• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

உம் சொற்படியே! இன்றைய இறைமொழி. செவ்வாய், 25 மார்ச் ’25.

Tuesday, March 25, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Lenten Season Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
செவ்வாய், 25 மார்ச் ’25
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா
எசாயா 7:10-14, 8:10ஆ. எபிரேயர் 10:4-10. லூக்கா 1:26-38

 

உம் சொற்படியே!

 

அன்னை கன்னி மரியாவுக்கு கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட பெருவிழா பழைய வழிபாட்டு நாள்காட்டிகளில், ‘மனுவுருவாதல் விழா,’ ‘மீட்பராம் கிறிஸ்து கருவுறத் தொடங்கிய விழா,’ ‘ஆண்டவரின் அறிவிப்பு விழா’ என்று அழைக்கப்படுகிறது. சில கீழைத் திருஅவைகளில் இத்திருவிழா 26 டிசம்பர் அன்று கொண்டாடப்படுகிறது. எபேசு நகரப் பொதுச்சங்கத்துக்குப் பின்தான் (ஏ.கு. 431) இந்த விழாக் கொண்டாட்டம் தொடங்கியிருக்கும். முதன்முதலாக திருத்தந்தை ஜெலாசியுஸ் (496) இத்திருவிழா பற்றி எழுதுகிறார்.

 

கிறிஸ்தவத்தின் தொடக்கத்தில் இயேசு இறந்த நாளைப் பற்றிய அறிதலுக்கான தேடல் இருந்தது. 25 மார்ச் ஆண்டவரின் இறந்த நாள் என்று வரையறுக்கப்பட்டது. அதே நாளில்தான் மனுவுருவாதலும் நடந்திருக்க வேண்டும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மறைசாட்சியர் வழிபாட்டு நூல்கள் (கி.பி. 568), 25 மார்ச் அன்றுதான் ஆதாம் படைக்கப்பட்டார், இயேசு சிலுவையில் அறையப்பட்டார், இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்தார்கள், ஈசாக்கு பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டார் என்று எழுதுகின்றன. தவக்காலத்தில் இந்த விழா கொண்டாடப்பட வேண்டாம் என்று பிந்தைய நாளில் முடிவெடுக்கப்பட்டு திருவருகைக்காலத்தின் கடைசி ஞாயிறு கொண்டாடப்பட வேண்டும் என்கிறது அம்புரோஸிய ரீதி திருஅவை. அர்மேனியத் திருஅவை இந்த விழா திருக்காட்சிப் பெருவிழாவுக்கு முந்தைய நாளில் கொண்டாடுகிறது. கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னதாக இப்பெருவிழா கொண்டாடப்படுகிறது என்பது இன்று நாம் அனைவரும் ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

 

படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ‘ஒளி உண்டாகுக!’ என்று சொல்கிறார். ஒளி உண்டாகிறது. கடவுளுடைய சொல்லும் செயலும் இணைந்தே செல்கிறது.

 

அதுபோலவே, ‘நீர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்!’ என்று கடவுளின் தூதர் சொல்கிற சொற்கள் உடனடியாக கருவுறுதல் நிகழ்வாக மாறுகிறது. ஆகையால்தான், ‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!’ என மொழிகிறார் அன்னை கன்னி மரியா. சொற்களும் நிகழ்வும் இணைந்தே செல்கின்றன.

 

இப்பெருவிழா நமக்குச் சொல்வது என்ன?

 

(அ) கடவுளின் நெருக்கம்

 

காலத்தையும் இடத்தையும் கடந்து உள்ள ‘கடவுள்’, காலத்துக்கும் இடத்துக்கும் தம்மையே உட்படுத்துகிறார். ‘கடவுள் நம்மோடு’ என்று இறங்கி நெருக்கமாக நமக்கு அருகில் வருகிறார் கடவுள். இன்றைய முதல் வாசகம், ‘இம்மானுவேல்’ (‘கடவுள் நம்மோடு’) என்று கடவுள் ஆகாசுக்கு அளித்த வாக்குறுதியை நம் கண்முன் கொண்டு வருகிறது. ‘கன்னிப் பெண் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பார்’ என்று கடவுள் சொல்லக் கூடிய அந்த வேளையிலேயே அவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார்.

 

கடவுள் நமக்கு நெருக்கமாக உள்ளார் என்னும் உறுதியை இந்த நாள் நமக்குத் தருகிறது.

 

(ஆ) தற்கையளிப்பு

 

ஆண்டவராகிய இயேசு மானுடத்தின் மீட்புக்காகத் தம்மையே கையளிக்கிறார். ‘இதோ வருகிறேன்!’ என்று அவர் மானிட உரு ஏற்கிறார். அன்னை கன்னி மரியாவும் ஏறக்குறைய இதே வகையான தற்கையளிப்புடன் முன்வருகிறார். ‘எனக்கு நிகழட்டும்’ என்று சொல்வதன் வழியாக கடவுள் செயலாற்றுமாறு அனுமதிக்கிறார்.

 

இயேசு மற்றும் மரியாவின் தயார் நிலையை நாம் இங்கே காண்கிறோம். கடவுளின் திட்டம் நிறைவேற்றுவதற்கான தயார்நிலையை நாம் கொண்டிருத்தல் வேண்டும்.

 

(இ) புதிய படைப்பு

 

ஆதாம் முதல் படைப்பின் தலைமகன் ஆனார். கிறிஸ்து இரண்டாம் படைப்பின் தலைமகன் ஆகிறார். ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை!’ என்று வானதூதர் சொன்னவுடன் கடவுளின் கண்கொண்டு அனைத்தையும் பார்க்கத் தொடங்குகிறார் மரியா.

 

புதிய படைப்பு என்னும் நிலை நமக்கும் கிறிஸ்து வழியாக சாத்தியமாகிறது.

 

‘மங்கள வார்த்தை’ என்று அழைக்கப்படுகிற இப்பெருவிழா நிகழ்வின் பின்புலத்தில், நாம் பேசுகிற சொற்களை நினைத்துப் பார்ப்போம். செயல்களாக மாறுகிற சொற்களை மட்டுமே பேசுவோம். நம் சொற்கள் வாழ்த்துச் சொற்களாக அமையட்டும். கன்னி மரியாவை புதிய பணிக்கு கடவுள் அழைத்ததுபோல நம்மையும் அழைக்கிறார். அந்த அழைப்புக்கு ஏற்ற பதிலை நாம் வழங்குவோம்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: