இன்றைய இறைமொழி
திங்கள், 10 மார்ச் ’25
தவக்காலம் முதல் வாரம் – திங்கள்
லேவியர் 19:1-2, 11-18. திருப்பாடல் 19. மத்தேயு 25:31-46
இறையாட்சியின் சாவிகள்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறுதித்தீர்ப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். என் சிறுவயதில் நான் அடிக்கடி வாசித்து இரசித்த, வியந்த, பயந்த விவிலியப் பகுதி இது. இந்த நிகழ்வை கற்பனை செய்து பார்க்கும்போது வியப்பாக இருக்கும். உலகில் உள்ள எல்லாரையும் – உலகம் தொடக்கமுதல் இன்று வரை – ஒரே தளத்தில் கூட்ட வேண்டும். இரண்டாகப் பிரிக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் கேட்கும்படி அரசர் பேச வேண்டும். இவ்வளவு பெரிய வேலையை மிக எளிதாகச் செய்துமுடிக்கிறார் மானிட மகன், அரசர், நடுவர். நமக்குத் தெரிந்தவர்களை, நம் உறவினர்களை ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கும்போது நமக்கு எப்படி இருக்கும்!
இந்த நிகழ்வு சொல்வது ஒரே செய்திதான்:
மானிட மகனின் மாட்சியில் வலப்பக்கம் நிற்பதற்கு பெரிய தகுதிகள் எவற்றையும் இயேசு நிர்ணயிக்கவில்லை:
திருச்சட்டத்தை மனப்பாடம் செய்ய வேண்டும், பத்துக் கட்டளைகள் கடைப்பிடிக்க வேண்டும், இறையியல், விவிலியம் படிக்க வேண்டும், மெய்யியலில் தெளிவு வேண்டும், இந்த வேலை செய்ய வேண்டும், அந்த வேலை செய்ய வேண்டும், இவ்வளவு படித்திருக்க வேண்டும், இவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும், இவ்வளவு கையிருப்பு வேண்டும், இன்னென்ன பொருள்கள் வைத்திருக்க வேண்டும் – இப்படி எதுவும் இல்லை தகுதிகள் பட்டியலில்.
இறையாட்சிக்குள் நுழைவதற்கான வழிகள் எல்லாமே சிறிய வழிகள்.
சிறிய வழிகள் வழியாக, சிறியவர்களுக்குச் சிறியவர்களாக மாறினால் போதும் – வலப்பக்கம் நின்றுவிடலாம்.
மேலும், இந்நிகழ்வில் ஆண்டவரே, அரசரே தன்னை சிறியவர்களோடு ஒன்றிணைத்துக்கொள்கிறார்.
வெறும் ஆறு நிகழ்வுகள். ஆறும் சின்னஞ்சிறு நிகழ்வுகள். கையில் கொஞ்சம் பணமும், இருக்க ஒரு சிறிய வீடும், கொஞ்ச நேரமும் இருந்தால் இந்த ஆறையும் செய்து முடித்துவிடலாம்.
ஆனால், இதைச் செய்வதற்குக் கடினமாக இருக்கக் காரணம் என்னவென்றால், நாம் சிறியவர்களாக மாற மறுப்பதும், சிறியவர்களில் அவரைக் காண மறுப்பதும், சிறிய வழிகளைத் தேர்ந்தெடுக்க மறப்பதும்தான்.
மேலும், இவற்றைச் செய்வதால் இறையாட்சியை உரிமையாக்கிக்கொள்ள முடியும் என்ற நிலையிலும் செய்யக்கூடாது. ஏனெனில், அப்படிப்பட்ட ஒரு மனநிலையில் நாம் இவர்களைப் ‘பயன்படுத்தி’ நம் இறையாட்சியைச் சம்பாதிக்க விரும்புவோம். ஒரு மனிதர் தன் சக மனிதரைப் பயன்படுத்துவது இன்னும் ஆபத்தானது.
மேலும், பசி, தாகம், அந்நியம், நிர்வாணம், நோய், தனிமை ஆகியவற்றை மானுடத்தின் முகத்திலிருந்து அகற்றுவதும் அவசியம்.
இவை அனைத்தையும் ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறது இன்றைய முதல் வாசகம் (காண். லேவி 19:1-2, 11-18): ‘உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!’
என்னை நான் அன்பு செய்வது மிக எளிது என்றால், அடுத்திருப்பவரை அன்பு செய்வதும் அப்படித்தானே!
சிறிய வழிகள், எளிய செயல்கள் – இறையாட்சியின் சாவிகள்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: