• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஈசாயின் தளிரே, வாரும்! இன்றைய இறைமொழி. வியாழன், 19 டிசம்பர் ’24.

Thursday, December 19, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Advent

இன்றைய இறைமொழி
வியாழன், 19 டிசம்பர் ’24
திருவருகைக்கால வார நாள்
நீதித்தலைவர்கள் 13:2-7, 24-25. லூக்கா 1:5-25

 

ஈசாயின் தளிரே, வாரும்!

 

கிறிஸ்து பிறப்பு நவநாளின் மூன்றாம் நாள் ‘ஓ அழைப்பு’, ‘ஈசாயின் தளிரே, வாரும்!’ என்பதாகும். ஈசாய் என்பவர் தாவீதின் தந்தை. ‘ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும். அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும்’ (எசா 11:1), ‘அந்நாள்களில் மக்களினங்களுக்கு அடையாளமாக விளங்கும் ஈசாயின் வேரைத் தேடிப் பிற இனத்தார் வருவார்கள். அவர் இளைப்பாறும் இடம் மாட்சி மிகுந்ததாக இருக்கும்’ (எசா 11:10) என முன்னுரைக்கிறார் எசாயா. இங்கே ‘ஈசாயின் வேர்’ என்பது யூதா நாட்டையும், தாவீதின் வழி வரும் அரசரையும் குறிக்கிறது. கிறிஸ்தவ வாசிப்பில், இத்தலைப்பு இயேசுவைக் குறிப்பதாகக் கொள்கிறோம்.

 

இன்றைய முதல் வாசகத்தில் நீதித்தலைவரான சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது. நற்செய்தி வாசகத்தில் கிறிஸ்துவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது. இவ்விரு நிகழ்வுகளுக்கும் சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள்ளன.

 

இரண்டிலுமே ஆண்டவரின் தூதர் வருகிறார். தூதர் சந்திக்க வரும்போது இரண்டு பேருமே (சிம்சோனின் அம்மா, சக்கரியா) தங்கள் அன்றாடப் பணிகளில் மும்முரமாக இருக்கின்றனர். ‘உனக்கொரு மகன் பிறப்பான்! அவன் நான் சொல்வது போல இருப்பான்!’ என்று இருவருக்குமே சொல்கின்ற வானதூதர் இரு குழந்தைகளின் நடை, உடை, பழக்கவழக்கம் பற்றிச் சொல்கின்றார். இரு குழந்தைகளுமே (சிம்சோன் மற்றும் யோவான்) கடவுளுக்கான நாசீர் (அர்ப்பணிக்கப்பட்டவர்) என வளர்கின்றனர்.

 

இரண்டு நிகழ்வுகளுக்கும் மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சிம்சோனின் அம்மா மௌனமாகக் கேட்டுக்கொள்கின்றார். சக்கரியாவோ எதிர்கேள்வி கேட்கின்றார். எதிர்கேள்வி கேட்டதன் விளைவு, கடவுள் அவரை ‘பேச்சற்றவராக’ ஆக்கிவிடுகின்றார். ஆனால், திருமுழுக்கு யோவான் ஒரு குரல் என்பதைக் காட்டுவதற்காகவே, அவருடைய தந்தை ‘குரலற்றவராக’ ஆக்கப்படுகிறார். ஏனெனில், ‘இக்குழந்தையின் பெயர் யோவான்’ என சக்கரியா எழுதியவுடன், அவருடைய நா கட்டவிழ்க்கப்பட்டு அவர் கடவுளைப் போற்றுகிறார்.

 

சக்கரியாவின் வாழ்வில் அந்த நாள் ஒரு பொன்நாள். ஏனெனில், ஏறக்குறைய 24 ஆயிரம் குருக்கள் இருந்த அக்காலத்தில் தன் வாழ்வில் ஒருமுறைதான் ஒரு குரு ஆலயத்தில் திருப்பணி செய்யும் வாய்ப்பு பெறுவார். ஆக, சக்கரியாவின் பெயருக்குச் சீட்டு விழுந்ததே ஒரு நேர்முகமான அடையாளம். ஒரு நல்லது நடந்தவுடன், அடுத்த நல்லது நடக்கிறது. அவருடைய மன்றாட்டு கேட்கப்படுகிறது. அவருக்கு ஒரு குழந்தை வாக்களிக்கப்படுகிறது. தொடர்ந்து இன்னொரு நல்லது நடக்கிறது. மக்களின் நடுவில் இருந்த அவமான வார்த்தைகள் களையப்பட்டு அனைவரும் அவரை வியந்து பார்க்கின்றனர். இதுவே கடவுள் செயல்பாடு. கடவுளின் நேரத்தில் அனைத்தும் நல்லதாகவே நடக்கிறது.

 

நிகழ்வின் இறுதியில், மனோவாகின் மனைவி சிம்சோனைப் பெற்றெடுக்கிறார். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்குகிறார். ஆவியால் அவன் நடத்தப்படுகிறான். சக்கரியாவின் மனைவி எலிசபெத்து கருவுற்று ஆண்டவரைப் புகழ்கிறார்.

 

மனோவாகு, சக்கரியா என்னும் இரு வேர்கள் தளிர்விடத் தொடங்குகின்றன.

 

மெசியா வாசிப்பில், சிம்சோனும் திருமுழுக்கு யோவானும் ‘நாசீர்’ (‘அர்ப்பணிக்கப்பட்டவர்’) என அழைக்கப்படுகிறார்கள். மத்தேயு நற்செய்தியாளர் இதையொட்டிய ஒரு பெயரை இயேசுவுக்கு வழங்குகிறார்: ‘அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ‘நசரேயன்’ என அழைக்கப்படுவார்’ (மத் 2:23). சிம்சோனும் திருமுழுக்கு யோவானும் இயேசுவுக்கு முன்னோடிகளாக நிற்கிறார்கள். இவர்கள் இருவருடைய தாய்மார்களும் அன்னை கன்னி மரியா வியத்தகு முறையில் குழந்தை பெறும் நிகழ்வுக்கு முன்னோடியாக நிற்கிறார்கள்.

 

இன்றைய நாள் நமக்குத் தரும் பாடம் என்ன?

 

நம் ஒவ்வொருவருடைய பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. சிம்சோனுடைய பிறப்பின் நோக்கம் அவருடைய தாய்க்கும், யோவனுடைய பிறப்பின் நோக்கம் அவருடைய தந்தைக்கும் அறிவிக்கப்படுகிறது. நம் வாழ்வின் நோக்கம் அறிதல் மிகப்பெரிய முயற்சி. நம் வாழ்வின் நோக்கம் அறிதலில் நாம் கருத்தில்கொள்வது ஒன்றே. அதாவது, நம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட நிலைக்காகப் பிறந்தவர்கள். அந்த தனித்தன்மையை நாம் கண்டறிந்து வாழும்போது நாம் யாருடனும் போட்டிபோடவோ, யாரையும்போல இருக்க முயற்சி செய்யவோ மாட்டோம். நம் தனித்தன்மையே நம் அடையாளமாகவும் பண்பாகவும் மதிப்பீடாகவும் வெற்றியாகவும் மாறும்.

 

ஈசாயின் தளிர்போல, நம் வாழ்வும் தொடர்ந்து தளிர்விடும்!

 

‘ஓ ஈசாயின் தளிரே (எசா 11:1),
மனுக்குலத்தின் அடையாளமாகத் திகழ்கிறீர் நீர்!
உம்முன் அரசர்கள் மௌனமாக நிற்பார்கள்.
உம்மை நோக்கி அனைத்து நாட்டினரும் வருவார்கள் (எசா 52:15).
வாரும்! எங்களை மீட்டருளும்! தாமதியாதேயும்! (அப 2:3)’

 

இதுவே இன்றைய இறைவேண்டல்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: