• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

உயிர்முதல் ஒன்றே!. இன்றைய இறைமொழி. ஞாயிறு, 6 அக்டோபர் 2024.

Sunday, October 6, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 6 அக்டோபர் 2024
பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு
தொடக்கநூல் 2:18-24. எபிரேயர் 2:9-11. மாற்கு 10:2-16

 

உயிர்முதல் ஒன்றே!

 

‘தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர், சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை’ என்னும் இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியை நம் சிந்தனையின் தொடக்கமாக எடுத்துக்கொள்வோம். இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு வானுலகிலிருந்து வந்தவர் என்றாலும், வானதூதர்களை விட மேலான மகன் என்றாலும், அவர் மனுக்குலத்தோடு தன்னையே ஒன்றிணைத்து, அவர்களைச் சகோதரர், சகோதரிகள் என அழைக்கின்றார் என முன்வைக்கின்றார். தூய்மையாக்குகிற இயேசுவும், தூய்மையாக்கப்படும் நாமும் ஒரே உயிர்முதலைக் கொண்டிருக்கின்றோம். அந்த ஒரே உயிர்முதல் கடவுள்தாம் என்று இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்கள் குறிப்பிடுகின்றன. நம் உயிர்முதல் ஒன்றே என்ற முதிர்ச்சியும் அறிவும் நமக்கு வந்துவிட்டால், நம் உறவு வாழ்வு – குடும்பம், பங்கு, சமூகம், திருச்சபை – ஒற்றுமையும், அமைதியும், சமத்துவமும் கொண்டதாக அமையும்.

 

இன்றைய முதல் வாசகம் (தொநூ 2:18-24), இரண்டாம் படைப்புக் கதையாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தொடக்கநூலில் இரண்டு படைப்புக் கதையாடல்கள் இருக்கின்றன. முதல் கதையாடலின்படி மனிதர்களைக் கடவுள் ஆணும் பெண்ணுமாகப் படைக்கின்றார். இரண்டாம் கதையாடல்படி, முதலில் ஆணையும் இரண்டாவதாக பெண்ணையும் படைக்கின்றார். முதல் கதையாடல்படி, ஆணும் பெண்ணும் கடவுளிடமிருந்து வந்த சொல்லால், கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்படுகின்றனர். இரண்டாம் கதையாடல்படி, ஆணைக் களிமண்ணிலிருந்தும், பெண்ணை ஆணின் விலா எலும்பிலிருந்தும் ‘செய்கின்றார்’ கடவுள். மென்மையான களிமண் வன்மையான ஆணாகவும், வன்மையான விலா எலும்பு மென்மையான பெண்ணாகவும் மாறுகின்றது. ஆணில் இருக்கும் பெண்மையையும், பெண்ணில் இருக்கும் ஆண்மையையும் இதைவிட வேறு எதுவும் அழகாகச் சொல்லிவிட முடியாது.

 

முதல் படைப்புக் கதையாடலில், ‘அனைத்தையும் நல்லதெனக் காண்கின்ற கடவுள்,’ இரண்டாம் கதையாடலில் ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று’ என்று சொல்லி, மனிதனின் தனிமையை நல்லதல்ல எனக் காண்கின்றார். இங்கே ‘தனிமை’ என்பது ஓர் உணர்வு அல்ல. மாறாக, இருத்தல். எடுத்துக்காட்டாக, ‘ஃபோன் தனியாக, சார்ஜர் தனியாக என்று நான் இரண்டையும் இரு பைகளில் வைத்தேன்’ என்னும் வாக்கியத்தில், ‘தனியாக’ என்பது ‘தனிமை’ என்ற உணர்வைக் குறிப்பதில்லை. மாறாக, ஒற்றையாய் இருக்கின்ற என்ற இருத்தல் பொருளில்தான் உள்ளது. அதுபோலத்தான் ஆதாம் ‘தனியாக’ (அதாவது, பிரிக்கப்பட்டவராக, ஒற்றையாக) இருக்கிறார். ஏனெனில், ‘பத்’ என்ற எபிரேய வார்த்தை அப்படித்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, ‘துணை’ என்பதற்கு ‘ஏசேர்’ (உதவியாளர்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘துணை’ என்பதும், ‘இணை’ என்பதும் சரியான பொருள் அன்று. ‘தனக்குத் தகுந்த துணையை மனிதன் காணவில்லை’ என்ற வாக்கியத்திலும் ‘உதவியாளர்’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை வைத்து நாம் மேல்-கீழ் என்று, ஆண்-பெண்ணை வரையறுக்கவோ, படிநிலை வேற்றுமையை ஏற்படுத்தவோ தேவையில்லை.

 

மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்கின்றார் ஆண்டவர். ‘அவன் உறங்கினான்’ என்ற பொருளைத் தரக்கூடி சொல் ‘யஷான்’ என்பது. ‘யஷான்’ என்ற வினைச்சொல்லுக்கு இறந்து போதல் என்ற பொருளும், உயிரை உருவாக்கக் கூடிய நீண்ட தூக்கம் என்ற பொருளும் உண்டு. உறங்கும்போது மனிதனுடைய விலா எலும்பு ஒன்றை எடுத்துக் கடவுள் அதைப் பெண்ணாக மாற்றுகின்றார். கடவுள் விலா எலும்பை எடுத்து அதைப் பெண்ணாக மாற்றியது வாசகராகிய நமக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியுமன்றி, உறங்கிக்கொண்டிருக்கும் ஆணுக்கும், புதிதாக உருவாக்கப்பட்ட பெண்ணுக்கும் தெரியாது. ஆழ்ந்த உறக்கம் தெளிந்து எழுகின்ற ஆதாம், தன் கண்முன்பாக தன்னைப் போலவே ஒன்று இருந்ததால், ‘பெண்’ என்று அழைக்கிறார். ஆனால், ‘ஆணிலிருந்து எடுக்கப்பட்டவள்’ என்ற சொல், தன் எலும்பையும் சதையையும் பெற்றிருந்ததால்தான் என்பதை ஆதாம் எப்படி உணர்ந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. தொடர்ந்து, ‘மனிதன் தன் தாய் தந்தையை விட்டு … இருவரும் ஒரே உடலாக இருப்பர்’ என்று எழுதுகிறார் ஆசிரியர். திருமணம் என்ற ஒன்ற தொடங்கப்பட்ட காலத்தில் இவ்வாக்கியம் இங்கே நுழைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், இந்நிகழ்வில் ஆதாம் தாய்-தந்தை அற்றவராகத்தான் இருக்கிறார்.

 

இந்த நிகழ்வில் மூன்று விடயங்கள் அடங்கியுள்ளன: (அ) ஆணின் தொடக்கமும் பெண்ணின் தொடக்கமும் களிமண் மற்றும் விலா எலும்பு என இருந்தாலும், இருவருக்கும் உயிர்தருபவர் கடவுளே. ஆக, அவரே இருவரின் உயிர்முதல். (ஆ) ஆணும் பெண்ணும் ஒரே சதை மற்றும் ஒரே உடல் கொண்டிருப்பதால் ஒருவர் மற்றவரை நிரப்பி, ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடியும். (இ) பெண் உருவாக்கப்படுமுன் ஆணுக்குத் துணையாக இருந்தவர் கடவுள். பெண் உருவாக்கப்பட்ட பின்னர் ஆண் உறங்கிக்கொண்டிருந்தபோது பெண்ணுக்குத் துணையாக இருந்தவர் கடவுள். ஆக, நம் தனிமை போக்குபவர் கடவுள் மட்டுமே. ஆகையால்தான், திருமணம் அல்லது காதல் அல்லது நட்பு உறவில் இருவர் மிக நெருக்கமாக இருந்தாலும், மற்றவரால் நிரப்ப முடியாத தனிமை அங்கே ஒளிந்துகொண்டே இருக்கிறது. அத்தனிமையைப் போக்க நம் உயிர்முதலாகிய இறைவனால்தான் முடியும்.

 

ஆக, ஆண் மற்றும் பெண்ணின் உயிர்முதல் இறைவன் என மொழிகிறது முதல் வாசகம்.

 

இரண்டாம் வாசகம் (எபி 2:9-11) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கின்ற ஆசிரியர், முதலில் இயேசுவின் தொடக்கம் பற்றி எழுதுகின்றார். இயேசு, மகன் என்ற முறையில் வானதூதர்களை விட உயர்ந்தவராகவும், மனிதர் என்ற முறையில் வானதூதர்களைவிடச் சற்றே தாழ்ந்தவராகவும் இருக்கின்றார். இந்தத் தாழ்நிலையும், தாழ்நிலையின் விளைவால் வந்த இறப்பும் ‘கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும்’ நடந்தது என்கிறார் ஆசிரியர். மேலும், அனைத்தையும் தமக்கெனப் படைத்த கடவுள் குறைவுற்ற அனைத்தையும் தன் மகனுடைய துன்பங்கள் வழியாக நிறைவுசெய்கின்றார். மனிதர்கள் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்னும் பொதுநிலையில் இயேசு அனைவரையும், ‘சகோதரர் சகோதரிகள்’ என அழைக்கின்றார்.

 

ஆக, மனிதர் என்ற அடிப்படையில் இயேசுவின் உயிர்முதலும் நம் உயிர்முதலும் இறைவனாக இருக்கின்றார். இயேசுவின் தாழ்நிலையும் அவருடைய மாட்சியும் சந்திக்கும் ஒரே புள்ளி உயிர்முதலே.

 

நற்செய்தி வாசகத்தை (காண். மாற் 10:2-16) இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்: (அ) மணவிலக்கு பற்றிய இயேசுவின் போதனை (10:2-12), (ஆ) இயேசு சிறுபிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல் (10:13-16). இயேசுவின் காலத்தில் வழக்கத்திலிருந்து மணமுறிவு பற்றிய போதனை அல்லது விதிமுறை ஆண்களைக் காப்பாற்றுவதாகவும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் இருந்தது. ஆனால், இயேசுவின் போதனை முதல் மற்றும் இரண்டாம் படைப்புக் கதையாடல்களின் பின்புலத்தில் அமைகிறது. இயேசு இரண்டு படைப்புக் கதையாடல்களையும் ஒன்றாக்குகின்றார். மேலும், மனிதர்கள் இணைதல் என்பது படைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், மனிதர்கள் பிரியும்போது அது படைப்புத் திட்டத்தில் குறையை ஏற்படுத்துகிறது என்றும், படைத்தவரின் நோக்கத்திற்கு எதிராகச் செல்கிறது என்றும் எச்சரிக்கின்றார். மேலும், மணமுறிவு விபசாரத்திற்கு வழிவகுக்கிறது என்பதும் இயேசுவின் போதனை. விபசாரத்திலும் இருவர் ஒரே உடலாக மாறுகின்றனர். ஆனால், அங்கே கணவர் தன் மனைவியின் இடத்தில் இன்னொரு உடலைத் தழுவிக்கொள்கின்றார். மேலும் அந்த உறவு தற்காலிகமானது. அந்த உறவு வெறும் உடல் சார்ந்தது. அங்கே இருவரும் தங்களின் உயிர்முதல் இறைவனே என்று அறிந்துகொள்வதில்லை. உடலில் தொடங்கும் உறவு, உடலிலேயே தொடர்ந்து, உடலிலேயே முடிந்துவிடுகிறது. தொடர்ந்து, இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வையும் மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். இதனால், திருமணத்தின் நிறைவு குழந்தைப்பேறு என்பது தெளிவாகிறது. ஏனெனில், ‘குழந்தைப் பேறு’ என்பது விபசாரத்தின் நோக்கம் அல்ல. அது திருமண உறவின் நோக்கம் மட்டுமே. மேலும், ஆணும் பெண்ணும் இணையும் திருமண உறவில், அவர்கள் தாங்கள் பெற்றிருக்கின்ற உயிர்முதலாகிய இறைவனைத் தங்கள் உறவின் கனியாகப் பிறக்கும் குழந்தைக்கு வழங்குகின்றனர்.

 

ஆக, ஆணும் பெண்ணும் திருமண உறவில் இறைவனால் இணைத்துவைக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரில் விளங்குவதே ஒரே உடலே. ஏனெனில், இவர்களின் உயிர்முதல் ஒன்றே.

 

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு முன்வைக்கும் பாடங்கள் எவை?

 

(அ) உயிர்முதல் இறைவனே

 

நம் உயிர்முதல் ஒன்றாகவும், அந்த ஒன்று இறைவனாகவும் இருப்பதால் நாம், ஆண்-பெண், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்று எந்த வேறுபாடும் பார்க்கத் தேவையில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிறது உலகப் பொதுமறை. எல்லா உயிர்களும் பிறப்பில் ஒன்றே. ஏனெனில், அனைத்து உயிர்களும் ஒரே உயிர்முதலாகிய இறைவனிடமிருந்தே தோன்றுகின்றன. வேற்றுமை அல்லது பாகுபாடு பாராட்டும் எண்ணம் நம் உள்ளத்தில்தான் தோன்றுகிறது. எனக்கு வெளியே இருக்கும் என் மனைவி அல்லது ஒரு பெண் என்னைவிடத் தாழ்ந்தவர் என நினைப்பதும், நான் பிறந்த சாதி எனக்கு அடுத்திருப்பவரின் சாதியை விட உயர்ந்தது என்று நினைப்பதும் நம் மனத்தில் தோன்றுகிற எண்ணங்களே தவிர, அப்படி ஒரு வேறுபாடு வெளியில் காணக்கூடிய விதத்தில் ஒருபோதும் இல்லை. அனைவருடைய உயிர்முதலும் ஒன்றே என்ற மனநிலை நம் அனைவருக்கும் பொதுவான பண்பைப் பார்ப்பதற்கு நம் கண்களைத் திறக்கும். மேலும், நம் உயிர்முதல் இறைவனே என்று உணரும் வேளையில் நாம் நம் அனைத்துப் பிணைப்புகளிலிருந்தும் விடுதலை பெற முடியும். நம் எண்ணங்கள் சுதந்திரமாக வெளிப்படும். நம் மனதில் பதைபதைப்பு குறையும். ஆழ்ந்த அமைதி குடிகொள்ளும்.

 

(ஆ) தாழ்ந்து போதல்

 

இயேசு தான் கடவுளாக இருந்தாலும், மனிதர் என்ற நிலைக்குத் தன்னையே தாழ்த்துகிறார். ஏனெனில், தாழ்ந்த அந்த நிலையில்தான் மனிதர்களோடு அவர் தன்னை இணைத்துக்கொள்ள முடியும். மனித மீட்பு பெரிய நோக்கமாக இருந்ததால், அவர் மனிதர்களுக்காகத் தாழ்ந்து போகின்றார். ஆக, நானும் அடுத்தவரும் சமம் என்ற நிலை முதலில் வந்தவுடன், அடுத்தவருக்காக நான் தாழ்ந்துபோகத் தயாராக இருக்க வேண்டும். அந்த நிலையில் நான் செயல்படக் காரணம், உயிர்முதல் ஒன்றே என்பதை நான் மதிப்பதுதான். ஒரே சாலையில் இரு வாகனங்கள் எதிரெதிரே வருகின்றன என வைத்துக்கொள்வோம். இரு வாகனங்களும் சமமானவைதாம். இருவருக்கும் சாலையில் சமமான உரிமை உண்டுதான். ஆனால், தங்கள் சமநிலையை மட்டுமே அவர்கள் உறுதி செய்ய முனைந்தால் இருவரும் அதே இடத்தில்தான் இருப்பர். அல்லது இருவரும் ஒருவர் மற்றவருடைய வாகனங்களைக் காயப்படுத்திக்கொள்வர். மாறாக, ஒருவர் மற்றவருக்காகக் தாழ்ந்து போனால், தன் வாகனத்தைச் சற்றே இறக்கினால் இருவரும் இனிமையாகக் கடந்துபோக முடியும். இயேசுவின் தாழ்ச்சி மனிதர்களாகிய நம்மையும் கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது.

 

(இ) உறவைக் கொண்டாடுவோம்

 

ஒரே பாலினத் திருமணம், திருமணம் தவிர்த்த குழந்தைப்பேறு, தனக்குத்தானே திருமணம், தனிப்பெற்றோர், இணைந்து வாழ்தல், ஒப்பந்த திருமணம் என இன்று திருமணம் பல பரிமாணங்களை எடுத்துவிட்டது. மேலும், திருமணத்திற்கு புறம்பான உறவு ‘பிரமாணிக்கமின்மையாக’ பார்க்கப்பட்ட நிலை மாறி, ‘தனிநபர் விருப்பநிலை’ அல்லது ‘தனியுரிமை’ என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. மேலும், குழந்தைகள் இன்று தேவையற்ற ஒன்றாகக் கருதப்படுகிறார்கள். ஒரே உடலாக மட்டும் வாழ்ந்துவிடவும், அல்லது இரு உயிர்களாக மட்டும் வாழ்ந்துவிடவும் நாம் நினைக்கின்றோம். நாம் இவற்றில் எதை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் ஒன்று மட்டும் உண்மை. நம் அனைவருடைய வேர்களும் நம் குடும்பங்களில்தான் பதிந்திருக்கின்றன. குடும்பத்தின் வழியாகவே நாம் இறைவனின் உயிரிலும் பங்கேற்கின்றோம். குடும்ப உறவுகளைத் தொடர்ந்து வருகின்ற திருமண உறவும் கொண்டாடப்பட வேண்டும். இன்று ஊடகங்களில் வரும் செய்திகளும், நிகழ்ச்சிகளும், மெகாத் தொடர்களும், ‘மனிதர்கள் இணைந்து வாழ்தல் சாத்தியமில்லை’ என்ற பொய்யை உரக்கச் சொல்கின்றன. பிறழ்வுபட்ட குடும்பங்களை மட்டும் முன்வைத்து நம்மைப் பயமுறுத்துகின்றன. தாழ்ச்சியிலும், விட்டுக்கொடுத்தலிலும், உடனிருப்பிலும் சிறந்து விளங்கும் குடும்பங்கள் பற்றி அவை பேசுவதில்லை. ஆக, நம் குடும்ப உறவை நம் அனுமதி இல்லாமல் – கணவன் மனைவியின் அனுமதி இல்லாமல் – வேறு எவரும் உடைத்துவிட முடியாது. இந்தப் புரிதல் வந்துவிட்டால் மணமுறிவு குறைந்துவிடும். அதே வேளையில், மணமுறிவு பெற்ற இணையர்களையும் எண்ணிப் பார்ப்போம். அவர்களை நாம் தீர்ப்பிட வேண்டாம். தங்கள் இணையர்களைத் தங்களால் ஏதோ ஒரு வகையில் அவர்களால் நிறைவுசெய்ய முடியவில்லை. அவ்வளவுதான்! அதே வேளையில் அவர்களுடைய இயலாமை மற்றும் கையறுநிலையை மற்றவர் தன் தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்தலும் தவறு என்பதை நாம் அறிய வேண்டும். நம் உயிர்முதல் ஒன்று என்றும், அந்த ஒன்று இறைவன் என்றும் உணர்ந்தால் நாம் உடல்சார் இன்பத்திலிருந்து விடுதலை பெற முடியும்.

 

இன்றைய திருப்பாடல் ஆசிரியர் (திபா 128), ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் பெறும் ஆசிகளாக, ‘இல்லத்தில் கனிதரும் மனைவி,’ ‘ஒலிவக் கன்றுகளாகப் பிள்ளைகள்,’ ‘உழைப்பின் பயன்,’ ‘நற்பேறு,’ ‘நலம்’ என்னும் ஐந்து ஆசிகளை முன்வைக்கின்றார்.

 

‘ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவராக!’ என்று நாமும் ஒருவர் மற்றவரை வாழ்த்துவோம். ஏனெனில், நம் அனைவருடைய உயிர்முதலும் ஒன்றே! அந்த உயிர்முதல் கடவுளே!

 

நிற்க.

 

நினைவூட்டல்: அக்டோபர் மாதம் 7-ஆம் நாளை அமைதிக்கான நோன்பு-இறைவேண்டல் நாள் என அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். வன்முறை, போர் என்று நாளுக்குநாள் அமைதியை இழக்கும் மக்கள் மீண்டும் அமைதியைக் கண்டுகொள்ளவும், தனிநபர் உள்ளத்தில் அமைதியை நாம் தக்கவைத்துக்கொள்ளவும் இந்நாளில் மன்றாடுவோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: