இன்றைய இறைமொழி
வெள்ளி, 7 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 4-ஆம் வாரம் – வெள்ளி
எபிரேயர் 13:1-8. திருப்பாடல் 27. மாற்கு 6:14-29
இவர் யோவானே!
இயேசு தம் சீடர்களை இருவர் இருவராகப் பணிக்கு அனுப்புகிற நிகழ்வைத் தொடர்ந்து திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்படுதல் நிகழ்வைப் பதிவு செய்கிறார் மாற்கு. இப்படிப் பதிவு செய்வதன் வழியாக இந்நிகழ்வை மூன்று நிலைகளில் முதன்மைப்படுத்துகிறார்:
(அ) திருத்தூதர்களின் செய்தி நிராகரிக்கப்படும். இந்த உலகம் நற்செய்தியை ஏற்றுக்கொள்வதில்லை. நற்செய்தியை அறிவிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. காலம் காலமாக இறையாட்சி பற்றிய செய்தி இன்று வரை கேலிக்கும் சிரிப்புக்கும் உள்ளாகி வருகிறது. எதிர்க்கப்படுகிறது.
(ஆ) இயேசு கொலை செய்யப்படுவதன் முன்நிழல். திருமுழுக்கு யோவானுக்கு நேர்ந்ததே இயேசுவுக்கும் நேரும். மாசற்றோரின் துன்பம் என்பது இங்கே வலியுறுத்தப்படுகிற கருத்துரு.
(இ) திருத்தூதர்களும் திருமுழுக்கு யோவான் போல இயேசு போல எதிர்க்கப்பட்டு கொலை செய்யப்படுவார்கள்.
இந்நிகழ்வு நமக்குக் கற்பிப்பது என்ன?
நம் சூழல் பல நேரங்களில் நம் வாழ்வின்மேல் ஆட்சி செலுத்துகிறது என்பது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய எதார்த்தம். ஏரோது அரசன் 6-ஆம் மற்றும் 9-ஆம் கட்டளைகளுக்கு எதிராகக் குற்றம் (பாவம்) செய்ததால் அவரைக் கண்டிக்கிறார் திருமுழுக்கு யோவான். தான் மாட்டிக்கொள்வதற்கான சூழலை தானே உருவாக்குகிறார் யோவான். ‘எது தேவையோ அதுவே தர்மம்!’ என்பதை அறியாதவராக இருக்கிறார் யோவான்.
இந்த உலகில் உள்ள எல்லாருமே அவர்களைப் பொருத்தவரையில் அறிவாளிகள், அறநெறியைப் பின்பற்றுபவர்கள் (அவர்களைப் பொருத்தவரையில் அவர்கள் செய்வது சரி!), சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடியவர்கள். இந்த மூன்றையும் நாம் கேள்விக்கு உட்படுத்தும்போது நாம் அவர்களுடைய எதிரிகளாக மாறுகிறோம்.
திருமுழுக்கு யோவான் ஓர் இக்கட்டான சூழலை ஏரோதுவுக்கு உருவாக்குகிறார். ஏரோதியா அந்தச் சூழலைத் தனக்கு ஏற்றாற்போலப் பயன்படுத்திக்கொள்கிறார்.
நீதி என்பது நாம் நிற்கிற தளத்தைப் பொருத்தது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘சகோதர அன்பில் நிலைத்திருங்கள்!’ என்கிறார் ஆசிரியர். தொடர்ந்து, துணிவோடு இருக்குமாறு குழுமத்துக்கு அறிவுறுத்துகிறார்.
ஆண்டவரைத் தன் ஒளியாகக் கொண்ட ஒருவர் அன்போடும் துணிவோடும் செயலாற்றுகிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: