இன்றைய இறைமொழி
ஞாயிறு, 1 டிசம்பர் ’24
திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
கம்யூனியோ ஞாயிறு (இந்தியா)
எரேமியா 33:14-16. 1 தெசலோனிக்கர் 3:12-4:2. லூக்கா 21:25-28, 34-36
உம்மை நோக்கி என் உள்ளம்
இன்று திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு. புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாள். இன்றைய நாளை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, ‘கம்யூனியோ ஞாயிறு’ எனக் கொண்டாடுகிறது. ‘இறைவேண்டல், ஒன்றிப்பு, பணி’ என்னும் இலக்கு வாக்கியத்தோடு இயங்கும் ‘கம்யூனியோ’ இயக்கம் திருஅவையின் பணிகளுக்குத் துணை நிற்கிறது. ‘என் கையும் உன் கையும் சேர்ந்தால் நமக்கு வலிமை’ என ஒருவர் மற்றவர் நோக்கிக் கரம் நீட்ட நம்மை அழைக்கிறது இன்றைய நாள் கொண்டாட்டம்.
‘ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்’ (காண். திபா 25, பதிலுரைப்பாடல்) என்று கடவுளை நோக்கிப் பார்க்கிறார் தாவீது. கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் கொண்டாட்டத்துக்கான தயாரிப்புக் காலமாக அமைகிற திருவருகைக்காலத்தில் நம் உள்ளம் ஆண்டவரை நோக்கி உயர்வதாக!
இன்று நாம் ஏற்றும் முதல் மெழுகுதிரி ‘எதிர்நோக்கு’ என்னும் மதிப்பீட்டைக் குறிக்கிறது. ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என நாம் விரைவில் தொடங்கவிருக்கும் யூபிலி கி.பி. 2025-ஆம் ஆண்டுக்கான முன்னோட்டமாக இந்நாள் அமைவதாக.
திருவருகைக்காலத்தில் ஆண்டவரை நோக்கி நம் உள்ளம் மூன்று நிலைகளில் உயர்ந்து நிற்கின்றது: (அ) அவரது முதல் வருகையின் நினைவுகூர்தலை நோக்கி நெஞ்சம் நிறை நன்றியோடும், மகிழ்ச்சியோடும், (ஆ) அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்து கண்கள் நிறை விழிப்போடும், கவனத்தோடும், (இ) அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும், நபர்களிலும் வரும் அவரின் உடனிருப்பு நோக்கி பரிவோடும், பகிர்வோடும்.
இறைவாக்கு நூல்களில் எரேமியா மட்டுமே அழிவு மற்றும் ஆறுதலின் செய்திகளை இணைத்துத் தருகின்றார். ‘தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்’ என்று ஆண்டவராகிய கடவுள் எரேமியா வழியாக ஆறுதல் தருகின்றார் (காண். எரே 33:14-16, முதல் வாசகம்). நாட்டில் அவர் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டி, யூதாவுக்கு விடுதலை தரும் நாளில், ‘யாவே சித்கேனூ’ (‘ஆண்டவரே நமது நீதி’) என்று எருசலேம் புதிய பெயரைப் பெறும். ‘தளிர்’ என்பது மெசியாவுக்கான உருவகம் (காண். செக் 3:8). யூதாவை ‘செதேக்கியா’ (‘ஆண்டவர் நீதியானவர்,’ ‘ஆண்டவரே நீதி’) மன்னன் ஆண்டபோது இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஆண்டவரின் முதல் நீதி (செதேக்கியா அரசர்) எருசலேமுக்கு தண்டனையைக் கொணர்ந்தது. இரண்டாம் நீதி (சித்கேனூ) இரக்கத்தைக் கொண்டு வருகிறது. தங்கள் அரசரை நோக்கி உயர்ந்த இஸ்ரயேல் மக்களின் உள்ளம் தண்டனை பெற்றது. ஆண்டவரை நோக்கி உயர்கின்ற உள்ளம் இரக்கம் பெறுகின்றது. ‘நம் கிறிஸ்தவப் புரிதலின்படி, ‘தாவீதின் நீதியின் தளிர்’ இயேசுவைக் குறிக்கிறது. அவரில் கடவுளின் நீதி இரக்கமாகக் கனிந்தது. சக்கேயு, பாவியான பெண், நோயுற்றோர், பேய்பிடித்தோர், பசியால் வாடிய மக்கள் போன்றோரை இயேசு எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் நீதி பரிவாகக் கனிகிறது’ என்பது திருஅவைத் தந்தையர்களின் விளக்கம்.
புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 3:12-4:2). தெசலோனிக்கா நகரில் பவுல் மூன்றே முறைதான் (மூன்று ஓய்வுநாள்கள்) நற்செய்தி அறிவிக்கிறார் (காண். திப 17:1). அந்த மூன்று நாள்களிலேயே நிறையப்பேரைக் கிறிஸ்துவை நோக்கித் திருப்புகின்றார். அவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாவண்ணம் அவர்களை மீண்டும் சந்திக்கவும், அவர்களுக்கு கடிதங்கள் (இரண்டு) எழுதவும் செய்கின்றார். இக்கடிதங்களில் மேலோங்கி நிற்கும் கருத்துரு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. பவுலும், அன்றைய திருச்சபையாரும் கிறிஸ்துவின் வருகை மிக அருகில் இருப்பதாகவும், அது தங்கள் காலத்திலேயே நடந்தேறும் என்று நம்பினர். இந்தப் பின்புலத்தில்தான், அவரின் வருகைக்கான தயாரிப்பை அறிவுரையாகத் தருகின்றார் பவுல்: ‘… நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர்கள் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!’ உள்ளங்களை உறுதிப்படுத்தும் ஆண்டவர், ‘அவர்கள் ஒருவர் மற்றவருக்காகக் கொண்டுள்ள அன்பை வளர்த்துப் பெருகச் செய்வாராக!’ என்றும் பவுல் வாழ்த்துகின்றார்.
நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 21:25-28, 34-36), மானிட மகனின் வருகையின்போது கதிரவனிலும், நிலவிலும், விண்மீன்களிலும், வான்வெளிக் கோள்களிலும் நிகழும் மாற்றங்களை திருவெளிப்பாட்டு நடையில் பட்டியலிடும் இயேசு, ‘உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது’ என்ற அவசரமான ஆறுதலைத் தந்து, ‘உங்கள் உள்ளங்கள் குடிவெடி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினால் மந்தம் அடையாதவாறு காத்துக்கொள்ளவும்,’ ‘அந்நாள் திடீரென ஒரு கண்ணியைப் போல் சிக்க வைக்காதவாறு எச்சரிக்கையாக இருக்கவும்,’ ‘மானிட மகன்முன் நிற்க வல்லவராவதற்கு எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாடவும்’ அறிவுறுத்துகின்றார். ‘இப்பொழுதே இன்பம்’ என்று ‘குடிவெறி’, ‘இனி ஒன்றும் இல்லை’ என்று ‘களியாட்டம்,’ ‘நேற்று இப்படி ஆகிவிட்டதே’ என்று ‘கவலை’ நம்மை மந்த நிலைக்கும் தேக்கநிலைக்கும் இட்டுச் செல்கின்றன. ‘கண்ணி’ என்பது விவிலியத்தில் எதிரி அல்லது பகைவரின் சூழ்ச்சியின் உருவகம். ‘இறைவேண்டல்’ என்பது லூக்கா நற்செய்தியில் இறையுறவுக்கான முக்கியமான கூறு. ஒருவர் கொண்டிருக்கிற விழிப்புநிலையில்தான் அது சாத்தியமாகிறது. இறைவேண்டலில் நம் உள்ளம் ஆண்டவரை நோக்கி எழுகின்றது.
ஆக, ஆண்டவர் தருகின்ற நீதியை நோக்கி எருசலேமும், அன்பை நோக்கி தெசலோனிக்கத் திருஅவையும், மீட்பை நோக்கி நாமும் நம் உள்ளங்களும் உயர வேண்டும்.
திருவருகைக்காலம் முதல் வாரத்தில், ‘உம்மை நோக்கி என் உள்ளம்’ என்னும் கருத்துரு நமக்கு எதை உணர்த்துகிறது? ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றியும், உலக முடிவு பற்றியும் இன்று எண்ணற்ற விவாதங்களும், பரப்புரைகளும், அச்சுறுத்தல்களும் நம்மைச் சுற்றி நடக்கின்றன. தொடங்கியது அனைத்தும் நிறைவுறும் என்பது எதார்த்தம். நம் இயக்கத்தின் இலக்கான இயேசுவில் அனைத்தும் நிறைவுபெறும் என்பது நம் எதிர்நோக்கு. வருகின்ற ஒன்றுக்காகக் காத்திருப்பது என்பது, இருக்கின்ற ஒன்றில் மூழ்கிவிடாமல் இருக்க எச்சரிக்கிறது. மேலும், ‘மானிட மகன் முன் வல்லவராக நிற்பதற்கு’ தகுதிப்படுத்தும் செயல்களை மட்டும் செய்யுமாறு நம் இலக்குகளைக் கூர்மைப்படுத்துதல் அவசியம்.
‘உம்மை நோக்கி என் உள்ளம்’ என்று நாம் எதிர்நோக்கத் தடையாக இருப்பவை எவை?
(அ) ஆன்மிக மந்தநிலை. ‘குளிர்ச்சி அல்லது சூடு நலமாக இருந்திருக்கும்’ எனச் சொல்கின்ற ஆண்டவர், ‘வெதுவெதுப்பாய் இருப்பதை’ கடிந்துகொள்கின்றார் (காண். திவெ 3:16). வழிபாடுகள், வெளிப்புறக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தாண்டிய ஆன்மிகத்தை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை. கடவுளுக்கும் நமக்கும், நமக்கும் நமக்கும், நமக்கும் பிறருக்கமான உறவுநிலைகளில் நாம் வெட்கம், பயம், குற்றவுணர்வு ஆகியவற்றை விட்டு விலகி நின்றால் அதுவே சிறந்த ஆன்மிகம். கடவுளில் வேரூன்றிய உறவுநிலை ஒருவர் மற்றவர் நோக்கி நம்மை நகர்த்துவதாக!
(ஆ) கவனச் சிதறல்கள். இணையதளங்களும் சமூக ஊடகங்களும் நம் இன்றைய குடிவெறியாகவும், களியாட்டமாகவும், கவலையாகவும் – ஏனெனில், எவ்வளவு நுகர்ந்தாலும் இன்னும் அதிகம் நுகரவே விரும்புகிறோம், மெய்நிகர் உணர்வே உண்மை என நினைக்கிறோம், பிறர் பார்க்கவும் விரும்பவும் இல்லையே என்று கவலை கொள்கிறோம் – மாறிவிட்டன. இவற்றிலிருந்து நம் கண்கள் உயர்ந்தால்தான் நம் உள்ளம் இறைவனை நோக்கி உயரும்.
(இ) அநீதியால் வரும் சோர்வு. நம் சமூக, அரசியல், பொருளாதர, சமயம், மற்றும் பணித்தளச் சூழல்களில் நாம் எதிர்கொள்ளும் அநீதி நமக்கு மனச்சோர்வையும் விரக்தியையும் தருவதால், நம்மால் நிமிர்ந்துகூடப் பார்க்க இயலாத அளவுக்குச் சோர்ந்து போகின்றோம். ‘ஆண்டவரே நமது நீதி!’ என்பது வெறும் எதிர்நோக்காகவே இருந்துவிடுமோ என அச்சப்படுகின்றோம். ஆண்டவர் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நம் சோர்வை அகற்றும்.
இறுதியாக, புதிய திருவழிபாட்டு ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் நாம் இன்று ஏற்றும் முதல் திரியான ‘எதிர்நோக்கு’ அணையாமல் ஒளிவீசுவதாக! ‘உம்மை நோக்கி என் உள்ளம்’ என்னும் சரணாகதியும் காத்திருப்பும்தான் ‘எதிர்நோக்கு.’
இன்று ஆண்டின் இறுதி மாதத்தின் முதல் நாள். திருவருகைக்காலத்தின் 24 நாள்களும் நம் உள்ளத்தை ஏதோ ஒரு வகையில் – இறைவேண்டல், தன்மறுப்பு, தியாகம், பிறரன்புச் செயல் வழியாக – கடவுளை நோக்கி உயர்த்துவோம்! அவரே நம் எதிர்நோக்கு!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: