இன்றைய இறைமொழி
வியாழன், 13 மார்ச் ’25
தவக்காலம் முதல் வாரம் – வியாழன்
எஸ்தர் (கி) 4:17ஐத் தொடர்ந்து. திருப்பாடல் 138. மத்தேயு 7:7-12
இறைவேண்டலின் ஆற்றல்
வலுவற்ற நான் என்ன செய்ய முடியும்? – இது உங்களின் கேள்வியாக இருக்கிறதா? வலுவற்ற நாம் இறைவேண்டல் வழியாக எதையும் செய்ய முடியும் எனக் கற்பிக்கின்றன இன்றைய வாசகங்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், இளவரசி எஸ்தர் இறைவேண்டல் செய்கிறார். இதன் பின்புலம் அறிந்துகொள்வோம். நகரில் உள்ள யூதர்கள் அனைவரையும் கொன்றுவிடுமாறு அரசர் ஆணை பிறப்பிக்கிறார். இது அரண்மனையில் உள்ள எஸ்தர் இளவரசிக்குத் தெரியாது. அவருடைய வளர்ப்புத் தந்தை (இன்னொரு வகையில் மாமா) மொர்தெக்காய் இது பற்றி எஸ்தருக்குத் தெரிவிக்கிறார்: ‘நீ என் ஆதரவில் ஓர் எளிய பெண்ணாக வளர்ந்துவந்த நாள்களை நினைத்துப்பார். மன்னருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆமான் நமக்கு எதிராகப் பேசி, நம் இனத்தைக் கொல்லுமாறு மன்னரைக் கேட்டுக் கொண்டுள்ளான். எனவே, ஆண்டவரிடம் மன்றாடு. பிறகு நமக்காக மன்னரிடம் பரிந்து பேசு. நம்மைச் சாவினின்று காப்பாற்று!’
எஸ்தர் மிகவும் தயக்கம் காட்டுகிறார். மீண்டும் ஒரு செய்தியை அனுப்புகிறார் மொர்தெக்காய்: ‘நீ மட்டும் பிழைத்துக்கொள்வாய் என எண்ண வேண்டாம். இத்தகைய நேரத்தில் நீ வாளாவிருந்துவிட்டாலும், யூதர்களுக்கு வேறு வழியாக உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும் … இத்தகைய ஒரு வாய்ப்புக்காகவே நீ அரசியாக்கப்பட்டாயோ என்னவோ, யார் அறிவார்.’
உடனடியாகச் செயலாற்றுகிற இளவரசி எஸ்தர் அனைவரும் நோன்பிருந்து தனக்காக மன்றாடுமாறு பணிக்கிறார். இந்த நேரத்தில் இவர் செய்யும் இறைவேண்டலே இன்றைய முதல் வாசகம்.
இறைவேண்டல் பற்றி இந்நிகழ்வு நாம் சொல்வது என்ன?
(அ) மனித வாழ்வின் வரையறை அனுபவங்களில் நமக்கு எதிர்நோக்கு தருவது இறைவேண்டல். எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டதாக நாம் உணரும்போது நம் உள்ளக் கதவைத் தட்டி நம் கடவுளை எழுப்ப உதவுகிறது இறைவேண்டல்.
(ஆ) மனித அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது என்பதை நமக்கு உணர்த்துகிறது இறைவேண்டல். என்னதான் அமைச்சர் சூழ்ச்சி செய்தாலும், அரசன் அதற்கு உடன்பட்டாலும், இவர்களுக்கு மேலாக இருக்கிறவர் கடவுள். அவரே வரலாற்றின் நிகழ்வுகளை நகர்த்துகிறார்.
(இ) இறைவேண்டல் ஒரு கூட்டு அனுபவம். நாம் தனிப்பட்ட அளவில் இறைவேண்டல் செய்தாலும், நம்மோடு மற்றவர்கள் (நோன்பிருந்து) இறைவேண்டல் செய்யும்போது நம் ஆற்றல் கூடுகிறது.
மொத்தத்தில், இறைவேண்டல் நமக்கு எதிர்நோக்கையும், துணிச்சலையும், ஆற்றலையும் விடாமுயற்சியையும் தருகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படும்’ என்று சொல்கிறார் இயேசு.
இயேசுவின் இந்தப் போதனை அவருடை முந்தைய போதனைக்கு முரணானதாக இருப்பது போலத் தெரிகிறது. இறைவேண்டல் பற்றிய போதனையில், ‘நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் வானகத் தந்தை உங்கள் தேவையை அறிந்திருக்கிறார்’ என்று சொல்லும் இயேசு, இங்கே, ‘கேளுங்கள்’ என்றும் ‘கேட்பவரே பெறுகிறார்’ என்றும் சொல்வது நமக்குக் குழப்பமாக இருக்கிறது.
குழப்பம் வேண்டாம்!
நம் தேவைகள் அனைத்தையும் நம் தந்தையாகிய கடவுள் அறிந்தவராக இருந்தாலும், நம் தேவை எதை என்பதை நமக்கு உணர்த்தி, அதை நிறைவேற்றுவதற்கான தேடலில் நம்மை ஈடுபடச் செய்கிறது இறைவேண்டல்.
நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் எவை?
(அ) நம் வரையறை அனுபவங்களில் – அதாவது, இதற்கு மேல் என்னால் இயலாது என்னும் அனுபவங்களில் – நாம் இறைவனைத் தேட வேண்டும். எதுவரை நம்மால் முடிகிறது அதை நாம் செய்ய வேண்டும்.
(ஆ) இறைவேண்டல் வழியாக நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தாலும், கடவுள் செயலாற்றுவது நம் வழியாகத்தான். ஆக, தொடர் செயலில் நாம் ஈடுபட வேண்டும்.
(இ) ‘எனக்கு எது வேண்டும், எது வேண்டாம்’ என்ற அளவில் நமக்குத் தெளிவு வேண்டும். தெளிவு இல்லாதபோது தேடல் நகராது.
கேட்டல், தட்டல், தேடுதல் அனைத்தும் இணைந்தே செல்கின்றன.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: