இன்றைய இறைமொழி
புதன், 22 ஜனவரி ’25
பொதுக்காலம் இரண்டாம் வாரம் – புதன்
எபிரேயர் 7:1-3, 15-17. திருப்பாடல் 110. மாற்கு 3:1-6
உள்ளம் சூம்பியவர்கள்!
கை சூம்பிய ஒருவருக்கு ஓய்வுநாளில் நலம் தருகிறார் இயேசு. ஓய்வுநாளில் இயேசு செயலாற்றுவதை – வல்ல செயல் ஆற்றுவதை – பரிசேயர்கள் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். இயேசுவின் ஆற்றலும் விருப்பமும் அவர்களுடைய உள்ளத்தைக் கடினமாக்குகிறது. ஏனெனில், இப்படிச் செயலாற்றுவதற்கு அவர்களிடம் ஆற்றலும் இல்லை, விருப்பமும் இல்லை.
தங்கள் நடுவே கை சூம்பி நிற்கிற ஒருவர் நலம் பெற்றார் என்ற மகிழ்ச்சி அவர்களிடம் இல்லை. தங்கள் நடுவே வல்ல செயல் ஆற்றக்கூடிய இயேசுவைப் பாராட்டும் பக்குவமும் இல்லை.
வழக்கமாக, விமர்சனம் எங்கிருந்து வருகிறது? குறைவாகச் செய்கிற ஒருவரே தன்னைவிட அதிகம் செய்கிறவரைக் கேள்விக்கு உட்படுத்துகிறார். அதிகமாகச் செய்கிறவர் அடுத்தவரைப் பாராட்டிவிட்டு அப்படியே வழி நகர்கிறார்.
மற்றவர்கள் நன்மை செய்வதை நாம் எப்படிப் பார்க்கிறோம்?
மற்றவர்களுக்கு நன்மை செய்யப்படுவதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம்?
‘சட்டத்தைக் காப்பதா? வேண்டாமா?’ என்று கேள்வி கேட்டிருந்தால், ஒருவேளை பரிசேயர்கள் விடையளித்திருப்பார்கள்.
‘நன்மை செய்வதா? தீமை செய்வதா?’ என்ற கேள்விக்கு அவர்களால் விடையளிக்கவில்லை. நன்மை, தீமையைச் சட்டம் தீர்மானிப்பதில்லை. தனிநபருடைய விருப்பமும், சூழலும் தீர்மானிக்கிறது என்பதை அவர்களே அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
பரிசேயர்களைப் பொருத்தவரையில் அவர்கள் செய்தது சரியே.
நலம் பெற்ற அந்த நபருடைய பார்வையில் கண்டால், அவரைப் பொருத்தவரையில் சட்டத்தால் பயனொன்றும் இல்லை. இயேசுவின் இரக்கப் பெருக்கால் மட்டுமே பயன் இருந்தது.
சட்டங்களாலும் விதிமுறைகளாலும் நம் உள்ளம் கடினப்படாதவாறு காத்துக்கொள்வது நலம்.
இயேசுவின் தலைமைக்குருத்துவம் பற்றிய வர்ணனையைத் தொடங்குகிற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர், லேவி குலம் அல்லது ஆரோனை மையப்படுத்தாமல், மெல்கிசதேக்கை மையப்படுத்தித் தொடங்குகிறார். இயேசுவின் தலைமைக்குருத்துவம் சட்டத்தை மையப்படுத்தியதாக இல்லை, மாறாக, இரக்கத்தை மையப்படுத்தியதாக இருக்கிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: