• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

உயர்த்தப்படுதல். இன்றைய இறைமொழி. செவ்வாய், 8 ஏப்ரல் ’25.

Tuesday, April 8, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Lenten Season Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
செவ்வாய், 8 ஏப்ரல் ’25
தவக்காலம் ஐந்தாம் வாரம் – செவ்வாய்
எண்ணிக்கை 21:4-9. யோவான் 8:21-30

 

உயர்த்தப்படுதல்

 

திருப்பாடுகளின் புனித வாரம் நெருங்கி வருகிற வேளையில், இயேசுவின் பாடுகளோடு தொடர்புடைய சொல்லாடல்கள் மற்றும் சொல்லோவியங்களைப் பற்றிய சிந்தனையை இந்த வார வாசகங்கள் தூண்டுகின்றன. முதன்மையான அடையாளம் அல்லது சொல்லோவியம் ‘சிலுவை.’

 

பழைய ஏற்பாட்டில் (முதல் வாசகம்), மோசே பாலைநிலத்தில் நிறுத்தி வைத்த வெண்கலப் பாம்பு இயேசுவுடைய சிலுவையின் முன்னடையாளமாகத் திகழ்கிறது. நற்செய்தி வாசகத்தில், ‘உயர்த்தப்படுதல்’ என்னும் சொல்லாடலின் வழியாக தம் சிலுவை இறப்பை முன்மொழிகிறார் இயேசு.

 

மேலும், இயேசு பரிசேயர்களை நோக்கி, ‘நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்!’ என்கிறார். யோவான் நற்செய்தியில், ‘பாவம்’ என்பது ‘தந்தையின் ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத நிலையே.’ இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘இருக்கிறவர் நானே!’ என்கிறார். இந்தப் பெயரைக் கொண்டே ஆண்டவராகிய கடவுள், தம்மை மோசேக்கு வெளிப்படுத்துகிறார். இது பரிசேயர்களுக்கு மிகப் பெரிய இடறலாக இருந்திருக்கும். ஏனெனில், ‘கடவுள்’ என்ற பெயரை வீணாக உச்சரிப்பதையே தடை செய்கின்ற அவர்கள், ஒருவர் அதே பெயரைத் தம் பெயராக அல்லது தாமாக அறிவிப்பது ஏற்புடையதாக இருந்திருக்காது.

 

தொடர்ந்து இயேசு, தமக்கும் தம் தந்தைக்கும் உள்ள உறவை முன்வைக்கின்றார். இதுவும் அவர்களுக்குப் புதிய புரிதலாக இருந்திருக்கும். ஏனெனில், கடவுளை தந்தை என அழைத்திராத அவர்கள், கடவுளைத் தம் தந்தை என உரிமை கொண்டாடுபவரை ஏற்றுக்கொள்ளக் கண்டிப்பாகத் தயக்கம் காட்டுவார்கள். இங்கே இயேசு தம் தந்தையின் உடனிருப்பைத் தன் பெரிய பலமாக முன்வைக்கின்றார்.

 

இன்றைய முதல் வாசகத்தையும், நற்செய்தி வாசகத்தையும் இணைக்கின்ற ஒற்றைச் சொல், ‘உயர்த்தப்படுதல்.’ முதல் வாசகத்தில், பாலைவனத்தில் மோசே வெண்கலப் பாம்பை உயர்த்தும் நிகழ்வை வாசிக்கின்றோம். உயர்த்தப்பட்ட பாம்பைக் கண்ட அனைவரும் நலம் பெறுகின்றனர். நற்செய்தி வாசகத்தில், உயர்த்தப்படுதல் என்பது ‘அறிதல் நிலைக்கான தொடக்கம்’ என்கிறார் இயேசு.

 

உயர்த்தப்படுதல்‘ என்பது யோவான் நற்செய்தியில் மூன்று விளைவுகளை ஏற்படுத்துகின்றது: (அ) நலம் பெறுதல் (காண். யோவா 3). (ஆ) கடவுளை அறிதல் (காண். யோவா 8). (இ) தந்தையோடு இணைதல் (காண். யோவா 12). உயர்த்தப்படுதல் என்பது இங்கே இரண்டு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது: ஒன்று, இயேசு சிலுவையில் அறையப்படுதல். இரண்டு, இயேசு உயிர்த்து விண்ணேற்றம் அடைதல்.

 

‘பாம்பைக் கண்டவர்’ முதல் வாசகத்தில் ‘இறக்கவில்லை.’
 

'உயர்த்தப்பட்ட இயேசுவைக் கண்டவர்’ நற்செய்தி வாசகத்தில் ‘இறப்பதில்லை.’

 

மேலும், யோவான் நற்செய்தியில் ‘காணுதல்’ என்பது ‘நம்புதலை’ குறிக்கிறது (காண். யோவா 22).

 

இயேசு ஒரு தளத்தில் நின்று பேசுகிறார். கேட்பவர்கள் இன்னொரு தளத்தில் அவரைப் புரிந்துகொள்கிறார்கள்.

இன்னும் சிறிது காலத்தில் என்னைக் காணமாட்டீர்கள்’ என்று அவர் தன் உயர்த்தப்படுதலை மனத்தில் வைத்துச் சொல்ல, அவர்களோ, ‘அவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறாரோ?’ என்கின்றனர்.

 

கீழிருந்து வந்தவர்கள் தாழ்வாகவே யோசிக்க, மேலிருந்த வந்த இயேசு அவர்களை உயர்த்த முயற்சி செய்கின்றார்.

 

இன்று நாம் அவரைப் போல மேலிருந்த நிலையில் சிந்திக்கவும் செயல்படவும் முயற்சி செய்தால் நலம்.

 

இயேசுவின் ஆழ்ந்த அப்பா அனுபவத்தையும் இங்கே காண்கின்றோம்: ‘நானாக எதையும் செய்வதில்லை … என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்.’ இந்த வார்த்தைகள் இயேசுவை இறைமகன் என்று நமக்குக் காட்டுவதோடு, தந்தைக்கும் மகனுக்கும் இருந்த ஆழமான உறவையும் காட்டுகின்றது. இயேசு எந்நிலையிலும் தன் தந்தைக்கு எதிராகச் செயல்படவே இல்லை. அவருக்கு உகந்ததை மட்டுமே நிறைவேற்றக் கூடியவராக இருக்கிறார்.

 

இன்று நம் முன்பாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவைக் காணும்போதெல்லாம், நம் பதிலிறுப்பு என்ன? அவரைப் பார்க்கும் நாம் நலம் பெறுகின்றோமா? அவருக்கு உகந்தவற்றையே நாம் செய்ய முற்படுகின்றோமா?

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: