இன்றைய இறைமொழி
புதன், 16 அக்டோபர் 2024
பொதுக்காலம் 28-ஆம் வாரம், புதன்
கலாத்தியர் 5:18-25. லூக்கா 11:42-46
உண்மையான சமயநெறி
நற்செய்தி வாசகத்தில், இயேசு பரிசேயர் இல்லத்தில் உணவருந்தும் நிகழ்வு தொடர்கிறது. ‘தூய்மை’ என்னும் கருத்துருவிலிருந்து ‘சமயநெறி’ என்னும் கருத்துரு நோக்கி நகர்கிறார் இயேசு. உணவருந்தும் நேரம் வசைபாடும் நேரமாகிவிட்டதுபோலத் தெரிகிறது.
‘ஐயோ கேடு!’ என மூன்று முறை உரைக்கிறார் இயேசு. முதல் இரண்டு முறை பரிசேயர்களை நோக்கியும், மூன்றாவது முறை மறைநூல் அறிஞர்களை நோக்கியும்.
சமயநெறியின் மூன்று அடிப்படையான தூண்கள் சாய்ந்து நிற்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு:
(அ) பத்தில் ஒரு பங்கு கொடுத்தல்.
(ஆ) தொழுகைக்கூடத்தில் வழிபாடு செய்தல்.
(இ) சட்டங்கள் பின்பற்றுதல்.
பத்தில் ஒரு பங்கு கொடுத்தல் என்பது சமயக் கடமையாக இருந்தது. சிறிய பொருள்களில்கூட அவர்கள் கணக்குப் பார்த்து பத்தில் ஒரு பங்கு கொடுத்தார்கள். இந்தப் பந்தில் ஒரு பங்கு ஆன்மிகக் கடமையாக இல்லாமல், சமூகப் பொறுப்புணர்வாகவும் இருந்தது. காலப்போக்கில், நீதியும் அன்பும் புறந்தள்ளப்பட்டு பத்தில் ஒரு பகுதி மட்டும் நின்றுவிட்டது.
தொழுகைக்கூடம் அருள்வாக்கு வாசிக்கும் இடமாகவும் கேட்கும் இடமாகவும் இருந்தது. காலப்போக்கில் தனிநபர்கள் தங்களையே முன்நிறுத்தும் இடமாக அது மாறியது. கடவுளுக்கான இடமும் மறக்கப்பட்டது.
பத்துக் கட்டளைகள் கடவுளால் வழங்கப்பட்டன. ஆனால், அவற்றுக்கு விளக்கமளிக்கிறோம் என்னும் பெயரில் மனித மரபுகளும் சட்டங்களாக மாறியிருந்தன.
இயேசுவைப் பொருத்தவரையில் உண்மையான சமயநெறி என்பது நீதியை நிலைநாட்டுவதிலும், அன்பு செய்வதிலும், கடவுளை முதன்மைப்படுத்துவதிலும், கருணை காட்டுவதிலும் இருந்தது.
இன்றைய நம் வாழ்வோடு எப்படிப் பொருத்துவது?
(அ) எளிதானதைச் செய்வதா சரியானதைச் செய்வதா?
பத்தில் ஒரு பங்கு கொடுத்தல், நவநாள் திருப்பலி காணுதல், செபமாலை செபித்தல் போன்றவை எளிதானவை. ஆனால், மன்னித்தல், விட்டுக்கொடுத்தல், தாராள உள்ளம் கொண்டிருத்தல் ஆகியவை சரியானவை. சரியானவற்றைச் செய்ய நமக்குக் கடினமாக இருப்பதால், நாம் எளிதானவற்றையே தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம்.
(ஆ) மற்றவர்களுடைய கவனம் நாடுதல்
இன்றைய சமூக ஊடகங்கள் மற்றவர்களுடைய கவனத்தை நாம் ஈர்க்க வேண்டும் எனக் கற்பிக்கின்றன. நான் யார் என்பதை எனக்கு வெளியே இருக்கும் ஒரு நபர் சொல்ல வேண்டும் என நான் விரும்பும் அளவுக்கு என் தேடல் வெளிநோக்கியதாக இருக்கிறது. வெளியே கவனத்தைத் தேடும்போது நம் தான்மையும் அடையாளமும் மாண்பும் குறைகிறது. ஏனெனில், நம் தான்மையும் அடையாளமும் மாண்பும் நமக்கு உள்ளேயிருந்து ஊற்றெடுக்கின்றன.
(இ) சட்டம் என்னும் சுமை
ஆண்டவராகிய கடவுள் நமக்குக் கொடுத்த பத்துக் கட்டளைகளை இயேசு சுருக்கி இரண்டு கட்டளைகளாக வழங்கியுள்ளார். அன்பை அடிப்படையாகக் கொள்ளாத எந்தச் சட்டமும் சுமையாக மாறுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், ஊனியல்பு மற்றும் ஆவிக்குரிய இயல்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மொழிகிற இயேசு, ஆவியின் கனிகளைக் கொண்டு வாழ அழைக்கிறார். ஆவியின் கொடைகள் தங்குமிடத்தில் சட்டம் தேவையில்லை.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ ஆவியின் கனிகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அணிசெய்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 226)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: