இன்றைய இறைமொழி
ஞாயிறு, 26 ஜனவரி ’25
பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு
இறைவார்த்தை ஞாயிறு
நெகேமியா 8:2-4அ, 5-6, 8-10. திருப்பாடல் 19. 1 கொரிந்தியர் 12:12-30. லூக்கா 1:1-4, 4:14-21
உம் வார்த்தையே எம் எதிர்நோக்கு!
ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிற்றை ‘இறைவார்த்தை ஞாயிறு’ எனக் கொண்டாட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் 2019-ஆம் ஆண்டு அறிவித்தார். அந்த வரிசையில் இன்று ‘6-ஆவது இறைவார்த்தை ஞாயிற்றை’ நாம் கொண்டாடுகிறோம். யூபிலி 2025 எதிர்நோக்கின் திருப்பயணிகள் கொண்டாட்டங்களின் பின்புலத்தில், ‘உம் வார்த்தையே எம் எதிர்நோக்கு’ (காண். திபா 119:74) என்னும் மையக்கருத்தை வழங்கியுள்ளார் திருத்தந்தை.
நம் நாட்டில் விவிலிய ஞாயிறு அல்லது இறைவார்த்தை ஞாயிறு செப்டம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது என்றாலும் இன்றைய நாளில், அகில உலகத் திருஅவையோடு இணைந்து நாம் இறைவார்த்தை ஞாயிற்றைக் கொண்டாடுவோம்.
‘உம் வார்த்தையே எம் எதிர்நோக்கு’ என்னும் மையக்கருத்தில் இன்றைய இறைவார்த்தைப் பகுதிகளைச் சிந்திப்போம்.
எதிர்நோக்கு என்பது ஓர் இறையியல் மதிப்பீடு. ஒன்று நிறைவேறும் என்பதற்கான விருப்பமே எதிர்நோக்கு. இந்த எதிர்நோக்கில் காத்திருத்தல், பொறுமை, மற்றும் அமைதி இருக்கும்.
இன்றைய முதல் வாசகம் (காண். நெகே 8:2-4,5-6,8-10) நெகேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய கி.மு. 450ல் நெகேமியா ஆளுநராக இருந்தபோதுதான் சிதைந்து கிடந்த எருசலேம் நகரையும் ஆலயத்தையும் கட்டி எழுப்புகின்றார். எருசலேம் நகரின் மதில்களைக் கட்டி முடித்த அவர், ஏழைகளின் கடன்களை செல்வந்தர்கள் மன்னிக்க வேண்டும் என்று சமூகப் புரட்சியும், ஆலயத்தின் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவும் செய்தார். இவரோடு தோள் கொடுத்து நின்றவர் மறைநூல் அறிஞரும் குருவுமான எஸ்ரா. இருவரும் இணைந்து யூதா நாட்டை குழப்பத்திலிருந்தும், சமயக் கண்டுகொள்ளாத்தன்மையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் காப்பாற்றுகின்றனர்.
எஸ்ரா தொடங்கிய மறுமலர்ச்சி ஒரு சமூக நிகழ்வாகத் தொடங்குகிறது. அனைத்து மக்களையும் தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் ஒன்றுகூட்டுகிறார் எஸ்ரா. அவர்கள் முன் திருச்சட்டத்தை வாசிக்கின்றார். ‘ஒரே ஆளென மக்கள் கூடிவந்தார்கள்’ எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். அதாவது, இவ்வளவு நாள்கள் தங்களுக்குள் மக்கள் வேறுபட்டுக் கிடந்தாலும், அவர்களின் வெறுமை மற்றும் அடிமைத்தன அனுபவம் எல்லாரையும் ஒன்றுகூட்டி, அவர்களுக்குள் இருந்த வேற்றுமைகளைக் களைகின்றது. ‘ஆண்களும், பெண்களும், புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்க சிறுவர்களும்’ என அனைவரும் இணைந்து வருகின்றனர். இந்தச் சொல்லாடல் இரண்டு முறை பயன்படுத்தப்படுகிறது. எருசலேம் ஆலயம் ஆண்களை மட்டுமே உள்ளே அனுமதித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நிறுத்தப்பட்டனர். ஆனால், தோரா என்னும் இறைவார்த்தையை கேட்க எல்லாரும் அழைக்கப்படுகின்றனர். மேலும், தோரா முன் எல்லாரும் சமம் என்னும் நிலை உருவாகிறது.
தங்கள் வாழ்வு பாபிலோனிய அடிமைத்தனத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்த மக்களுக்கு திருச்சட்ட நூலை வாசிப்பதன் வழியாக, அவர்களுடைய வாழ்க்கையின் புதிய விடியலை அவர்களுக்கு உணர்த்துகிறார் எஸ்ரா.
மக்களின் கண்ணீர்ப் பெருக்கைக் கண்ட எஸ்ரா உடனடியாக, ‘இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள். எனவே அழுது புலம்ப வேண்டாம். நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள். எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பி வையுங்கள் … ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை’ என அறிவுறுத்துகிறார்.
எஸ்ராவின் இவ்வார்த்தைகளில், (அ) ‘அழ வேண்டாம்’ என்ற கட்டளையும், (ஆ) இல்லாதவரோடு பகிருங்கள் என்ற கரிசனையும், (இ) ‘ஆண்டவரின் மகிழ்வே உங்களின் வலிமை’ என்ற வாக்குறுதியும் இருக்கிறது. ‘அழவேண்டாம்’ என்ற செய்தியானது இங்கே நான்கு முறை சொல்லப்படுகின்றது. ‘ஆண்டவரின் மகிழ்வே’ என்னும் சொல்லாடலை, ‘ஆண்டவர் தரும் மகிழ்வு’ அல்லது ‘ஆண்டவர் என்னும் மகிழ்வு’ என்று பொருள் கொள்ளலாம். இனி இறைவார்த்தையின் வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே இஸ்ரயேல் மக்களின் வலிமையாக இருக்கப்போகிறது. ஆக, இறைவனைப் பற்றிய அறியாமையில் இருந்த மக்கள் அவரின் இருத்தலைத் திருச்சட்ட நூல் வாசிப்பின் வழியாக உணர்கிறார்கள். இறைவார்த்தையே தங்கள் எதிர்நோக்கு என்பதை உணர்கிறார்கள்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:12-30), தங்களுக்குள் யார் பெரியவர்? யார் அதிகக் கொடைகள் பெற்றவர்? தங்களுள் யார் மேன்மையானவர்? என்ற பிளவுபட்டு நின்ற கொரிந்து நகரத் திருச்சபைக்கு, உடல் மற்றும் அதன் இருப்பு-இயக்கத்தை உருவமாக முன்வைத்து அனைத்து உறுப்புகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார். முதல் பிரிவில் (12:12-13), தூய ஆவியார் வழியாக ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர் ஆகிறார்கள் என்ற இறையியலை முன்வைக்கின்றார் பவுல். இரண்டாம் பிரிவு (12:14-26) மனித உடல், அதன் உறுப்புக்களின் இருப்பு, இயக்கம், இன்றியமையாமை பற்றி விளக்குகிறது. மூன்றாம் பிரிவில் (12:27-30), ‘நீங்கள் கிறிஸ்துவின் உடல். ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்’ என்று மறுபடியும் வலியுறுத்தி, திருச்சபையின் பல்வேறு பணிநிலைகளை எடுத்துரைக்கின்றார்.
திருச்சபையின் பணிநிலைகள் எல்லாம் படிநிலைகள் என்ற அறியாமையில் இருந்துகொண்டு ஒருவர் மற்றவரோடு சண்டையிட்டுக்கொண்டிருந்த மக்களை அவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை செய்து, அவர்களின் தனித்தன்மை மற்றும் ஒருங்கியக்கத்தை நினைவூட்டுகின்றார் பவுல். தங்களுக்குள் நிலவிய ஒருமையையும் ஒற்றுமையையும் அறியாதவாறு அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்க, அவர்கள் தங்களின் வேற்றுமைகளை மட்டும் முன்னிறுத்தி ஒருவர் மற்றவரைத் தாழ்த்தவும், காயப்படுத்தவும், அழிக்கவும் முயல்வது தவறு என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
‘நான்,’ ‘எனது’ வாழ்ந்த கொரிந்து நகர நம்பிக்கையாளர்கள், ‘நாம்’ என்று ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் பவுல். அவர்கள் கொண்டிருக்கிற நம்பிக்கை அவர்களுடைய வாழ்வுக்கான அடித்தளமாக மாறுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:1-4, 4:14-21) இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: (அ) லூக்காவின் நற்செய்தி முன்னுரை (1:1-4), (ஆ) இயேசுவின் பணித் தொடக்கம் (4:14-21).
லூக்கா தன் நற்செய்தி தான் ஆராய்ச்சி செய்ததன் பயனாக எழுதப்பட்டது எனவும், இதன் நோக்கம், தியோபில் அவர்கள் தான் கேட்டதை உறுதி செய்துகொள்வதற்காகவும் என்று சொல்வதன் வழியாக, ‘தெயோபில்’ அவர்களின் கிறிஸ்துவைப் பற்றிய ‘அறியாமையிலிருந்து அவரை விடுதலை செய்வதற்கும்’ என்று மொழிகிறார். நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பிரிவை இன்னும் மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) இயேசுவின் கலிலேயப் பணி (14:14-15), (ஆ) இயேசு எசாயா இறைவாக்கினர் வாசகத்தை வாசித்தல் (14:16-20), (இ) இயேசுவின் போதனை (14:21).
மாற்கு 6-இல் இயேசு நாசரேத்தில் பணி தொடங்குவதை ஒத்ததாக இருக்கிறது லூக்காவின் இந்தப் படைப்பு. மாற்கு நற்செய்தியாளருக்கும், லூக்கா நற்செய்தியாளருக்கும் இதில் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் எசாயாவின் இறைவாக்குப் பகுதியை இயேசு வாசிக்கும் நிகழ்வுதான். ‘இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்தார்’ என லூக்கா நிகழ்வைத் தொடங்குகிறார். நாசரேத்து இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில் முக்கியமான ஒரு ஊர் (காண். 1:26, 2:4, 39, 51). இயேசுவின் காலத்தில் தோரா நூல் எழுத்துவடிவத்தில் முழுமை பெற்று, தொழுகைக் கூடங்களில் வாசிக்கப்பட்டது. இறைவாக்கு நூல்கள் வாசிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லையென்றாலும், எசாயா 61 முக்கியமான பகுதியாக இருந்ததால் அது செபக்கூட வாசகத்தில் இடம் பெற்றது. எசாயா 61-இல் தான் ‘மெசியா’, அதாவது ‘அருள்பொழிவு பெற்றவர்’ என்ற வார்த்தை வருகிறது. ஒட்டுமொத்த யூத நம்பிக்கையின் அடிப்படையே மெசியாவின் வருகையே. இந்தப் பகுதியை இயேசுவே விரும்பி எடுத்தாரா, அல்லது அது விரித்து அவரிடம் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
லூக்கா 4:18-19, எசாயா 61:1 மற்றும் 58:6ன் கிரேக்க பதிப்பிலிருந்து (எழுபதின்மர் நூல்) எடுக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே எடுத்து பயன்படுத்தாமல், லூக்கா கொஞ்சம் மாற்றம் செய்கின்றார்: ‘ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது. ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கவும், (‘உள்ளம் உடைந்தோரை குணப்படுத்தவும்’ என்னும் வாக்கியத்தை விட்டுவிடுகின்றார்), சிறைப்பட்டோருக்கு விடுதலையை பறைசாற்றவும், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என அறிக்கையிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்யவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.’ மேலும், ‘கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும்…’ என்று தொடருமுன் இயேசு சுருளை சுருட்டிவிடுகிறார். இயேசு வாசித்த இந்த இறைவாக்குப் பகுதியில் மையமாக இருப்பது, ‘பார்வையற்றோர் பார்வை பெறுவர்’ என்பதுதான். இங்கே வெறும் புறக்கண் பார்வையை மற்றும் இறைவாக்கினர் குறிப்பிடவில்லை. மாறாக, ‘ஆண்டவரின் ஆவியையும், ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க வந்த அருள்பொழிவு பெற்றவரான’ இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளும் அகப்பார்வையைத்தான் குறிக்கிறது. ஆகையால்தான், சற்று நேரத்தில், ‘நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று’ என்று தன்னில் மறைநூல் வாக்கு நிறைவேறுவதாக அறிக்கையிடுகின்றார் இயேசு.
இயேசு அறிவித்த சொற்களில் தங்கள் வாழ்வின் எதிர்பார்ப்பு அனைத்தும் அவரில் நிறைவேறுவதை உணர்கிறார்கள் நாசரேத்து மக்கள்.
ஒரே ஆளாகக் கூடியிருந்த எருசலேம் மக்களுக்கு எஸ்ரா வாசித்த திருநூல் பகுதி எதிர்நோக்கைத் தருகிறது. நாசரேத்து தொழுகைக்கூடத்தில் கூடியிருந்த மக்களுக்கு இயேசு வாசித்த திருநூல் எதிர்நோக்கைத் தருகிறது.
(அ) தங்களுடைய கடந்தகாலக் கசப்புகள் முடிந்துவிட்டது என உணர்கிறார்கள் எருசலேம் மக்கள்.
(ஆ) தங்களுக்கு புதிய வாழ்வு தொடங்கப் போகிறது என்று விருப்பம் கொள்கிறார்கள் நாசரேத்து மக்கள்.
நாம் இன்று முதல் இறைவார்த்தை வாசிப்புக்கான நேரத்தை ஒதுக்குவோம். வாசிப்பதோடல்லாமல் அதைக் கற்றறியவும் ஒருவர் மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் முயற்சி செய்வோம்.
‘ஆண்டவரே, என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்!’ என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (திபா 19). ஆண்டவரின் சொற்களைக் கேட்கும் நாம் அவரின் சொற்களுக்கு ஏற்றவாறு நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: