இன்றைய இறைமொழி
புதன், 2 ஏப்ரல் ’25
தவக்காலம் நான்காம் வாரம் – புதன்
எசாயா 49:8-15. யோவான் 5:17-30
உன்னை மறப்பதில்லை
எசாயா நூலில் 42 முதல் 53 வரை உள்ள பகுதியில் நான்கு ‘ஊழியன்’ அல்லது ‘பணியாளன்’ பாடல்கள் உள்ளன. கடவுளின் பணியை இந்த உலகத்தில் செய்பவரே பணியாளர்.
முதல் பாடல் (42:1-4), ஊழியன், அனைத்து நாடுகளுக்கும் நீதியைக் கொணர்வதாக முன்மொழிகிறார்.
இரண்டாவது பாடலில் (49:1-6) அவருடைய பணியின் தன்மை வரையறுக்கப்படுகிறது.
மூன்றாவது பாடலில் (50:4-9), ‘ஊழியன்’ என்ற வார்த்தை இல்லை. தான் மக்களின் பார்வையில் தோல்வியாக வீழ்ந்தாலும் ஆண்டவர் தனக்கு உதவி செய்வதாக (காண். எசா 50:7) உணர்கிறார் ஊழியன்.
நான்காவது பாடல் (52:13-53:12), தன் மௌனத்தால் அநீதிக்கான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்.
இன்றைய முதல் வாசகம் இரண்டாவது பாடலின் தொடர்ச்சியாக உள்ளது.
யார் இந்த துன்புறும் ஊழியன்? என்ற கேள்வி இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. இறைவாக்கினர் எசாயா என்றும், இஸ்ரயேல் மக்கள் என்றும், மோசே என்றும், தாவீது என்றும், வரவிருக்கின்ற மெசியா என்றும் விடைகள் தரப்படுகின்றன. ‘துன்புறும் ஊழியன் அல்லது பணியாளன்’ என்னும் சொல்லாட்சி ‘இஸ்ரயேல் மக்களைக்’ குறிக்கிறது என்பது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
இன்றைய முதல் வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது:
(அ) வழிநடத்தும் இரக்கம்
பாபிலோனிய அடிமைத்தனத்தில் சிக்குண்டு கிடக்கும் இஸ்ரயேல் மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவார்கள் என்று இறைவாக்குரைக்கின்ற எசாயா, ஆண்டவர்தாமே தகுந்த வேளையில் அவர்களை வழிநடத்துவதாக முன்மொழிகின்றார்.
(ஆ) மலைகளிடையே வழி
அவர்கள் திரும்பி வருகின்ற பாதை மலைப்பாங்கான பாதையாக இருந்தாலும், வெயிலும் வெப்பக் காற்றும் அவர்களை வாட்டி வதைத்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்கின்றார்.
(இ) மறவாத கடவுள்
‘தாய் தன் குழந்தையை மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்’ என்கிறார் ஆண்டவராகிய கடவுள். கடவுள் மனிதர்களை நினைவுகூர்வதால்தான் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது என்பது அன்றைய நம்பிக்கை. பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவர்கள் கடவுள் தங்களை மறந்துவிட்டதாக நினைத்தனர். இந்தப் பின்புலத்தில் கடவுள் தான் அவர்களை மறப்பதில்லை என்ற வாக்குறுதி தருகின்றார்.
வாழ்வின் வெறுமை, தனிமை, மற்றும் இயலாமையில் இறைவன் தன் உடனிருப்பை அவர்களுக்குக் காட்டுகின்றார்.
இறைவன் நம்மை நினைவுகூர்தல் நாம் பெற்றிருக்கும் பெரும் பேறு.
முதல் வாசகத்தில் (எசா 49:8-15) ஆண்டவராகிய கடவுள் தன்னை விடுதலை தருகின்றவராக முன்வைக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் அடிமைத்தனத்தின்போது கடவுள் தங்களை மறந்துவிட்டதாக எண்ணினர். ஆனால், ‘பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்’ என்று அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறுகின்றார்.
‘என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்’ என்னும் இயேசுவின் சொற்களிலிருந்து அவருடைய உள்ளத்தின் உறுதியை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
இன்று நாம் இறைவிருப்பத்தைத் தெளிந்து தெரிந்து அதன்படி நடக்கிறோமா?
இறைவிருப்பத்தின்படி நடக்கிறோம் என்றால் நாம் கடவுளுக்கு உகந்தவற்றைச் செய்கிறோமா?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: