இன்றைய இறைமொழி
சனி, 15 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 5-ஆம் வாரம் – சனி
தொடக்கநூல் 3:9-24. திருப்பாடல் 90. மாற்கு 8:1-10
உடையும் உணவும்
எதிர்மறை நிகழ்வுகள் கடவுளின் உடனிருப்பால் நேர்முக வாழ்வியல் அனுபவங்களாக மாறுகின்றன.
முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் முதற்பெற்றோரோடு உரையாடுகிறார். ‘இதோ என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும்’ என்று பெண்ணைப் பார்த்து முன்பு கூறிய ஆண், இப்போது, ‘நீர் என்னோடு இருக்குமாறு தந்த அந்தப் பெண்’ என்று பெண்ணிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் தன்னை அந்நியமாக்கிக்கொள்கிறார். பாவம் நம்மை அந்நியமாக்குகிறது.
பாம்பு, பெண், ஆண் ஆகியோருக்கு சாபம் தருகிறார் கடவுள். ‘சாபம்’ என்பதை ‘காரணக் கதை’ என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, பாம்பு ஏன் தரையில் ஊர்கிறது, பெண் ஏன் ஆண்மேல் ஈர்ப்பு கொள்கிறார், ஆண் ஏன் கடினப்பட்டு உழைக்க வேண்டும் என்பதற்கான காரணக் கதையாக ‘சாப நிகழ்வை’ நாம் புரிந்துகொள்ளலாம். ஆணின் இலக்கு உழைப்பு எனவும், பெண்ணின் இலக்கு அன்பு எனவும் இருக்க வேண்டும் என்பது விவிலியப் புரிதல். இந்த இலக்குகளை மாற்ற நினைக்கிறது இன்றைய உலகம்.
ஆண்டவராகிய கடவுள் கோபம் கொண்டு மனிதர்களைச் சபித்தாலும், இறுதியில் அவர்களை உடுத்துகிறார். ஆண்டவராகிய கடவுளின் பரிவு உடையாக வெளிப்படுத்தப்படுகிறது.
நற்செய்தி வாசகத்தில், மூன்று நாள்களாகத் தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தின்மேல் பரிவுகொள்கிற இயேசு அப்பங்கள் பலுகச் செய்து அவர்களுடைய பசி ஆற்றுகிறார்.
இன்றைய நாள் தரும் பாடங்கள் எவை?
(அ) பரிவு
‘இவருக்கு இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்’ என நினைப்பது வியாபாரம். ஆனால், ‘இவருக்கு இதைச் செய்யாவிட்டால் அவருக்கு என்ன நடக்கும்’ எனக் கேட்பது பரிவு. மற்றவர்களுடைய கண்ணோட்டத்தை நம் கண்ணோட்டமாக மாற்றும்போது பரிவு பிறக்கிறது.
(ஆ) எதிர்த்தகைவு
‘ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றிவிட்டார் கடவுள். எல்லாம் முடிந்தது!’ எனச் சோர்ந்து போகவில்லை ஆணும் பெண்ணும். தோட்டத்துக்கு வெளியேதான் பெண், ‘தாய்’ என்னும் புதிய பெயர் பெறுகிறார். எதிர்த்தகைவால் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள் முதற்பெற்றோர். ஆக, நம் வாழ்வின் முன்னேற்றுத்துக்கான முதல் தடை நாம்தாம்! இத்தடையை நாம் முதலில் வெல்ல வேண்டும்.
(இ) மனித பங்கேற்பு
வானத்திலிருந்து அப்பங்கள் விழச் செய்யவில்லை இயேசு. மாறாக, தம் சீடர்களும் மக்களும் பெற்றிருந்ததைப் பலுகச் செய்கிறார். கடவுளின் பரிவும் நம் பங்கேற்பும் இணையும்போது வல்ல செயல் நிகழ்ந்தேறுகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: