இன்றைய இறைமொழி
ஞாயிறு, 30 மார்ச் ’25
தவக்காலம் நான்காம் ஞாயிறு
மகிழ்ச்சி ஞாயிறு
யோசுவா 5:9அ, 10-12. திருப்பாடல் 34. 2 கொரிந்தியர் 5:17-21. லூக்கா 15:1-3, 11-32
இல்லம் தரும் மகிழ்ச்சி!
தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றை ‘தொமேனிக்கா லெயத்தாரே’ (‘மகிழ்ச்சி அல்லது அக்களிப்பு ஞாயிறு’) என்று அழைக்கின்றோம். இன்றைய நாள் திருப்பலியின் வருகைப் பல்லவி மிக அழகாக இதை முன்வைக்கிறது: ‘எருசலேமின்மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள். அவளுக்காக புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள் … நீங்கள் நிறைவடைவீர்கள் … நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்’ (காண். எசா 66:10-11). எருசலேமை இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு நாம் உருவகப்படுத்தினோம் என்றால், அவரோடு அவருடைய பாடுகளுக்காக அழும் நாம், அவருடைய உயிர்ப்பில் அக்களிப்போம் என்பதே நிதர்சனமான உண்மை. ஆக, தவக்காலத்தின் இலக்கு துன்பம் அல்லது பாவம் அல்ல. மாறாக, மகிழ்ச்சி அல்லது வெற்றியே. இந்த ஞாயிறு அந்த மகிழ்ச்சியின், வெற்றியின், உயிர்ப்பின் முன்சுவையாக நமக்குத் தரப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரக்கமுள்ள தந்தை எடுத்துக்காட்டை வாசிக்கிறோம். இந்த எடுத்துக்காட்டை இயேசு, பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரின் முணுமுணுப்பிற்கு எதிர்சான்றாக வைக்கின்றார். இங்கே, கவனமையம் அல்லது கவனக்குவிப்பு இளைய மகனோ அல்லது மூத்த மகனோ அல்ல. மாறாக, தந்தையே. இக்கதையில் வரும் தந்தை தொடக்கமுதல் இறுதிவரை இனியவராக, கனிவுடையவராக, இரக்கம் உடையவராக இருக்கிறார். இயேசு தன் சமகாலத்தில் இரண்டு வகை மக்களோடு உறவாடுகிறார்: ஒன்று, வரிதண்டுபவர்கள், பாவிகள். இவர்கள் யூத சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். இரண்டு, யூதச் சட்டம் மற்றும் முறைமைகளுக்கு பிரமாணிக்கமாய் நடந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். இந்த இரண்டாம் குழுவினர், இயேசு முதல் குழுவினரோடு உறவாடுவதைக் கண்டு இடறல்பட்டனர். இந்த இரண்டு குழுக்களும் இரண்டு மகன்களையும் குறிக்க, உவமையில் வரும் தந்தை இயேசுவின் அல்லது கடவுளின் உருவகமாகிறார்.
இந்த எடுத்துக்காட்டில் மையமாக இருப்பது ‘இல்லம்’ அல்லது ‘வீடு.’ ‘அவர் (மூத்த மகன்) சினமுற்று வீட்டுக்குள் போக விருப்பம் இல்லாதிருந்தார்’ என்று வாசிக்கிறோம்.
இரக்கம் நிறைந்த தந்தைக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேருமே வீட்டை விட்டுத் தொலைவில்தான் இருந்தார்கள். இளைய மகன் தனக்குரிய பங்கை வாங்கிக்கொண்டு, வீட்டை விட்டுத் தொலைநாட்டுக்குப் பயணமாகிறார். காணாமல்போவதன் மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள விரும்பித் தூரமாகப் போகிறார். தன் வாழ்வின் சுதந்திரத்தைக் கண்டுகொண்டதாக நினைக்கிறார். ஆனால், அவருடைய தாறுமாறான வாழ்க்கை அவரை ஏழ்மையாக்குகிறது. அனைத்தையும் இழந்த அவர் தன்னையே ‘பன்றிகள் மேய்க்கும் பணியாளராக’ விற்கும் நிலைக்கு ஆளாகிறார். அங்கே அவர் உணர்ந்த பசியும் தந்தையின் இல்லத்தில் பணியாளரும் நிறைவாக உண்ணும் நிலையும் இல்லம் நோக்கித் திருப்புகிறது. ஆனாலும் மனதுக்குள் ஒரு முடிவு எடுக்கிறார்: ‘மகனாக அல்ல, மாறாக, பணியாளராக’ இல்லம் திரும்ப விரும்புகிறார். தன் தந்தையின் இல்லத்தில் குடியிருக்கத் தனக்குத் தகுதியில்லை என்று அவரே முடிவெடுக்கிறார்.
மூத்த மகன் வீட்டிலேயே இருக்கிறார். ஆனால், தகுதியில்லாத சகோதரன் – விலைமகளிரோடு சேர்ந்து சொத்துகளை எல்லாம் அழித்த இளைய மகன் – திரும்பி வந்த இல்லத்துக்குள் நுழைய மறுக்கிறார். மேலும், தான் தந்தைக்கு அடிமை போல வேலை செய்ததாகச் சொல்கிறார்.
இளைய மகன் அடிமையாக வீட்டுக்குள் நுழைய விரும்புகிறார். மூத்த மகனோ வீட்டுக்குள் அடிமையாகவே வாழ்கிறார். இருவருமே இல்லத்திலிருந்து தொலைவில் இருக்கிறார்கள்.
இரக்கம்நிறைந்த தந்தையே அவர்கள் இருவரையும் இல்லத்தினுள் அழைத்துச் செல்கிறார்.
இளைய மகனுக்காககே காத்திருக்கிறார் தந்தை. மூத்த மகனுக்காக வெளியே இறங்கிச் செல்கிறார்.
தன் தந்தையின் சொத்துகளை அழித்துவிட்ட குற்றவுணர்வு, தாறுமாறான வாழ்க்கை, பசியை மட்டுமே மையமாக வைத்து வந்த மனமாற்றம் ஆகிய காரணிகளால் அடிமைபோல உணர்கிறார் இளைய மகன்.
தந்தையுடையது அனைத்தும் தனக்குடையது என்றாலும் கணக்குப் பார்த்தே வாழ்கிறார் மூத்த மகன்.
தந்தையின் பரிவு இருவரையும் இல்லம் சேர்க்கிறது. தந்தை கணக்குப் பார்க்கவில்லை. சொத்துகள் இழப்பைப் பொருட்படுத்தவில்லை. மகன்கள் இல்லம் திரும்பினாலே போதும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கிறது.
‘இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும்!’ – இதுவே தந்தையின் அழைப்பாக இருக்கிறது. இறந்த காலத்தில் அல்ல, எதிர்காலத்தில் அல்ல, மாறாக, இன்றே இப்போதே மகிழ்ச்சி கொண்டாடப்பட வேண்டும் என்பது தந்தையின் விருப்பமாக இருக்கிறது.
இன்றைய முதல் வாசகம் (காண். யோசு 5:9,10-12) இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் தலைமையில் யோர்தான் ஆற்றைக் கடந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழைந்த பின் நடந்த முதல் நிகழ்வுகளைச் சொல்கிறது. இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன: முதலில், பாலைநிலத்தில் பிறந்த ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. இவர்கள் இந்தச் சடங்கால் ஆண்டவருக்கு அர்ப்பணமானவர்கள் ஆகின்றார்கள். இவர்களின் பெற்றோர் பாலைநிலத்தில் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராக முணுமுணுத்ததால் கடவுளால் கொல்லப்படுகின்றனர். இந்தச் சடங்கு முடிந்ததுதும், ஆண்டவர் யோசுவாவிடம், ‘இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்’ என்கிறார். அது என்ன பழிச்சொல்? இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டவுடன் அவர்களைப் பின்தொடர்ந்து வருகின்ற எகிப்தியர், ‘இஸ்ரயேல் மக்கள் மூடர்கள். ஏனெனில், தாங்கள் அறியாத ஒரு கடவுளைப் பின்பற்றிச் சென்று பாலைவனத்தில் நாடோடிகளாகத் திரிகிறார்கள். அவர்கள் கடவுளும் பொய். அவர்களுடைய கடவுளின் வாக்குறுதியும் பொய்’ எனப் பழித்துரைக்கின்றனர். ஆனால், இன்று, யோர்தானைக் கடந்து கானானில் மக்கள் குடியேறியவுடன் அவர்களின் பழிச்சொல் பொய்யாகிறது. கடவுள் தன் வாக்குறுதியை நிறைவேற்றி தன்னை உண்மையான கடவுள் என்று இஸ்ரயேல் மக்களுக்கும் எகிப்தியருக்கும் உணர்த்துகின்றார். இரண்டாவதாக, கில்காலில் இஸ்ரயேல் மக்கள் தங்கள் முதல் பாஸ்காவைக் கொண்டாடுகின்றனர். வாக்களிக்கப்பட்ட நாட்டில் கொண்டாடப்படும் முதல் பாஸ்காவும் இதுவே. இங்கே இவர்கள் நிலத்தின் விளைச்சலை உண்ணத் தொடங்குகின்றனர். உண்ட மறுநாளிலிருந்து மன்னா பொழிவது நின்றுவிடுகிறது. இது அவர்களுடைய வாழ்வில் ஒரு புதிய தொடக்கம். இதுவரை யாவே இறைவனோடு இருந்த தொப்புள் கொடி அறுந்து, இன்று இவர்கள் தாங்களாகவே தங்களின் சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்குகின்றனர். இவ்வாறாக, இறைவன் இவர்களைக் ‘குழந்தைகள்’ நிலையிலிருந்து ‘பெரியவர்கள்’ என்ற நிலைக்கு உயர்த்துகின்றார்.
யாக்கோபு எந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்றாரோ, அதே இடத்துக்கு இல்லத்து வந்து சேர்கிறார்கள். இஸ்ரயேல் மக்கள். இதுவே இனி அவர்களுடைய வீடு. இந்த வீட்டில் அவர்கள் மகிழ்ச்சியும் நிறைவும் காண்பார்கள்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:17-21) பவுலடியார் தான் பெற்றிருக்கின்ற ஒப்புரவுத் திருப்பணி பற்றி கொரிந்து நகர மக்களுக்கு எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. இவ்வாறாக, தன் திருத்தூதுப்பணியின் ஒரு முக்கிய அங்கமாக ஒப்புரவுப் பணியை முன்வைக்கின்றார். பாவம் இயல்பாகவே நம்மைக் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது. கடவுளுக்கும் நமக்கும் பாவத்தால் எழுப்பப்பட்ட சுவரை உடைத்து, இருவரையும் இணைக்கும் பாலமாக கிறிஸ்து விளங்குகின்றார். ஆக, ‘கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தது அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே’ என்று சொல்லும் பவுலடியார், இந்த ஒப்புரவு முழுக்க முழுக்க கடவுளின் முன்னெடுப்பாக இருக்கிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். ஏனெனில், ‘நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்கிறார்.’ அதாவது, கிறிஸ்து பாவநிலையை ஏற்றாரெனில், பாவத்தின் விளைவான இறப்பை ஏற்றார். ஆனால், அந்த இறப்பிலிருந்து அவர் உயிர்த்ததால் நம்மையும் அவரோடு இணைத்துப் புதுப்படைப்பாக்குகிறார்.
ஆக, இல்லம் திரும்புதல் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, கிறிஸ்து வழியாக இவ்வுலகைத் தம்மோடு ஒப்புரவாக்கி அதற்கு புத்துயிர் தருகின்றார். இரண்டு, இந்தப் பணி மற்றவர்களுக்கு அறிவிக்கப்படுமாறு திருத்தூதர்களிடம் இந்த ஒப்புரவுச் செய்தியை ஒப்படைக்கின்றார்.
இறைவனின் இல்லம் திரும்புதல் நமக்கு மகிழ்ச்சி தருகிறது.
இந்த இல்லத்தின் மகிழ்ச்சியை விட்டுவிட்டு நாம் பல நேரங்களில் சத்திரங்களிலும் வயல்களிலும் பன்றிகள் அடையும் இடங்களிலும் இன்பத்தைத் தேடி அலைகிறோம். நாம் எவ்வளவு தூரம் சென்றாலும் நமக்காகக் காத்திருக்கிற தந்தையாக இருக்கிறார் நம் கடவுள்.
ஒருமுறை தொலைந்துபோன மகன் இனி தொலைந்து போக மாட்டான்.
இயேசு வழியாக ஒப்புரவு அடைந்த மக்கள் மீண்டும் பாவம் நோக்கிச் செல்ல மாட்டார்கள்.
வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வந்து சேர்ந்த மக்கள் இனி அங்கே குடிகொள்வார்கள்.
இன்றைய பதிலுரைப்பாடல், ‘ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்’ (திபா 34:8). என்று நம்மை அழைக்கிறது. தாவீது அபிமெலக்கின்முன் பித்துப்பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத் துரத்திவிட, அவனிடமிருந்து தப்பி வெளியேறுகின்றார். இந்த நேரத்தில், தன் உயிர் காக்கப்பட்ட இந்த நேரத்தில், கடவுளின் கருணையைப் புகழந்து பாடுகின்றார் தாவீது (காண். 1 சாமு 21:13-15).
கடவுளின் இரக்கத்தை உணரத் தொடங்கிய நாள் முதல் இரக்கம் உள்ளவராக மாறுகிறார் தாவீது.
நம் இல்லம் திரும்பும் மகிழ்ச்சியை நாம் அடைவதற்கான ஒரே வழி தந்தையைப் போல இரக்கம் உள்ளவர்களாக மாறுவது!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: