இன்றைய இறைமொழி
வியாழன், 17 அக்டோபர் ’24
பொதுக்காலம் 28-ஆம் வாரம், வியாழன்
எபேசியர் 1:1-10. லூக்கா 11:47-54
இறைவாக்கினரின் விரக்தி
விருந்தில் இயேசு வசைபாடும் நிகழ்வு இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிறைவு பெறுகிறது. வரிசையாக வசை மொழிகளை வாசித்துவிட்டு, ‘இது கிறிஸ்துவின் நற்செய்தி’ என்று சொல்லும்போதே உள்ளத்தில் ஏதோ ஒரு நெருடல் வருகிறது. இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயர் மனவருத்தம் அடைந்திருப்பார். இயேசுவை அழைத்ததற்காக தன்னையே நொந்திருப்பார். விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களின் கோபத்தையும் பெற்றிருப்பார். இயேசு அனைவருடைய ‘சாப்பிடும் மூட்-ஐ’ கெடுத்துவிடுகிறார்.
ஐயோ கேடு பகுதிகள் உண்மையிலேயே இயேசுவின் சொற்கள் என்று நாம் எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், நற்செய்தியாளர்கள் நற்செய்தி நூல்களை தொகுக்கும்போது தங்களுடைய குழுமங்கள் சந்தித்த பிரச்சினைகளின் பின்புலத்தில்கூட இப்படி எழுதியிருக்கலாம். ஏனெனில், தொடக்கக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய யூத அடையாளத்தை விடத் தொடங்கிய போது, பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், திருச்சட்ட அறிஞர்களின் எதிர்ப்பைச் சந்தித்திருப்பார்கள். அவர்களைத் தங்கள் தலைவராம் இயேசுவே சாடியதாகப் பதிவு செய்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இன்னொரு பக்கம், இவற்றை இறைவாக்கினரின் விரக்தி மொழிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இயேசு பரிசேயர்களைச் சாடும் பகுதிகள் பலருக்கு நெருடலை ஏற்படுத்துகின்றன. பகைவருக்கும் அன்பு எனக் கற்பித்த இயேசு தனக்குப் பகைவர்களாக இருந்த பரிசேயர்கள்மேல் அன்பு காட்டாதது ஏன்? என்றும் மாணவர்கள் கேள்வி எழுப்புவதுண்டு.
இயேசு சாடுதல் பகுதியை எப்படிப் புரிந்துகொள்வது?
(அ) தவற்றைச் சுட்டிக்காட்டுதல் இறைவாக்குப் பணியே. அருள்பணி அல்லது இறைவாக்குப் பணி என்பது வெறும் அன்பையும் இரக்கத்தையும் போதிக்கும் பணி அல்ல. மாறாக, தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்துவதும் அருள்பணியே. நாம் தவறு செய்பவர்களைக் கடிந்துகொள்ளக் கூடாது. ஆனால், தவறுகளைக் கடிந்துகொள்ள வேண்டும். இயேசு தவறுகளைக் கடிந்துகொள்ள விரும்புவதால் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றார்.
(ஆ) மனமாற்றத்திற்கான அழைப்பு. தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன் வழியாக இயேசு அவர்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். வெளிவேடம், போலியான வாழ்க்கை ஆகியவற்றை விட்டு அவர்கள் உண்மையின்பால் திரும்ப வேண்டும் என்பது இயேசுவின் விருப்பமாக இருக்கிறது.
(இ) தன் சீடர்கள் நடுவே அவை இருத்தல் ஆகாது. மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன் வழியாக, அத்தவறுகள் தன் சீடர்களின் குழுவிலும் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகின்றார். பரிசேயர்கள் மற்றும் திருச்சட்ட அறிஞர்களின் தவறுகள் சீடர்கள் நடுவிலும் எழ வாய்ப்பிருக்கிறது என்பதால் இயேசு மறைமுகமாகத் தன் சீடர்களையும் எச்சரிக்கின்றார்.
இயேசுவின் சாடுதல்கள் பகைவர்களை மனமாற்றுவதற்குப் பதிலாக அவர்களின் கோபத்தைத் தூண்டி எழுப்புகின்றன. தன் செயல்களின் விளைவை அறிந்தவராக இருக்கும் இயேசு தொடர்ந்து வழிநடக்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில், எபேசியருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் முகவுரையை வாசிக்கிறோம். ஆண்டவராகிய கடவுள் அனைவருக்கும் வகுத்துள்ள திட்டம் பற்றி எழுதுகிறார் பவுல். கடவுள் நமக்கெனக் கொண்டுள்ள திட்டத்தை அறிந்து செயல்படுத்துதல் நம் நோக்கம் ஆகும்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் குழுமங்களில் இறைவாக்கினர்களாகச் செயல்படுகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 227)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: