இன்றைய இறைமொழி
சனி, 7 டிசம்பர் ’24
திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி
எசாயா 30:19-21, 23-26. திருப்பாடல் 147. மத்தேயு 9:35-10:1, 6-8
உங்கள் போதகர்!
யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் என நாம் எங்கு சென்றாலும், ஏதோ ஒரு வகையில் – போஸ்டர், வீடியோ, ஆடியோ – என நமக்கு ஏதாவது ஒன்றை யாராவது ஒருவர் கற்றுக்கொடுக்கிறார். ‘விலாக்’ என்று உருவாக்கப்படும் வீடியோ வலைப்பூ, தொழில்சார் படிப்புகள், புத்தகச் சுருக்கங்கள், மேற்கோள்கள் என நிறைய பாடங்களை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். இன்றைய நவீன போதகர்கள் இவை. இவற்றைக் கேட்கும்போது நம்முள் மூன்று உணர்வுகள் எழுகின்றன: ஒன்று, ‘இது ஏற்கெனவே கேட்டதுதான்!’ இரண்டு, ‘இது கேட்பதற்குதான் சரி, நடைமுறைக்கு ஒத்துவராது!’ மூன்று, ‘இதை நாம் செயல்படுத்தினால் என்ன?’ மனித போதகர்களும் போதனையும் நமக்குப் பலவற்றைக் கற்றுத்தந்தாலும் இவர்களும் இவையும் வரையறைக்கு உட்பட்டவை.
மனித வரையறைக்கு உட்படாத போதகர் ஒருவரை இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம் கண்முன் நிறுத்துகிறது.
இன்றைய முதல் வாசகப் பகுதியில் இறைவாக்கினர் எசாயா, பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடக்கும் யூதா மக்களைப் பார்த்து, ‘உங்கள் போதகர்’ என்று மெசியாவை அறிமுகம் செய்கிறார். இதுவரையும், ‘உங்கள் அரசர்,’ ‘உங்கள் இறைவாக்கினர்,’ ‘உங்கள் குரு’ என்று கேட்டே பழகிப்போன மக்களுக்கு, இத்தலைப்பு – ‘உங்கள் போதகர்’ – புதியதாக இருக்கிறது. இந்தப் போதகர் துன்பத்தையும் ஒடுக்குதலையும் கொடுத்தாலும், அவர் இப்போது அவர்களுக்குத் தோன்றுவார். இந்தப் போதகரின் குரல் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் – ‘இதுதான் வழி, இதில் நடந்துசெல்லுங்கள்!’ என்று – ஒலிக்கும்.
இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் முதலில் மோசே வழியாகவும், பின்னர் திருச்சட்டம் வழியாகவும் போதித்தார். இப்போது அவருடைய போதனை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒலிக்கும் அளவுக்கு கடவுள் அவர்களோடு நெருக்கமாகிறார்.
நற்செய்தி வாசகத்தில், தம் சீடர்களைப் பணிக்கு அனுப்புகிற இயேசு, ‘பறைசாற்றுங்கள்!’ என்று கட்டளையிட்டு அவர்களை அனுப்புகிறார். இயேசு காட்டிய பரிவையும், விண்ணரசு நெருங்கி வந்த செய்தியையும் சீடர்கள் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். இயேசுவிடம் கற்றுக்கொண்ட சீடர்கள் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆண்டவருடைய குரல் நம் உள்ளத்தில் ஒலிக்கிறது என்பது நமக்கு மிகவும் ஆறுதல் தருகிறது. இந்தக் குரல் வழியாக அவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
வார்த்தையிலிருந்து வாழ்வுக்கு:
(அ) ஆண்டவரின் குரல் நம் உள்ளத்தில் ஒலிக்கிறது. ஆனால், ஆண்டவரின் குரலை நாம் கேட்காதவண்ணம் நிறைய இரைச்சல்கள் நமக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்றன. இரைச்சல்களைக் குறைக்காமல் நாம் ஆண்டவரின் குரலைக் கேட்க முடியாது.
(ஆ) இயேசு தம் சீடர்களுக்கு சொற்களால் கற்றுக்கொடுப்பதற்கு முன்பாக, அவருடைய பரிவுள்ளத்தால் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். கற்றுக்கொடுத்தலின் முதல்படி பரிவுகொண்ட உள்ளம்.
(இ) ‘இதுதான் வழி!’ என்று நம் உள்ளத்தில் கடவுளின் குரல் கேட்கிறது. வழி என்பது நம் வாழ்வுக்கு மிகவும் அவசியம். ஏனெனில், வழி தவறிச் செல்லும்போது நம் ஆற்றல் விரயமாவதுடன் கவலையும் பதற்றமும் பிறக்கின்றன. நம் வாழ்வின் பாதை எது என்பதை இன்றைய நாளில் அறிய முயற்சி செய்வோம். தங்கள் வாழ்வின் வழிகளைக் காணத் துடிப்போருக்கு வழி காட்டுவோம்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ கடவுளின் குரல் கேட்டு தங்கள் பாதையை நெறிப்படுத்துகிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 267).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: