகரிக்கப்படுவது

 

‘மானிட மகன் இத்தலைமுறையினரால் உதறித்தள்ளப்பட வேண்டும்’ என முன்னுரைக்கிறார் இயேசு. இறையாட்சி தருகிற சமத்துவம், அகவிடுதலை, மனித மாண்பு, சகோதரத்துவம் போன்றவற்றால் நெருடல் அடைகிற மக்கள் இறையாட்சியை நிராகரிப்பார்கள். இது மூன்றாவது பதிலிறுப்பு.

 

இறையாட்சி என்பது ஒன்றுதான். ஆனால், மக்கள் தாங்கள் நிற்கும் தளத்திலிருந்து பதிலிறுப்பு செய்கிறார்கள்.

 

இறையாட்சியை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கவும், நிராகரிக்கவும் காரணம் என்ன?

 

இறையாட்சி விடுக்கிற சவால்கள் நமக்கு ஏற்புடையனவாய் அல்ல என்பதற்காக நாம் அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிறோம்.

 

பின் ஏன் அதற்காக ஏங்குகிறோம்?

 

இதுவே நம் போராட்ட நிலை. ஒரு பக்கம் இறையாட்சிக்கான ஏக்கம் நம்மில் ஆற்ற முடியாததாக இருக்கிறது. அருள்தளத்திலும் பொருள்தளத்திலும் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் நம் உள்ளங்களை இறையாட்சியை நோக்கித் திருப்புகின்றன.

 

இன்றைய வாசகம் தரும் பாடம் என்ன?

 

‘இறையாட்சி தலைமைத்துவம்’ என்பது இன்று அதிகமாகப் பேசப்படுகிற ஒன்று. கடவுளை என் அரசர் என்றால், நான் அவருடைய மகன் அல்லது மகள் என்னும் நிலையில், இளவரசன் அல்லது இளவரசி என்று உயர்கிறேன். அப்படி என்றால் என்னுடைய சொல், செயல், எண்ணம் அனைத்தும் அரசனுக்குரிய மாண்புடனும் மதிப்புடனும் மேன்மையுடனும் இருத்தல் வேண்டும். இத்தகைய தலைமைத்துவம் அனைவரும் இளவரசர்கள் இளவரசிகள் என்ற நிலையில் அனைவருக்கும் உரிய மாண்பை அளிக்கும்.

 

இத்தலைமைத்துவத்திற்கு மூன்று திசைகள் உண்டு: (அ) மேல் நோக்கி: கடவுளோடு நம்மை இணைத்துக்கொள்வது. (ஆ) தன் நோக்கி: நம்மையே ஆய்ந்து பார்த்து வளர்த்தெடுப்பது. (இ) பிறர்நோக்கி: மற்றவர்களோடு உள்ள உறவுநிலையில் கனி தருவது.

 

இறையாட்சித் தலைமைத்துவத்தை நம் தனிப்பட்ட வாழ்விலும் குழும வாழ்விலும் கைக்கொண்டால் இறையாட்சி நம் நடுவிலேயே செயல்படுவதை உணர முடியும்.

 

இன்றைய முதல் வாசகத்தில், பிலமோனுக்கு எழுதுகிற பவுல், ஒனேசிமு என்னும் அடிமையை கிறிஸ்தவ நம்பிக்கையில் சகோதரன் என்னும் நிலையில் ஏற்றக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார். பவுல் ஏற்படுத்திய ஒரு சமூகப் புரட்சி என்று நாம் இதைக் குறிப்பிட முடியும். பவுல் கொண்டிருந்த இறையாட்சி தலைமைத்துவத்துக்கான எடுத்துக்காட்டாக இச்செயலை நாம் குறிப்பிட முடியும். ஏனெனில், கடவுளை நோக்கி தன்னையே இணைத்துக்கொள்ளும் ஒருவர் பிறரை நோக்கியும் நகர்ந்து அவர்களோடு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். ஒருவரின் பின்புலத்தைக் கொண்டு இடறல்படாமல், மாறாக, அவருடைய தற்போதைய இருத்தல் நிலையைக் கொண்டு அவரை ஏற்றுக்கொள்வது நாம்

 

நிற்க.

 

எதிர்நோக்கின் திருப்பயணிகள் இறையாட்சித் தலைமைத்துவம் ஏற்பவர்களாக இருக்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 248).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: